திருப்புகழ் கதைகள்: முலை முகம் – திருச்செந்தூர்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 127
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முலை முகம் – திருச்செந்தூர்
திருமுருகாற்றுப்படை

நக்கீரர் ‘உலகம் உவப்ப’ என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையுங் காத்தருளியது. இச்செய்தியை

அருவரை திறந்து,வன் சங்க்ராம கற்கிமுகி
அபயம் இட, அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி

பூதவேதாள வகுப்பு பாடுகிறது.

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை
இடித்துவழி காணும்

என வேல்வகுப்பு பாடுகிறது.

ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்
உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று குறை ஆகிவிடும் அன்று நக்கீரர்வர,
ஓடிப் பிடித்து, அவரையும்
காராய குன்றத்து அடைத்து,உரிய நியதிக்
கடன் துறை முடிக்க அகலக்
கருதி முருகாறு அவர் உரைத்தருள, நீலக்
கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான குன்றம் திறந்து,இவுளி முகியைப்
பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
பிரான் முகலி நதியின் மேவச்
சீராய திருவருள் புரிந்தகரன் ஊராளி
சிறுதேர் உருட்டி அருளே,
செய செயென அமரர்தொழ, அசுரர் மிடி சிதறுமுனி
சிறுதேர் உருட்டி அருளே.

என திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழில் கூறப்படுகிறது.

திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது. இந்நூல் மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. தொடக்கக் காலத்தில் வெறியாட்டு அயரும் வேலன், கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று “முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்” (அகம்:22) பாடல்வழி அறியமுடிகிறது.

இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும். இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர். பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர், ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க, திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

nakkeerar
nakkeerar

இந்நூலை முதன்முதலில் 1834இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார்.1851ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை. டாக்டர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் 1889ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது. இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர். திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதியோ பலர். 1) நச்சினார்க்கினியர் உரை 2) பரிமேலழகர் உரை 3) உரையாசிரியர் உரை 4) கவிப்பெருமாள் உரை 5) பரிதிக் குறிப்புரை 6) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை.

திருமுருகாற்றுப்படையை எழுதிய நக்கீரரே நெடுநல்வாடை என்ற பத்துப்பாட்டு நூலையும் எழுதியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரா? நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: முலை முகம் – திருச்செந்தூர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply