திருமணத்தடை நீக்கும் சமுத்திரம்!

ஆலய தரிசனம்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

rangasamuthiram perumal

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்காவில் அமைந்துள்ள சிற்றூர் ரங்கசமுத்திரம்.

ரங்கசமுத்திரம் சிற்றூரில் ஸ்ரீதேவி & பூதேவி சகிதம் ஸ்ரீ வேங்கடாசலபதி பெருமாள் மெய்யன்பர்களுக்குக் காட்சி தருகிறார். பல்வேறு சிறப்புக்களைப் பெற்றுள்ள இவ்வூர் வேங்கடாசலபதியை தரிசிப்பதின் மூலம் திருமணத் தடைகள் நீங்குவதோடு குடும்ப தோஷங்களும் நிவர்த்தியாகும்.

ரங்கசமுத்திரம் கிராமத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ள கோவிலில் கிழக்கே பார்த்து ஸ்ரீ வேங்கடாசலபதி காட்சி தருகிறார். மூலவருக்கு எதிர்த்தார்போல் பட்சி ராஜன் பாங்குடன் தரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. பெருமாள் கோவிலுக்கு எதிரே இரு பக்கமும் வரிசையாக வீடுகள், பழைய காலத்து பாரம்பரிய பாணியில் காட்சியளிக்கின்றன.

சமுத்திரம் என்ற பெயரில் பல ஊர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளன. ஊரின் அருகில் அபிஷேகப்பரி குளம் இருந்ததால், அதனைக் குறிக்கும் வண்ணம் சமுத்திரம் என்று அடைமொழி கொடுக்கிறார்கள். இராவணனைக் குறிக்கும் இரவண சமுத்திரம், வடமலையானைக் குறிக்கும் வடமலை சமுத்திரம், கோபாலனைக் குறிக்கும் கோபால சமுத்திரம் போல ஸ்ரீ ரங்கனைக் குறிப்பது ரங்கசமுத்திரம். ரங்க நாயக்கர் என்பவர் இவ்வூரை ஆட்சி செய்ததால் ரங்க சமுத்திரம் ஆனதாகவும் சிலர் சொல்வர்.

ரங்கசமுத்திரம் கோவிலில் உள்ள மூலவரை புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் வழிபாடு செய்தால் தடைபட்ட திருமணங்கள் உடனே நடந்துவிடுமாம். சாகரம் என்றாலும் சமுத்திரம் என்றாலும் வடமொழியில் ஒரே அர்த்தம் தான். கடல் என்று தமிழில் பொருள் கொள்ள வேண்டும். சம்சார சாகரத்தில் கால் அடி எடுத்து வைக்க ரங்கசமுத்திரம் வேங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

வைகானச ஆகம முறையில் இந்தக் கோயிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலில் ஆனி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சிறப்பு பூசனைகள் செய்யப்படுகின்றன.

இந்த ஊரில் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால், திரிவேணி சங்கமத்தில் குளித்து, நீத்தார் கடன் செய்ததற்கு உரிய பலன் கிடைக்கும். பொருநை என்றழைக்கும் தாம்பிரவருணி நதி, கருணை நதி என்று அழைக்கப்படும் கடனாநதி, நந்தன் தட்டை கிராமத்து உள்ளூர் ஆறு என்பதால் அழைக்கப்படும் உள்ளாறு ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம்.

நந்தன் தட்டை, ரங்கசமுத்திரம் ஊருக்கு அருகில் உள்ள ஊராகும். இந்த ஊருக்கு பக்கத்தில்தான் முக்கூடல் உள்ளது. பொருநை நதியுடன் கருணை நதி கலக்கும் இடம் ரங்கசமுத்திரம். இவ்வூருக்கு எதிர்கரையில் உள்ள ஊர் திருப்புடை மருதூர்.

காசியில் உள்ள பஞ்சகோசரம் பகுதி போல் இவ்வூரும் சிவசைலம், பாபநாசம், பிரம்மதேசம், அம்பாசமுத்திரம் பகுதிகளோடு இணைந்து ரங்கசமுத்திர கிராமமாய் பஞ்சகோசரப் பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் முக்தி அடைவது சிறப்பு.

கல்வெட்டுக்களிலிருந்து ஆதித்த வர்மன் என்ற பாண்டிய மன்னன் இப்பகுதிகளை அரசாண்ட செய்தி தெரிய வருகிறது. இவ்வூருக்கு பக்கத்திலுள்ள பாப்பாகுடி சிவன் கோவில் ஆண்டவருக்கு ஆதித்த வன்மேசர் என்றுதான் பெயர். நான்கு வேதங்களும் தழைத்த ஊர். பழைய கல்வெட்டுக்களில் இப்பகுதியை ராஜசதுர்வேதி மங்கலத்து ரங்கசமுத்திரம் என்றும் அழைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

நடுவே வித்யா தீர்த்த மடம் உள்ளது. இவ்வூர் மக்கள் வழிவழியாக சிருங்கேரி சங்கராச்சாரியார்களை வழிபடக் கூடியவர்கள். வேங்கடாசலபதிக்கு ஏற்ற உத்ஸவம் கல்யாண உத்ஸவம்தான். எனவே தான் சனிக்கிழமைகளில் அரவணையோடு (சக்கரப்பொங்கல்) சுண்டல் நிவேதனம் செய்து பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்தால் சீக்கிரமே திருமணம் நடக்கும் என்றும், தடைப்பட்ட திருமண தோஷம் தானாகவே விலகும் என்றும் பரம்பரையாக இவ்வூர்க்காரர்கள் நம்புகிறார்கள்.

அம்பாசமுத்திரம் & முக்கூடல் பாதையில் அமைந்துள்ள இவ்வூருக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.

கட்டுரை – சரளா சங்கரசுப்பிரமணியன்

Leave a Reply