பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமான்!

ஆன்மிக கட்டுரைகள்
ponnadikkal jeer - Dhinasari Tamil
  • பிள்ளைலோகம் இராமாநுசன் –

பெரியாழ்வாரின் திருமகளாரான ஆண்டாள், திருப்பாவையில் நம்பி மூத்தபிரான் என்று பெருமைகூறப்படுகிற கண்ணனுக்கு முன் பிறந்த பலராமனை “செம்பொற் கழலடிச் செல்வா” என்று பெருமைத்தோற்ற துயில் எழுப்புகிறாள்.

பலராமன் பிறப்பதற்கு முன்பு, தேவகி பிராட்டிக்கு அறுவர் பிறந்தனர். அவர்கள் அறுவரையும் கல்லிடை மோத கொன்றான் கம்சன்.

பலராமனும், கண்ணனும் தேவகி பிராட்டிக்கு முறையே ஏழாவது, எட்டாவது குழந்தையாக அவதரித்தனர். நம்பி மூத்தபிரானான பலராமன் தன்னுடைய திருவடிகளை இவ்வுலகிலே திருக்காலிட்டபின், கண்ணன் பத்திரமாக இவ்வுலகிலே திருவதரிக்க முடிந்தது என்று பெரியோர்கள் பணிப்பர்.

இதனைப்போன்றே, இங்கும் ஒரு உத்தமர் மற்றோரு உத்தமர் திருவதரிக்கும் முன்பே, திருவதரித்தார். அது தானும், ஸுர்ய உதயத்திற்கு முன்பு அருணனின் உதயம் போல் ஆயிற்று.

புரட்டாசி மாதத்தில், புனர்வஸு நக்ஷத்ரத்திலே திருவதரித்தவர் அழகிய வரதர். இவர் மணவாள மாமுனிகள் திருவதரிக்கும் முன்பே, திருவதரித்தார். அழகிய வரதர் இவர், மணவாள மாமுனிகளுக்கு க்ருஹஸ்தராய் எழுந்தருளியிருந்த காலத்தே அவரின் பெருமையுணர்ந்து, அவருக்கு சிஷ்யரானார். இவர் தான் மணவாள மாமுனிகளுக்கு, முதல் சிஷ்யரும் ஆவார். வானமாமலை எம்பெருமானிடமே, த்ரிதண்டம், காஷாயம் பெற்று, சந்யாஸாச்ரமம் ஏற்று, ” வானமாமலை ராமாநுஜ ஜீயர்” என்ற திருநாமம் பெற்று, வெகுகாலம் மணவாள மாமுனிகளோடே தங்கி, கைங்கர்யம் செய்து வந்தார்

இவருடைய திருவடிகளை “செம்பொற் கழலடி” என்றே பணிப்பர் பெரியோர்.

மாமுனிகளின் சிறந்த சிஷ்ய செல்வத்துக்கு இவர் முதலடி இட்டமையால் இவருக்கு “பொன்னடிக்கால் ஜீயர்” என்ற திருநாமம் வழங்கலாயிற்று.

“இவர் முதலடி இட்டமையால் அன்றோ, பின்பு ஒருநாள் நம்பெருமாளும் மணவாள மாமுனிகள் சீடனானன்”.

எப்படி பலராமன் கண்ணனுக்கு அடிமை செய்வதற்காக அவனுக்கு முன்பிறந்தானோ, அப்படியே இவரும் மணவாள மாமுனிகளுக்கு அடிமை செய்வதற்கே, அவருக்கு முன்பு திருவதரித்தார்.

எப்பொழுதும் மணவாள மாமுனிகளை உடன்பிரியாது கைங்கர்யம் செய்து வந்தமையால் அவரின் பாதரேகையாக அபிமானிக்கப்பட்டார்.

திருவரங்கத்தில், திருவாய்மொழியை காத்த குணவாளர்கள் எழுதிய வ்யாக்யானங்களின் ஓலைசுவடிகள், அந்நிய படையெடுப்பில் பெருமளவு அழிந்து போயிற்று.

மணவாள மாமுனிகள், எஞ்சிய ஓலைசுவடிகள் இருக்கும் இடமெல்லாம் தேடி சென்று அவற்றை தொகுத்தார். கிடைத்தற்கரிய செல்வமான வ்யாக்யானங்களை ஓரிடத்தில் சேமித்தார். அவற்றையெல்லாம் தாமே படித்து, சிதைந்துபோயிருந்த க்ரந்தங்களை சரி செய்தார். கையெழுத்தில் வல்லவர்களை கொண்டு பல ப்ரதிகளை உண்டாக்கினார்.

திருவாய்மொழிக்கு, பெரியவாச்சான் பிள்ளை செய்த வ்யாக்யானங்கள் கொண்ட சுவடிகள் பெரும்பாலும் செல்லரித்துவிட்டது. செல்லரித்த பகுதிகளை தாமே எழுதினார். ஏனைய க்ரந்தங்களை தாமே பாதுகாத்தார். உலகோர் உய்ய நாள்தோறும், அருளிச்செயலின் அருள்பொருளை தாமே அடியார்களுக்கு உபதேசித்து வந்தார் மணவாள மாமுனிகள்.

அவரே இதனை பற்றி, ஆர்த்தி ப்ரபந்தத்தில் குறிப்பிடுகிறார்.

” பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மைக்
கண்டதெல்லாம் எழுதியவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்”

இத்தனை காரியங்கள் செய்ய பல்வகையிலும் மணவாள மாமுனிகளுக்கு துணை புரிந்தவர் வானமாமலை ஜீயர். இவர்கள் இருவர் இல்லையேல், அருளிச்செயலின் பொருட்கள் நமக்கு கிடைக்காமல் அல்லவா போயிருக்கும்!

மணவாள மாமுனிகள் தம்முடைய அந்திம தசையில், தமது திருக்கையில் தரித்திருந்த த்ரிதண்டத்திலுள்ள உபதண்டத்தையும், திருக்கையிலுள்ள திருவாழி மோதிரத்தையும், திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடி நிலைகளையும் வானமாமலை ஜீயரிடம் கொடுக்க நியமிக்க, மணவாள மாமுனிகளின் திருப்பேராரான ஜீயர் நாயனார், அவற்றை வானமாமலை ஜீயரிடம் சமர்ப்பித்தார்.

திருவரங்கம் பெரியஜீயர் மடத்தில், மணவாள மாமுனிகளின் திருவுருவச் சித்திரங்களை வானமாமலை ஜீயரே ஏறியருளப் பண்ணி வைத்தார்.

இன்றளவும், வானமாமலை ஜீயர் திருமடத்தில், மணவாள மாமுனிகளின் திருவாழி மோதிரமும், உபதண்டமும், திருவடி நிலைகளும் நாம் ஸேவிக்கும்படி உள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் இன்றளவும் எம்பெருமானார் தரிசனத்தை பேணி காத்து வருகிறார்கள்.

அவர்களுடைய திருவடித்தாமரைகளுக்கு என்றும் பல்லாண்டு பாடுவோம்.

வரமங்கை மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்.

புரட்டாசி புனர்வஸு – 17 . 10 . 2022

(சரித்திர ஆதாரம் : யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம் – ஸ்ரீ பிள்ளைலோகார்ய ஜீயர்)

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply