திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 321
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

விடமும் வடிவேலும் – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி முப்பத்தியாறாவது திருப்புகழான “விடமும் வடிவேலும்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, பொதுமாதர் உறவில் நைந்து போகாமல், உனது திருவடியில் நைந்து உருக அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். சற்றே கடின நடை கொண்ட திருப்புகழ். இனி திருப்புகழைக் காணலாம்.

விடமும்வடி வேலு மதனச ரங்களும்

     வடுவுநிக ரான மகரநெ டுங்குழை

     விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு …… கதுதோயும்

ம்ருகமதப டீர பரிமள குங்கும

     மணியுமிள நீரும் வடகுல குன்றமும்

     வெருவுவன பார புளகத னங்களும் …… வெகுகாம

நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட

     மலர்சொருகு கேச பரமுமி லங்கிய

     நளினமலர் சோதி மதிமுக விம்பமும் …… அனநேராம்

நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு

     முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ

     னகையுமுள மாதர் கலவியி னைந்துரு …… கிடலாமோ

வடிவுடைய மானு மிகல்கர னுந்திக

     ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்

     வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட …… லவையேழும் 

மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்

     வகையிரவி போலு மணியும லங்க்ருத

     மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு …… பதுதோளும்

அடைவலமு மாள விடுசர அம்புடை

     தசரதகு மார ரகுகுல புங்கவன்

     அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய …… மயிலேறி

அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி

     லுலகைவல மாக நொடியினில் வந்துயர்

     அழகியசு வாமி மலையில மர்ந்தருள் …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – அழகுடைய மானும், மாறுபட்ட கரனும், திகழ் எழுவகை மராமரமும், சமானமில்லாத வலிமையுள்ள வாலியின் மார்பும், நீண்ட ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரசேனைகள் முழுதும், இலங்கை வேந்தனான இராவணனுடைய சிறந்த சூரியன்போல் ஒளி செய்யுமாறு அணிந்துள்ள, அலங்கரிக்கப்பட்ட இரத்தின மணியமைந்த பத்து முடிகளும், இருபது தோள்களும் சேர்ந்துள்ள வலிமையும், மாளுமாறு கணைவிடுத்த தசரத ராஜ குமாரரும், இரவிகுலத் தோன்றலும், அருள்பூண்டவரும், முராரியுமாகிய திருமாலின் திருமருகரே;

     விளங்குகின்ற மயிலின் மீது ஏறி ஒரு நிமிஷத்தில் பகைவர்கள் மாளுமாறுச் செய்து, ஒரு கணத்தில் உலகத்தை வலமாக வந்து, சிறந்த அழகிய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே;

     நஞ்சும் கூர்மையுள்ள வேலும், மன்மதனுடைய கணைகளும், மாவடுவும் நிகராகும்படி மகரக் குழைகள் வரைச் சென்று மீள்கின்ற கண்களும், மென்மையான புனுகு கஸ்தூரி சந்தனம் வாசனைமிக்க குங்குமப்பூ இவைகளை அணிந்து, இளநீரும் வடமேருகிரியும் அஞ்சுமாறு பாரமும் புளகிதமும் உடைய தனங்களும், மிக்க ஆசையை விளைவிக்கின்ற நடனஞ் செய்கின்ற பாதத்தில் அணிந்துள்ள சிலம்பும், மேகங்கெஞ்சும்படி மலர் செருகியுள்ள கூந்தலும், இலகிய தாமரை மலர் போன்ற ஒளியும், சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும் உடைய முகமும், அன்ன நடையும், குளிர்ந்த அழகிய சந்திரனைத் தொழும் உடம்பு முழுவதும், அழகியக் கிளியை வயப்படுத்துகின்ற ஒலியையுடையச் சிரிப்பும் உடைய மாதர்களின் சேர்க்கையில் நொந்து அடியேன் உருகலாமோ? ஆகாது – என்பதாகும்.

     இப்பாடலில் அருணகிரியார் இராமாயணக் காட்சிகள் சிலவற்றைக் காட்டுகிறார். மாரீசன் வதம், கரன் வதம், மராமரம் துளைத்தல், வாலி வதம், வலிமையான இராவண வதம், முராசுர வதம், இரவிகுலம் ஆகியவை பற்றி அருண்கிரியார் இப்பாடலில் குறிப்பிடுகிறார். இவை ஒவ்வொன்றையும் பற்றி இனி வரும் நாள்களில் காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply