விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (11) : தலைமைப் பண்பு – மக்கள் தொடர்பு!

ஆன்மிக கட்டுரைகள்

5387" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aeaae0aea4e0aeaee0af8d-e0aeb5e0af87e0aea4-e0aeaee0af8ae0aeb4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d-e0aeb5e0af86-1.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aeaae0aea4e0aeaee0af8d-e0aeb5e0af87e0aea4-e0aeaee0af8ae0aeb4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d-e0aeb5e0af86-5.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aeaae0aea4e0aeaee0af8d-e0aeb5e0af87e0aea4-e0aeaee0af8ae0aeb4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d-e0aeb5e0af86-6.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aeaae0aea4e0aeaee0af8d-e0aeb5e0af87e0aea4-e0aeaee0af8ae0aeb4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d-e0aeb5e0af86-7.jpg 150w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aeaae0aea4e0aeaee0af8d-e0aeb5e0af87e0aea4-e0aeaee0af8ae0aeb4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d-e0aeb5e0af86-8.jpg 696w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aeaae0aea4e0aeaee0af8d-e0aeb5e0af87e0aea4-e0aeaee0af8ae0aeb4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d-e0aeb5e0af86-9.jpg 1068w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0aeb5e0aebfe0ae9ce0aeafe0aeaae0aea4e0aeaee0af8d-e0aeb5e0af87e0aea4-e0aeaee0af8ae0aeb4e0aebfe0aeafe0aebfe0aea9e0af8d-e0aeb5e0af86.jpg 1200w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" />

விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் 11
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

Leadership | தலைமைப் பண்பு – மக்கள் தொடர்பு

சாந்தீபனி மகரிஷியின் ஆஸ்ரமத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் சுதாமரும் ஒன்றாகப் படித்தார்கள். இருவரும் நல்ல நண்பர்கள். சுதாமர் ஏழை பிராமணர். கிழிந்த ஆடை அணிந்திருந்ததால் ‘குசேலர்’ என்று அழைக்கப்பட்டார். திருமண வாழ்க்கையில் ஏழ்மை காரணமாக குழந்தைகள் பசியால் வாடினர். மனைவி வற்புறுத்தியதால் ஸ்ரீகிருஷ்ணரிடம் உதவி கேட்க எண்ணி துவாரகை வந்தார்.

ஸ்ரீகிருஷ்ணர் அன்போடு சுதாமரை வரவேற்று தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்று அர்க்ய, பாத்யம் அளித்தார். ருக்மிணி தேவி வெண்சாமரம் வீசினாள். சுதாமர் கொண்டு வந்த அவல் முடிச்சைப் பார்த்து மகிழ்ந்த ஸ்ரீகிருஷ்ணர் ஒரு கை அள்ளி வாயிலிட்டுக் கொண்டார். அவ்வளவுதான். அங்கே சுதாமரின் குடும்பத்திற்கு சகல சம்பத்துகளும் வந்து குவிந்தன. சுதாமர் வெட்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ணரிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. ஆனாலும் நண்பனின் நிலை அறிந்து அவனுக்குத் தேவையான செல்வத்தை உதார குணத்தோடு அளித்துதவினான் ஸ்ரீகிருஷ்ணன். நண்பர்களிடையேயான அன்புக்கு ஸ்ரீகிருஷனரும் சுதாமரும் உதாரணமானவர்கள். துருபதருக்கும் துரோணருக்கும் இடையேயான நட்பு இதற்கு நேர் எதிரானது.


பிரதமர் பதவியிலிருந்து நீங்கியபின் பிவி நரசிம்மராவு தெலுங்கு பிரஜாகவி காளோஜி நாராயண ராவின் நினைவு நாள் கூட்டத்தில் பங்கு கொள்ள ஹைதராபாத் வந்தார். அந்த சபையில் காளோஜி குறித்து உரையாடும் போது இவ்வாறு கூறினார்… “எனக்கு நீண்ட நாள் நண்பர் காளோஜி. நான் பிரதமராக இருந்த போது எனக்கு ஒரு கடிதம் எழுதினார். “நீ நம் மாநிலத்தில் இருந்த போது நாம் மக்கள் பிரச்சனைகள், தீர்க்கும் விதங்கள் பற்றி நிறைய பேசிக் கொள்வோம்.

இப்போது அந்த விஷயங்களில் உன் அரசாங்கத்தின் நடைமுறை அதற்கு மாறாக உள்ளதே, ஏன்? நீ மாறிப்போய் விட்டாயா?” என்று கேட்டிருந்தார். நான் பிரதமராக இருந்த போதிலும் காளோஜி எனக்கு வெறும் நண்பர் மட்டுமல்ல. பொறுப்பான குடிமகன் கூட. அதனால் மாநிலத்துக்கு வந்த போது அவரை அழைத்துப் பேசினேன். உலகளவில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப நம் வழிமுறைகளை வடிவமைக்கா விட்டால் ஏற்படும் நஷ்டங்கள் குறித்தும், மாறினால் வரும் நன்மை குறித்தும் விளக்கினேன். அவரை அதனை ஏற்க வைத்தேன். நான் பதவியில் இருக்கிறேன்…. இந்த கடிதத்துக்கு பதிலளிப்பதாவது என்று நான் நினைக்கவில்லை. பொது மக்கள் மேம்பாடு குறித்து மிகவும் கவலையோடு என் நண்பர் எழுதிய கடிதம் அது”.

பிவி நரசிம்ம ராவு மாநிலத்தில் எப்போது எங்கே பயணம் செய்தாலும் பழைய தொண்டர்களை நினைவு கொண்டு அன்போடு நலன் விசாரிப்பார். அவருடைய நண்பர்கள் யாரைக் கேட்டாலும் இப்போதும் பிவிஎன் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். மனித உறவுகள் அத்தனை மதிப்பு மிக்கவை.


இது போன்றதே மற்றுமொரு சம்பவம் 2020 ஏப்ரலில் நடந்தது. அது கோவிட்-19 தொற்றுநோய் தன் கொடூரமான கரங்களை நீட்டி மக்களைப் பீடித்த கொடுங்காலம்.
சைனாவிலுள்ள ஊஹானில் தொடங்கிய வைரஸ் நோய் உலகெங்கும் பரவி ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி கொண்டது.

பாரத அரசாங்கம் பிற தேசங்களிலிருந்து தம் மக்களை பிரத்யேக விமானங்கள் மூலம் தாய் நாட்டுக்கு திரும்ப அழைத்து அவரவர் வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பிவைத்தது. அதே நேரம் ஊஹானில் சிக்கியிருந்த 112 இந்தியர்கள செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து வரும் சாகசத்தை யார் செய்வது? அந்த நகரத்தின் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. எந்த மருத்துவக் குழு அங்கு போகத் துணியும்?

அந்த நேரத்தில் இந்திய விமானப் படையில் மெடிகல் அசிஸ்டெண்டாக கஜியாபாதில் பணி புரிந்து வந்த சார்ஜென்ட் டாக்டர் பர்வேஜ் டாகா என்ற வீரரர் முன் வந்தார். அவருடைய தலைமையில் மருத்துவக் குழு ஊஹான் சென்றது. உயிரை உள்ளங்கையில் பிடித்துக் கொண்டு எதிர்கால வாழ்வின் மீது ஆசையோடு எதிர்பாத்துக் கொண்டிருந்த 112 இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு இட்டு வந்தது.

பிரதமர் ஸ்ரீநரேந்திர மோடிஜி இந்த சாகச மருத்துவருக்கு பிரத்யேகமாக போன் செய்து பாராட்டினார். அவரிடம் அந்த பயணிகளின் மன நிலை பற்றியும் டாக்டர் பர்வேஜின் குடும்பத்திரர் என்ன கூறினர் என்பது பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார். சிறந்த தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்வர்.


தலைவனுக்கு இருக்க வேண்டிய குணம் நன்றியுணர்வு. பெற்றோரை கைது செய்த கம்சனைப் போல, ஔரங்கசீப் போல இருந்தால் வரலாறு மன்னிக்காது. நாற்காலியில் அமரும் தலைவன் தனக்கு பரிச்சயமுள்ள மேதைகளையும் புகழ்பெற்ற மனிதர்களையும் நண்பர்களையும் நினைவில் நிறுத்தி அவ்வப்போது நலன் விசாரிக்க வேண்டும் பொதுநல சேவை செய்பவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்க வேண்டும். இருக்கும் நிலையிலிருந்து உயர்ந்த நிலைமைக்குச் சென்றவுடன் உறவுகளையும் உதவியவர்களையும் மறந்து போவது நன்றி கொன்ற செயல்.

‘தனக்குக் கிடைத்த பதவியும் உயர்ந்த நிலையும் கண்ணை மறைக்கக் கூடாது. பணிவோடு முன்னேற வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறது ராஜ நீதி சாஸ்திரம். தலைவன் மக்கள் அனைவரையும் ஒன்று போல் கருதி ஆதரவோடு சேவை புரிய வேண்டும். முக்கியமாக தனக்கு உதவிய தொண்டர்களை மறக்கக் கூடாது.

தர்ம சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது… “ஆபத்தில் இருந்த போது நமக்கு தைரியம் கூறி அச்சத்தைப் போக்கியவரையும், கல்வி கற்பித்த குருவையும் தனக்கு உபநயனம் செய்தவர்களையும் மந்திரோபதேசம் செய்தவரையும் பசியோடிருந்த போது உணவளித்தவரையும் கன்யாதானம் செய்தவரையும் கன்யாதனம் பெற்றுக் கொண்டவரையும் நமக்கு இதர தானங்கள் அளித்தவரையும் தந்தைக்குச் சமமாக மதிக்கவேண்டும்”.


தம்மவர்களை அலட்சியப்படுத்துவது தகாது என்று கூறும் ஸ்ரீராமன் பரதனிடம் இவ்வாறு கூறுகிறான்…
கச்சிதேவான் பித்ரூன் மாத்ரூன் குரூன் பித்ரு சமானபி !
வ்ருத்தாம்ஸ்ச தாத வைதாம்ஸ்ச ப்ராஹ்மணாம்ஸ்சாபி மன்யஸே !!

(ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 100-13)

பொருள்:- ஓ பரதா! நீ தேவர்களையும் பெற்றோரையும் தந்தைக்கு சமமானவர்களையும் மருத்துவர்களையும் கற்றவர்களான பிராமணர்களையும் மதிப்போடு கௌரவமளித்து நடத்துகிறாய் அல்லவா?

அதிகார மமதையோடு குல தெய்வ வழிபாடுகளை மறந்து நாத்திகர்கள் என்று பிரச்சாரம் செய்து கொள்ளும் தீயவர்களான தற்கால தலைவர்களை மறுத்துக் கூறும் சுலோகம் இது.

திருப்பதியிலுள்ள ஏழு மலைகளும் வெங்கடேஸ்வர சுவாமியின் சொந்தமல்ல என்று கூறிய மேதாவித் தலைவர்களையும், சாத்வீகர்களான ஆசார்யர்களை நகரத்தை விட்டு பகிஷ்கரித்து அவர்களுக்கு எதிராக பொய்க் குற்றம் சுமத்திய தற்கால ஆட்சியாளர்களையும அடையாளம் காட்டும் சுலோகம் இது.

குருமார்களான மடாதிபதிகளையும் பீடாதிபதிகளையும் அவமதித்து அவர்கள் பற்றி தீய பிரச்சாரம் செய்தவர்களையும், பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு கவலையில்லாமல் வாழ்பவர்களையும் நிந்திக்கும் சுலோகம் இது.

தன் பெற்றோரைத் தன்னவர்களாக காட்டிக் கொள்வதற்கு வெட்கி, தந்தையை தோட்டக்காரராக பரிச்சயம் செய்த புதுப் பணக்கார அதிகாரிகளை கன்னத்தில் அறைகிறது இந்த சுலோகத்தின் பொருள். சமுதாயத்தை வழிநடத்தும் தலைவன் பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால் அது எப்படிப்பட்ட எடுத்துக்காட்டு? சமுதாயத்திற்கு தவறான செய்தியை அது அளிக்காதா?

தலைவன் சமுதாயத்தின் மீது நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறி நாரத மகரிஷி தர்மபுத்திரனை இவ்வாறு வினவுகிறார்…

கச்சித் க்ருதம் விஜானீஷே கர்தாரம் ச பிரசம்ஸஸி !
சதாம் மத்யே மஹாராஜ சத்கரோஷி ச பூஜ்யன் !!

(மகாபாரதம் சபா பர்வம்- 5-120)

பொருள்:- மகாராஜா! உபகாரம் செய்தவர்களை மறக்கவில்லை அல்லவா? அதேபோல் உனக்கு நன்மை செய்தவர்களை சான்றோர் முன்னிலையில் புகழ்ந்து பேசி நன்றியோடு சன்மானம் செய்கிறாய் அல்லவா?


சத்ரபதி சிவாஜி ஆட்சியில் மக்கள் தொடர்பு, அறிமுகமானவர்கள்… போன்றவற்றில் சிவாஜியின் தனிப்பட்ட நடைமுறை எடுத்துக்காட்டானது. அது குறித்து பிரெஞ்சு யாத்திரீகர் ரெவரென்ட் ஜீன் எஸ்கோலியேட் இவ்வாறு குறிப்பிட்டுளார்… “இவர் கண்கள் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இவர் முகத்தில் எப்போதும் புன்னகை நடனமாடும். இவர் மக்களிடம் உரையாற்றும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் சிவாஜி தன்னோடு பேசுவது போலவும் தன்னையே பார்ப்பது போலவும் தோன்றும்”.

ஒவ்வொரு போருக்கு முன்னும் பின்னும் சிவாஜி தன் படை வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பான். ஒழுக்கம் விஷயத்தில் எத்தனை கடினமாக நடந்து கொள்வானோ காயம்பட்ட வீரர்களின் விஷயத்தில் அதே அளவு மென்மையாக நடந்து கொள்வான். அப்சல்கானைக் கொன்ற பின் சிவாஜி பற்றி அவனுடைய ஆஸ்தானத்திலிருந்த ஒருவர் இவ்வாறு எழுதினார்… “போர் முடிவடைந்த உடனே சிவாஜி கோட்டையிலிருந்து கீழே இறங்கி வந்து தன் படை வீரர்கள் அனைவரையும் சந்தித்தான். அது மட்டுமல் அப்சல்கானின் படையில் மீதியிருந்தவர்களைக் கூட சந்தித்தான். மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திலிருந்த திறமைசாலிகளை படையில் சேர்த்துக் கொண்டான். ஆண் பிள்ளைகள் இன்றி போரில் அமரரான வீரர்களின் மனைவிகளுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்படி உத்தரவு வெளியிட்டான்”.


“ராஜ பித்ரு சமான:” என்பது சாஸ்திரம். அதாவது அரசளுபவன் தன் குடிமக்களிடம் தந்தையைப் போன்று பாசத்தோடு நடந்து கொள்ள வேண்டும். தன் குடிமக்களனைவரும் தன் குடும்ப அங்கத்தினர்களே என்று நினைத்து தன் சொந்த பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வானோ அதே போல் பொது மக்களிடம் அவர்களின் நல்லது கெட்டதுகளை அளந்து பார்த்து எடுத்துக் கூறி திருத்தி தேவையானால் தண்டித்து முன்னேற்றப் பாதையில் மக்களை வழிநடத்த வேண்டும்.

அதே போல் மக்களும் அரசனைத் தந்தையாக நினைக்க வேண்டும் அரசனின் ஆணையை மீறக் கூடாது. (பித்ரு வாக்கிய பரிபாலனை). அரசன் தந்தை போல் வாத்சல்யத்தைக் காட்டுகிறான்… அதிகாரத் திமிரை அல்ல என்ற எண்ணத்தையும் நம்பிக்கையையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசனுடையதே! ‘ராஜா’ என்றால் தற்போது தலைவன் அமைச்சர், அதிகாரி என்ற பொருளில் எடுத்துக் கொள்ளவேண்டும்.


“எடுத்துக்காட்டான தலைவன்:-
ஒரு உத்தம தலைவன் மக்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பான். அவ்வாறான தெளிவு இல்லாத தலைவன் மக்களுக்கு தீங்கு விளைவிப்பான். தற்போதைய சூழலை மாற்றி ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்பேன் என்ற உந்துதலோடு நல்ல தலைவன் முன்னோக்கிச் செல்வான்.

நாட்டு முன்னேற்றம் குறித்து தலைவனுக்கு ஒரு கனவு இருக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான தெளிவான வழிமுறை தெரிய வேண்டும். அதன் வடிவமைப்பில் சுயநலம் இருக்கக் கூடாது.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி செயலொன்று செய்வது என்ற தீய குணமுள்ளவர் தலைவரானால் அது தேசத்திற்கு தீவிரமான நஷ்டத்தை ஏற்படுத்தும். தலைவன் மக்களுக்கு எது நன்மை விளைவிக்குமோ அதனை அறிந்து செய்ய வேண்டும். மக்கள் நலனே முக்கியம் என்று வாழ்ந்த தலைவர்களின் பெயர்கள் காலத்தால் அழியாது நிற்கும். தேசத்தின் நிலையை மாற்றியவர்கள் என்றும் நினைவில் நிற்பார்கள்.

எதிர்கால தேச நிர்மாணம் குறித்து தெளிவு உள்ள தலைவர்கள் அரிது. அவர்களே உலகால் விரும்பப்படுவார்கள். அவ்வாறு இல்லாதவர்கள் கிராமபோன் பாடல்கள் போல் சற்று நேரம் கேட்கப்பட்டு மறக்கப்படுவார்கள். நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைக் காத்து அதிலுள்ள சிறந்த அம்சங்களை நிகழ்காலச் சூழலுக்கு எவ்வாறு பயன்படும் என்றறிந்து நடைமுறைப்படுத்துபவர்களே ஆதர்ச தலைவர்களாக கீர்த்தி பெறுவார். வரலாற்றில் நிலைப்பர்” – எல்வி சுப்ரமண்யம் ஐஏஎஸ் (ப.ஓ.).

சுபம்!

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (11) : தலைமைப் பண்பு – மக்கள் தொடர்பு! News First Appeared in Dhinasari

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply