திருப்புகழ் கதைகள்: சிவனுக்கு பிரணவத்தை உபதேசித்தது!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8d-e0ae9ae0aebfe0aeb5e0aea9.jpg" style="display: block; margin: 1em auto">

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 12
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

முக்கண் பரமனாகிய சிவனுக்கு பிரணவத்தை உபதேசித்த கதை

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர               எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும்            அடிபேணப்

“முத்திக்கு ஒருவித்தே, குருபரா, ஞானகுருவே என்று துதித்து நின்ற, முக்கண் பரமனாகிய சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளைக் கற்பித்தவரே. பிரமன், திருமால் ஆகிய இருவரும், முப்பத்து மூன்று தேவர்களும் உனது திருவடியை அடிபணிந்து நிற்பவரே” என்பது இவ்வரிகளின் பொருளாகும்.

தந்தையான ஈசனுக்கு பாடம் சொன்ன முருகன் தான் இவ்வுலகின் மிகப் பெரிய ஆசிரியர். இந்து மதத்தின் புராணங்களில் பெரும்பாலும் தந்தை – மகன் உறவு மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும். ஆனால் சிவபெருமானுக்கும்-முருகனுக்கும் இடையே இருந்த உறவு சற்று வித்தியாசமானது. அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று முருகன் சிவனுக்கு குருவாகி “சிவகுரு” என்னும் பெயர் பெற்றது.

இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டது பாவம் பிரம்மதேவர். ஏனென்றால் முருகன் பிரம்மாவை சிறைபிடித்து வைத்ததால்தான் சிவன் முருகனுக்கு சீடராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி இங்கே பார்ப்போம்.

பிரம்மதேவர் கைலாயம் வந்து சிவபெருமானை சந்தித்து விட்டு திரும்பிய போது, சிறுவனாக இருந்த முருகன் அங்கே விளையாடிக் கொண்டிருந்தார். பிரம்மா திரும்ப எத்தனித்த போது முருகன் அவரைத் தடுத்தி நிறுத்தினார். சிவபெருமானின் மகனான தனக்கு உரிய மரியாதையை பிரம்மா ஏன் தரவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

தன்னை தடுத்து நிறுத்திய பாலகனை அதிர்ச்சியாய் பார்த்தார் பிரம்மா. முருகன் பிரம்மாவிடம் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார். இதனால் மேலும் குழப்பமடைந்த பிரம்மா தன்னை படைப்பின் கடவுள் எனவும், வேதங்களின் அதிபதி எனவும் அறிமுகப் படுத்திக் கொண்டார்.

swaminatha swami
swaminatha swami

பிரமமாவின் பதிலை கேட்ட முருகன், அவருக்கு எங்கிருந்து படைக்கும் ஆற்றல் வந்தது என்று மீண்டும் கேள்வி கேட்டார். அதற்கு பிரம்மதேவர் தான் படித்த வேதங்களில் இருந்து என்று பதில் கூறினார்.

நீங்கள் உண்மையிலேயே வேதங்களில் நிபுணர் என்றால் “ஓம்” என்பதன் அர்த்தத்தை கூறிவிட்டு இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினார் முருகன். இதனால் கோபமுற்ற பிரம்மதேவர் “ஓம்” மந்திரத்தின் அர்த்தத்தை கூறிவிட்டு அங்கிருந்து நகர முயன்றார்.

பிரம்மா கூறிய பதிலில் திருப்தி அடையாத முருகன் அவரை சிறையில் அடைக்க முடிவு செய்தார். எனவே தன் நண்பர்களுடன் சேர்ந்து பிரம்மாவை சிறையில் தள்ளினார். இதனால் உலகில் பல ஆபத்துக்கள் உண்டானது. படைப்பு தொழில் முற்றிலும் நின்றதால் பூமியே உறைந்தது போல மாறிவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த தேவர்கள் பிரம்மாவை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தன் சிறிய மகன் எப்படி பிரம்மதேவரையே சிறைபிடித்தான் என்பது சிவபெருமானுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் தன் மகனிடம் இருந்து பிரம்மாவை மீட்பதாக ஈசன் வாக்களித்தார்.

சிவபெருமான் முருகனை அழைத்தார். அவரை கட்டியணைத்து கொஞ்சி தன் மடியில் அமரவைத்து பிரம்மாவை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். முருகனோ ஒரே வார்த்தையில் முடியாது என்று கூறிவிட்டார். தன் மென்மையான வழி தோல்வியடைந்ததை உணர்ந்து கோபப்பட்ட ஈசன் பிரம்மதேவரை உடனே விடுதலை செய்யும்படி முருகனுக்கு உத்தரவிட்டார்.

கோபமுற்ற தன் தந்தையை சமாதானப்படுத்தும் பொருட்டு பிரம்மாவை விடுவிக்க ஒப்புக்கொண்டார் முருகன். ஆனால் அதற்கு முன் “ஓம்” மந்திரத்தின் விளக்கத்தை கூறும்படி கேட்டார். அனைத்திற்கும் மூலமான “ஓம்” மந்திரத்தை புறக்கணிப்பது மன்னிக்க முடியாதது என்று முருகன் வாதிட்டார். இது படைப்பின் கடவுளுடைய அறியாமையை காண்பிப்பதாக கூறினார் முருகன்.

தன் மகனுடைய வாதத்தில் நியாயம் இருப்பதையும், தன் மகனுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பதை கண்டும் மகிழ்ந்தார் சிவபெருமான். மேலும் தன் மகனிடம் “ஓம்” மந்திரத்தின் அர்த்தத்தை தனக்கு விளக்கும்படி கேட்டார் சிவபெருமான்.

அதற்கு முருகன் தாங்கள் என்னிடம் மாணவன் போல நடந்து கொண்டால் கற்றுத் தருகிறேன் என்று கூறினார். மாணவனான ஈசன் சிவபெருமான் தன் மகனை தூக்கி மடியில் அமரவைத்து தன் கைகளை பவ்யமாக வைத்துக் கொண்டு தன் மகன் கூறிய பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கேட்டுக் கொண்டார்.

சில நூல்களில் முருகன் அமர்ந்திருக்க ஈசன் தலைகுனிந்து கைகளை பவ்யமாக வைத்துக் கொண்டு பாடம் கற்றதாக கூறப் பட்டுள்ளது. ஏனெனில் பாடம் கற்கும்போது மாணவர்கள் கற்பிப்பவர்களை விட கீழே இருந்தால்தான் அதன் அறிவு அவர்களின் செவிகளை சென்று அடையும் என்று பிரம்ம உபதேச நூலில் கூறப்பட்டுள்ளது. இதை,

சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா
என்று வேறு ஒரு திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுவார். இந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் தொகுத்து

… படைப்போன்
அகந்தை யுரைப்ப மறையாதி எழுத்தென்று
உகந்த ப்ரணவத்தின் உண்மை புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்கன்? என்று
குட்டிச் சிறை யிருத்தும் கோமானே! மட்ட விழும்
பொன்னங் கடுக்கைப் புரி சடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்ததோனே.

என்று குமரகுருபரர் வியந்து போற்றுகிறார். கந்தபுராணத்தின் படி முருகன் ஈசனுக்கு உபதேசித்த இடம் தான் பின்னாளில் சுவாமிமலை என்று முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக மாறியதாக கூறப்பட்டுள்ளது.

முருகன் சுவாமிநாத சுவாமியாக எழுந்தருளியுள்ள இந்த கோவிலில் சிவபெருமான் சுந்தரேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.

திருப்புகழ் கதைகள்: சிவனுக்கு பிரணவத்தை உபதேசித்தது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply