அறப்பளீஸ்வர சதகம்: யார் மருத்துவன்..?

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

மருத்துவன்

தாதுப் பரீட்சைவரு காலதே சத்தோடு
சரீரலட் சணம்அ றிந்து,
தன்வந்த்ரி கும்பமுனி தேரர்கொங் கணர்சித்தர்
தமதுவா கடம்அ றிந்து
பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரைப்
பிரயோக மோடு பஸ்மம்
பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்
பேர்பெறுங் குணவா கடம்
சோதித்து, மூலிகா விதநிகண் டுங்கண்டு
தூயதை லம்லே கியம்
சொல்பக்கு வம்கண்டு வருரோக நிண்ணயம்
தோற்றியே அமிர்த கரனாய்,
ஆதிப் பெருங்கேள்வி யுடையன் ஆயுர்வேதன்
ஆகும்; எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

( எம்முடைய, அருமை தேவனே!, நாடித்
தேர்வையும் காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,
தன்வந்திரியும் அகத்தியரும் கொங்கணரும் சித்தர்களும் எழுதிய மருத்துவ நூலைக் கற்றுணர்ந்து, பலவகைப்பட்ட பெருமைமிக்க குளிகைகளையும் (மருந்துச் சரக்குகளைத்) தூய்மை செய்யும் முறைகளையும்
மாத்திரைகளையும் பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று, மண்டூரம் செந்தூரம் இவற்றின் இயல்புகளைப் புகழ்பெற்ற பண்புடைய
மருத்துவ நூலின் வாயிலாகத் தேர்ந்து, பல வேர்வகைகளின் நிகண்டையும் அறிந்து, தூய எண்ணெயும் இலேகியமும் செய்யும் முறையைச் சொல்லியவாறு அறிந்து, நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து, கைநலம்உடையவனாய், முற்காலத்திலிருந்து வழிவழியாக வரும் கேள்வியறிவையும் உடையவனே,
-மருத்துவன் ஆவான்.

இங்குக் கூறப்படும் மருத்துவன் இயல்பு பொதுவானது, நம்நாட்டு மருத்துவங்கள் ஆயுர்வேதம், சித்தம்என இருவகைப்படும். ‘தேரர் கொங்கணச் சித்தர் தமது வாகடம்அறிந்து, என்பதனாற் பொதுவென
உணரலாம். வாகடம், மருத்துவநூல் – வளி பித்தம் ஐ (வாத பித்த
சிலேத்துமம்) என்னும் மூன்றுநரம்பு
களின் இயலை அறிவதுதான் தாதுப் பரீட்சை. எவருக்கும் கோடை வறளை
மாரியெனும் காலங்களில் ஒரேவகையாக உடல் நிலை யிராது. நாடுதோறும்
தட்ப வெப்ப நிலை வேறுபடுவதால் மக்களின் உடல்நிலை ஒருவகையாக
இராது. ஒரே நாட்டினும் மக்களின் உடல்நிலை வேறு வேறு வகையாக
இருக்கும். ஆகையால், ‘காலத்தேசத்தோடு சரீர லட்சணம் அறிந்து’ என்றார்.
சுத்தி செய்யாத மருந்துச் சரக்குகள் கெடுதியை விளைவிக்கும் மண்டூரம்
என்பது செங்கல்லிற் சிட்டம் பிடித்த கல்லைக்கொண்டு பிற மருந்துச்
சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் ஒருவகைப் பொடி; செந்தூரம் என்பது
இரும்பு கலந்த மருந்துப் பொடி. இவற்றைச் செய்யும் முறையை மருத்துவர்
வாயிலாக உணர்க. நிகண்டு – அகராதி போன்ற ஒரு
நூல். ஏட்டுப் படிப்பைவிடக் கேள்வியே சிறந்தது என்பதை விளக்க,
‘ஆதிப் பெருங்கேள்வி யுடையன்’ ஆக வேண்டும் என்றார். எந்நலம்
இருப்பினும் கைந்நலம் ஒன்றே மருத்துவர்க்குப் புகழ்தரும் என்பதைத்
தெரிவிக்க ‘அமிர்தகரனாய்’ என்றார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply