அறப்பளீஸ்வர சதகம்: உறவின்றி உறவாவர்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

இவர் இன்ன முறையர்

தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்து
தான்முடிப் போன்த மையன்ஆம்;
தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்
தாய்தந்தை யென்னல் ஆகும்;
ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோ
துதவுவோன் இட்ட தெய்வம்;
உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்
உரைப்பவன் குருஎன் னல்ஆம்;
எந்நாளும் வரும்நன்மை தீமைதன தென்னவே
எண்ணிவரு வோன்பந் துஆம்;
இருதயம் அறிந்துதன் சொற்படி நடக்குமவன்
எவன் எனினும் அவனே சுதன்
அந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அழகிய நீரையும் (கங்கையையும்) பாம்பையும் எப்போதும் அணிந்துள்ள
பெரியோனே!, அருமை தேவனே!, தன்னாலே முற்றுவிக்க இயலாத அலுவலை வந்து முற்றுவிக்கும் ஒருவன் தனக்கு முன்பிறந்தோன் ஆவான், தனக்குத் தலைபோகத்தக்க துன்பம் உண்டானபோது அதிலிருந்து மீட்போன் அன்னையும் பிதாவும் ஆவான்,
பகைவர் செய்கின்ற தீமையால் நலிந்த காலத்தில் துணையாவோன் வழிபடும் தெய்வம் ஆவான், (தொழில் செய்யும்)
முறைமையையும் அறிவுரையையும் ஊட்டி எதிர் காலத்தில் வரும் பயனையும் மொழிபவனை ஆசிரியன் எனலாம், வரக்கூடிய நன்மை தீமைகளை எப்போதும் தனக்கு வந்தவைகளாக நினைத்துத்
(தன்னுடன் நட்புப்பூண்டு) வருவோன் உறவினன் ஆவான், மனமறிந்து தன் மொழி தவறாது நடக்கின்றவன் எவனாயினும் அவனே மகன் ஆவான்.

இயற்கையாக உள்ளவரே அன்றி இங்குக்கூறப்பட்டவர்களும் இம் முறையினர் ஆவர். அன்றி, இவ்வாறு பயன்படாதவர்கள் இம்முறைக்குத் தகாதவர் எனினும் பொருந்தும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply