அறப்பளீஸ்வர சதகம்: தீவினை புரிபவன் அழிவு உறுதி!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

தீவினை செய்தோர்

வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனை
வைதுதன் தலைபோ யினோன்,
மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்
மாறாத வடுவா யினோன்,
தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலே
சம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,
தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்
தந்திவடி வாய்அ லைந்தோன்,
மாயனைச் சபையதனில் நிந்தைசெய் தொளிகொள்நவ
மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,
வருநகுட னொடுதக்கன் குருடன்
மகன், வழுதி, சிசுபா லனாம்!
ஆயும்அறி வாளரொடு தேவர்பணி தாளனே!
அவனிபுகழ் அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

ஆராய்கின்ற அறிஞரும் அமரரும் பணியுந் திருவடியை உடையவனே!,
உலகம் புகழும், அருமை தேவனே!, வாயினாற் பிறரை இகழ்ந்துபேசித் தன் சிறந்த வாழ்வைப் பறிகொடுத்தவன், சிவபிரானைப் பழித்துத் தன் தலையை இழந்தவன், பிறர் மனைவியிடம் ஆசை கொண்டு தன் மெய்யெலாம் நீங்காத வடுவைக் கொண்டவன், பங்காளிக்கு
உரிய பங்கைக் கொடாததால் (தனக்குரிய) செல்வத்தையும் போக்கிவிட்டு
மடிந்தவன், தகுதியான சான்றோரை வணங்காத செருக்கினால்
யானைவடிவாக அலைந்தவன், கண்ணனை அவையிலே
பழித்துக் கூறியதனால் கதிர்விடும் நவமணி முடியை இழந்து இறந்தவன்
(முறையே,) (இந்திர பதவிக்கு) வந்த நகுடனும், தக்கனும், இந்திரனும்; துரியோதனனும், பாண்டியனும், சிசு பாலனும்
ஆவார்.

நகுடன் நூறு பரிவேள்வி செய்து இந்திரபதவி பெற்றான். ஏழுமுனிவர் சுமக்கும் சிவிகையிலே இந்திராணியை நாடிச் செல்கையில் ‘சர்ப்ப! சர்ப்ப’ என விரைந்து செல்லும்படி பெரியோர்களை (மதியாமல்) ஏவியதால் மலைப் பாம்பாக அகத்தியராற் சபிக்கப்பெற்றான். தக்கன்
சிவனை இகழ்ந்து பேசி, அவரை நீக்கி வேள்வி செய்ததனால் வீரபத்திரரால்
தலையை இழந்து ஆட்டுத்தலை பெற்றான். இந்திரன் கௌதமர்
மனைவியான அகலிகையை விரும்பியதால் உடலெங்கும் பெண்குறியைப் பெற்றான். துரியோதனன் தன் பங்காளிகளான பாண்டவரின் உரிமையைக் கொடாததால் அவர்களாற் போரில் இறந்தான். சிசுபாலன் எப்போதும்
கண்ணனை இகழ்ந்து கூறி வந்ததனால் அவராற் சபையில் இறந்தான்.

தீயவழியிலே செல்வோர் தீமையடைவது உறுதி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply