திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில்

ஆலய தரிசனம்

கேசன்! கேசி!

திருவட்டாறு தலம், திரேதாயுகத்தில் தோன்றியது என்று கூறப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உருவாவதற்கு முன்பே இக்கோயில் தோன்றியது என்ற கருத்தில் “ஆதி அனந்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு சந்தர்பத்தில் திருமாலை புறக்கணித்துவிட்டு, யாகமொன்றை நடத்தத் தீர்மானித்தார் நான்முகன். விஷ்ணு, பிரம்மாவிற்கு அறிவு புகட்ட நினைத்தார். நான்முகனின் நாவில் அமர்ந்திருந்த சரஸ்வதி, திருமாலின் எண்ணவோட்டத்தை உணர்ந்தாள்; நான்முகன் செய்த மந்திர உச்சாடனத்தைப் பிறழச் செய்தாள். அதன் விளைவு விபரீதமானது! யாகத் தீயிலிருந்து “கேசன்’ என்னும் அரக்கனும், “கேசி’ என்ற அரக்கியும் தோன்றினர்.

கேசனும், கேசியும் பிரம்மாவிடம் மரணமில்லா வரம் பெற்று மலைய பர்வதத்தில் சென்றனர்; அங்கு வாழ்ந்த “கௌடில்யன்’ என்னும் வானர அரசனை கொன்றுவிட்டு அந்த இடத்தைத் தமக்கு உரியதாக்கிக் கொண்டனர்.

கேசன் அங்கிருந்து பிரம்மாவை நோக்கி தவமிருந்து பல அரிய வரங்களையும், மரணமிலாத் தன்மையையும் அடைந்தான்.

கேசனின் தங்கையான கேசி, ஒரு முறை நாகலோகம் சென்றாள். அங்கு வந்திருந்த இந்திரனை கண்டு மயங்கினாள்; தன்னை மணந்து கொள்ளும்படி தேவர் தலைவனிடம் வற்புறுத்தினாள். அதற்கு இந்திரன் மறுத்துவிடவே, அவனை பழிவாங்கத் துடித்தாள் கேசி.

பராசக்தி அருளிய உபாயம்

இந்திரன் மேலெழுந்த வெறுப்பால், அவனை ஒழிக்குமாறு அண்ணனை வேண்டினாள் கேசி. உடனே கேசனும் தேவேந்திரன் மீது போர் தொடுத்தான். ஏழு நாட்கள் நடந்த போரில் இந்திரன் தோல்வியுற்றான்; யாரும் காணமுடியாத இடத்திற்குச் சென்று ஒளிந்து கொண்டான். கேசன், தேவலோகத்து அரம்பையர்களை சிறைபிடித்தான்; சூரிய சந்திரர்களை அவமானப்படுத்தினான். இதனால் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்றாக கூடி விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு, கருடனின் மேலேறி கேசனுடன் போரிட வந்தார்.

சாகாவரம் பெற்றிருந்த கேசனை திருமாலால் கொல்ல முடியவில்லை. அப்போது பராசக்தி பிரசன்னமாகி, “”கேசனை உங்களால் அழிக்க முடியாது. அவன் “சாகா வரம்’ பெற்றவன். வேறு உபாயத்தால் அவனை அடக்கலாம். ஆதி சேஷன், கேசனை சுற்றி வளைத்து அரண் கட்டட்டும். நீங்கள் அதன் மேல் சயனித்துவிடுங்கள். அசுரன் நிரந்தரமாய் சிறைப்படுவான்” என்றாள். திருமாலும் கேசனை வீழ்த்தி ஆதிசேஷனின் அரவணையில் அடங்குமாறு செய்து, அதன் மேல் பள்ளி கொண்டார்.

ஆதிசேஷனின் அணையில் கேசன் அடங்கிவிட்டதைக் கண்ட தங்கை கேசி, பெரும் வெள்ளத்தை பெருமாள் மீது ஏவினாள். அப்போது பெருமாள் இருந்த தலத்தை பூமி மட்டத்திலிருந்து உயரும்படி “பூமா தேவி’ அருள் செய்தாள். அதனால் ஓடி வந்த பெருவெள்ளம், கேசவன் இருந்த தலத்தை சுற்றி வந்தன. கேசி, பெருமாளின் பெருமையை உணர்ந்து பணிந்தாள். தலத்தைச் சுற்றி வந்த வெள்ளத்தின் இரு பிரிவுகளே கோதையாறாகவும், பரளியாறாகவும் ஆயின. ஸ்ரீஆதி கேசவனை வலம் வருவதால், இந்நதிகள் கங்கைக்கு இணையாகப் போற்றப்படுகின்றன.

விஷ்ணு, ஆதிசேஷனுக்குள் கேசனை அடக்கி வைத்ததை ஏற்கெனவே கண்டோம். ஆனால் அவரால் கேசனை முழுமையாக வதம் செய்ய முடியவில்லை. ஆதிசேஷனிடம் அகப்பட்டிருந்த கேசன், தனது 12 கைகளையும் வெளியே வெகு தூரத்துக்கு நீட்டி கொடுமை செய்யத் தொடங்கினான். அதைக் கட்டுப்படுத்த நினைத்த திருமால், அந்த அசுரனது 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களை வைத்தார். சிவ பக்தனான கேசனின் கைகளில் சிவ லிங்கம் வைக்கப்பட்ட பின், பரமேஸ்வரனின் கிருபையால் அவன் உலகிற்கு கொடுமைகள் செய்வதை நிறுத்திப் பணிந்து போய்விட்டான்.

இந்தப் பன்னிரு சிவலிங்கங்களும் வைக்கப்பட்ட இடங்களும் இன்று புகழ் பெற்ற சிவத் தலங்களாக உள்ளன.

மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இக்கோயில்கள் அனைத்துக்கும் ஓட்டமாகச் சென்று சிவபிரானை வழிபடுகின்றனர். இறுதியாக திருவட்டாறுக்கு வந்து கிழக்கு வாசலுக்கு எதிரே உள்ள ராம தீர்த்தத்தில் நீராடி, ஆதிகேசவனை வழிபட்டு அருள் பெற்றும் செல்கின்றனர். இத்தல வரலாறும், சிவராத்திரி தரிசன வைபவமும் அன்றிருந்த சைவ- வைணவ ஒற்றுமையை இன்றும் பறை சாற்றுகின்றன; பாருக்கு வழி காட்டுகின்றன.

px;" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2011/04/latestnews_thiruvattaru_adikesavar.jpg" alt="திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்" title="திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்" class="caption" height="350" width="500" align="left" />திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்
ஆதிகேசவனின் அழகு

இக்கோயிலின் மேற்கு நோக்கிய கருவறை, மூன்று வாசல்களைக் கொண்டது. இதில் தெற்கு வடக்காக, பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார் ஆதி கேசவர். திருமுகமண்டலம் மேற்கு நோக்கியிருக்கின்றது. இடது கரத்தை தொங்கவிட்டும், வலது கரத்தை யோக முத்திரை காட்டியும் பள்ளி கொண்டுள்ளார்.

பெருமாளின் திருமுக மண்டலத்தின் அருகே “ஹாதலேயேர்’ என்ற முனிவர் உள்ளார். 16008 சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்ட படிமத்தின் மீது கடுசர்க்கரை சாந்து பூசப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது பெருமாளின் சயன விக்ரகம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத பேரழகு வாய்ந்த பெருமாளின் கோலத்தை நேரில் தரிசித்தவர்களாலேயே ஓரளவு உணர முடியும். பெருமாள் சயனித்துள்ள ஐந்து தலையுடைய ஆதிசேஷன், மூன்று மடிப்புகளைக் கொண்டுள்ளார். பிரகாரத்தில் பூதநாதன், சாஸ்தா, வெங்கடாசலபதி, கிருஷ்ணன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

கோயிலின் சிறப்பு:

தரை மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில், 3 ஏக்கர் பரப்பில், மேடை போன்ற பகுதியில் பிரமாண்டமாய் அமைந்துள்ளது இக்கோயில். கோபுர அமைப்பு இல்லை; கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது. மேற்கு, கிழக்கு என இரு வாசல்களைக் கொண்ட இக்கோயிலில் மேற்கு வாசல் பிரதான வாசலாக இருப்பினும், பக்தர்கள் கிழக்கு வாசலையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கலையம்சம்

இக்கோயிலில் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என நான்கு புறமும் பிரமாண்டமாய் நிற்கும் பிரகாரம், 224 தூண்கள் கொண்டது. ஒவ்வொரு தூணிலும் புன்முறுவலுடன் நிற்கும் “பாவை விளக்குகள்’ அழகானவை. பிரகாரத் தூண்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள், பல்வேறு புராணக் கதைகளைப் பேசுபவையாக உள்ளன.

பிரகாரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது எதிர்படும் சித்திரசபை, சிற்பக் கலையின் பொக்கிஷமாக திகழ்கிறது. இங்குள்ள 12 தூண்களில் தாண்டவமாடும் சிவபெருமான் உள்பட 12 சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்குள்ள “நாலாம்பல மண்டபம்’ பிரமிக்க வைக்கக் கூடியது. இதிலுள்ள 24 தூண்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள், கலை வேலைப்பாடுகளின் உச்சங்கள். இக்கோயிலின் கருவறையின் முன்புள்ள ஒற்றைக் கல் மண்டபமும், கலை நுணுக்கம் மிகுந்தது.

கி.பி. 1740ஆம் ஆண்டு, நவாப் ஒருவர் திருவட்டாறு மீது படையெடுத்து வந்து, ஆலயத்து உற்சவரை கவர்ந்து சென்றிருக்கிறார். அன்றிலிருந்து நவாப்பிற்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுத் துன்பங்களைத் தந்துள்ளது. அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் அறிவுறுத்தலின்படி அந்த நவாப் தான் கவர்ந்து சென்ற உற்சவ மூர்த்தியை திரும்பக் கொண்டு வந்து கோயிலில் வைத்திருக்கிறார். அது மட்டுமின்றி “அல்லா மண்டபம்’ என்றொரு மண்டபத்தைக் கட்டுவித்து ஆண்டுதோறும் அதில் பூஜைகள் நடத்த மான்யமும் வழங்கியிருக்கிறார். இந்த மண்டபம் கருவறையை வலம் வரும்போது உட்பிரகார நடையில் காணப்படுகிறது.

கோயில் விழாக்கள் :

இக்கோயிலில் பங்குனி மற்றும் ஐப்பசி திருவிழா என இருபெரும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. திருவிழாக்களில் கதகளி, துள்ளல், நங்கையர் கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆவணி திருவோண விழா, வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாக்களில் “லட்ச தீபம்’ ஏற்றப்பட்டு சிறப்பான விழா கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை சிறப்பு :

அசுர சக்தியான கேசனை பாம்பணை மேல் அழுத்தி வைத்துக் கொண்டுள்ள பெருமான், தன்னை வழிபடும் பக்தர்களை நோய்கள் உள்ளிட்ட எல்லாத் துன்பங்களிலிருந்தும் காத்து அருள் பாலிக்கிறார் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.

திருப்பணி

இக்கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த கடந்த 2004ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அரசு நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி வாயிலாக, கோயில் கருவறை, மேற்கூரை, பிரகாரம் உள்ளிட்டவற்றுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் திருப்பணிக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் பக்தர்களின் உதவியை திருப்பணிக்குழு எதிர்பார்க்கிறது.

பக்தர்கள் தங்களது காணிக்கை அல்லது நன்கொடைகளை, “மேலாளர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி மாவட்டம்}629177 என்ற பெயருக்கு’ காசோலை அல்லது வரைவோலையாக அனுப்பலாம். அல்லது, “ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர்’ திருவட்டாறு-629177 என்ற விலாசத்துக்கு, 57062320652 என்ற கணக்கு எண்ணில் நேரடியாகவும் செலுத்தலாம். 94425 77047 என்ற அலைபேசி எண்ணில் கோயில் மேலாளரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்கள் பெறலாம்.

அமைவிடம் :

நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வழியில் குழித்துறை நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து திருவட்டாறு 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆலயம் செல்ல ஆட்டோ வசதி உண்டு.

நாகர்கோயிலிலிருந்து திருவனந்தபுரம் சாலையில் பேருந்தில் பயணித்தால் 23 கி.மீ. தூரத்தில் இருக்கும் “அழகிய மண்டபம்’ என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து திருவட்டாறு செல்ல ஆட்டோ வசதி உண்டு.

தரிசன நேரம் : காலை 5 முதல் பகல் 12 மணி வரை; மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

Leave a Reply