தினசரி ஒரு வேத வாக்கியம்: 72. வலது கையால் சாப்பிடு!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

72. வலது கையால் சாப்பிடு!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“தஸ்மாத் தக்ஷிணேனான்ன மத்யதே!” – யஜுர்வேதம்.
“வலது கையால்தான் சாப்பிட வேண்டும்!”

எந்த வேலை செய்தாலும் வலது கையை பயன்படுத்துவது நமது பழக்கம். யோசித்துப் பார்த்தால்… இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது? இது யுகம் யுகமாக நம் வேத கலாச்சாரத்தின் வழி வந்தது. இது நமக்கு பயிற்சியாக மாறியது.

அசுர சக்திகளிடம் இருந்து காப்பதற்கு தக்ஷிண ஹஸ்தம் எனப்படும் வலதுகையை பயன்படுத்தியதாக வேதம் வர்ணிக்கிறது. அதாவது இடது கைக்கு அசுர சக்திகளை ஈர்க்கக் கூடிய வாய்ப்பு அதிகம்.

யாருக்காவது ஏதாவது தரும்போது இடது கையால் கொடுக்கக்கூடாது. இரு கைகளையும் சேர்த்து கொடுக்கும்போது தவறில்லை. அதே போல் பிறர் இடது கையால் கொடுத்தால் அதனைப் பெறுவது சரியல்ல. அது அலட்சியத்திற்கும் அவமரியாதைக்கும் அடையாளம்.

நமக்கு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர் இவ்விதமான சம்பிரதாயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவை மிக சூட்சுமமான ஆராய்ச்சியால் ஏற்படுத்தப்பட்டவை.

அண்மையில் நம் தேசத்திற்கு இறக்குமதியான ரேக்கி போன்ற கலைகளில் கூட வலது கை தெய்வீக சக்திகளுக்கு குறியீடு என்று குறிப்பிடுகிறார்கள். அதேபோல் நம் பூஜை விதிகளில் தட்சிணாசாரம், வாமாச்சாரம் என்ற வழிமுறைகள் உள்ளன. தக்ஷிணாசாரம் சாத்வீகமானது, நன்மை பயக்கக் கூடியது. தனி மனிதனுக்கும் உலகிற்கும் சுபகரமானது. இந்த ஆசாரத்தில் வலது கையை மட்டுமே உபயோகிப்பர்.

தெய்வ பூஜைகள் செய்யும்போது  புஷ்பம் போடுவது, அர்க்கியம் பாத்தியம் தூபம் தீபம் நீராஜனம் போன்றவற்றை வலது கையாலேயே சமர்ப்பிக்க வேண்டும். பூஜைக்கான திரவியங்களை நமக்கு வலது பக்கம் வைத்திருக்கவேண்டும். நெய்வேத்யம் செய்யும் பதார்த்தங்களையும் நமக்கு வலது புறமே வைக்க வேண்டும். தக்ஷிண ஹஸ்தத்தாலேயே நிவேதனம் செயவேண்டும்.

மிக ஆழமான பரிசீலனையோடு கூர்மையான கண்ணோட்டம் கொண்ட நம் பூர்வீகர்கள் கூறிய இந்த விஷயங்களை நாம் தற்போது கண்டுகொள்வதில்லை.பல இடங்களில் இடது கரத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம். இடது கையால் உணவு உண்பதையும் காண்கிறோம். இரு கரங்களாலும் உண்பது பாரதிய பழக்கம் அல்ல. அது அநாகரிகம். அசுர சக்திகளை ஆவாஹனம் செய்து கொண்டு அதோகதி ஆவதற்கான வழிமுறை. இடது கையால் உணவை பிடித்துக் கொண்டு வலது கையால் உண்பது தகாது.

நம் நித்திய பழக்க வழக்கங்களில் வேதமந்திரத்தின் அறிவுரை எந்த அளவு கலந்துள்ளது என்பதற்கு மேற்சொன்ன மந்திரத்தை ஆராய்ந்தால் புரியும். 

இந்த மரியாதைகளை நமக்கு பழக்கமாக மாற்றிய பண்டைய கலாச்சாரத்தை மறந்தால் மீண்டும் நாகரிகமற்று, சனாதன மார்க்கத்திலிருந்து தவறியவர்களாகும் ஆபத்து உள்ளது.

எனவே வரப்போகும் தலைமுறைக்கு இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பழக்கமாக மாறும்படி கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 72. வலது கையால் சாப்பிடு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply