திருப்புகழ் கதைகள்: சீறல் அசடன்!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0ae9ae0af80e0aeb1e0aeb2.jpg" style="display: block; margin: 1em auto">

திருப்புகழ்க் கதைகள் 216
சீறல் அசடன் – பழநி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம்

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றி ஐம்பத்தியொன்பதாவது திருப்புகழ், ‘சீறல் அசடன்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, அடியாருடன் என்னைச் சேர்த்து, ஆட்கொண்டு அருள்புரிவாயாக”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி …… பவயோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி …… எவரோடுங்
கூறு மோழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு …… னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் …… புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி …… புனைவோனே
மாக முகடதிர வீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய …… முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை …… யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – தரும நெறியினின்றும் மாறுபட்ட அசுரர்கள் மாண்டு ஒழியுமாறு போர் புரிந்து வெற்றியை உடைய மகுடத்தைத் தரித்தவரே; அண்டத்தின் உச்சி அதிர்ச்சி அடையுமாறு சிறகை வீசிப் பறக்கின்ற மயிலைக் குதிரை வாகனம் போல் கொண்ட முருகக்கடவுளே; பெருமை நிறைந்த கலிசை என்ற ஊரில் வீற்றிருக்கும் சேவகராகிய மன்னவருடைய உள்ளக் கோயிலில் உறைகின்ற ஒப்பற்ற பெருமையுடையவரே; வீரை என்ற தலத்தில் வாழ்கின்ற குமாரசுவாமியே; தைரியம் உடையவரே; பழநியம்பதியில் எழுந்தருளியுள்ள வேலாயுதரே; தேவர்கள் போற்றுகின்ற பெருமிதம் உடையவரே.

சீறி விழுகின்ற சினத்தை யுடைய கீழ்மகன், தீவினைகளைச் செய்கின்றவன்; ஒழுக்கம் இல்லாதவன்; பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன்; பிறவிநோயையே தேடுகின்ற தன்மை யுடையவன்; பெருமை, நீதி, நெறி, நேர்மை, சிறப்பு என்ற நல்ல குணங்கள் ஒரு சிறிதும் இல்லாதவன்; எல்லாருடனும் பொய்யையே பேசுகின்ற தீயவன்; அறிவில்லாதவன்; தேவரீருடைய திருவடிகளை விரும்பாத குப்பை போன்றவன், இப்படிப்பட்டவனாக இருப்பினும் அடியேனுக்கு உமது அடியாருடைய திருக் கூட்டத்தில் சேரும் வழியைத் தந்து அருள்புரிவீராக – என்பதாகும்.

இத்திருப்புகழில் அருணகிரிநாதர் தன்னை சீறல் அசடன், வினை காரன், முறைமை இலி, தீமை புரி கபடி, பவநோயே தேடு பரிசி, கன நீதி நெறிமுறைமை சீர்மை சிறிதும் இலி, எவரோடும் கூறு மொழி அது பொய் ஆன கொடுமை உள கோளன், அறிவிலி, உன்அடிபேணாக்
கூளன் என்றெல்லாம் கூறி இருந்தாலும் என்னை நீ உன் அடியவர்களோடு கூடும் வகைமை அருள் புரிவாயே என வேண்டுகிறார்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் அடையக்கூடாத குணக்கேடுகளை இங்கே அருணகிரியார் பட்டியலிடுகிறார். அவர் கூறும் குணக்கேடுகளில் முதலாவது கோபத்தினால் பிறர் மீது கோபித்து விழுதல். மனிதனுக்குப் பெரும்பகை சினத்தை அன்றி வேறு இல்லை; கோபம் வந்தவுடன் மனதில் சாந்தி விலகும். அமைதி குலையும். மகிழ்ச்சி மடியும். இதனை மகாகவி பாரதியார் அவர்கள்

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்;சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்

திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை, குறள் 305]

ஒருவன் தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவன் தன்னுடைய சினத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒருவர் தன்னுடைய சினத்தை கட்டுப்படுத்தவில்லையென்றால் அச்சினம் அவரையே வதைக்கும் / துன்பப்படுத்தும். ஏன் எனில் சினம் என்பது நெருப்பு. அது நம்முள் வெம்மையினை உமிழ்ந்துக்கொண்டே இருக்கும். அது நமது மன நலத்தை சீர் குலைக்கும் மகிழ்ச்சி சென்றுவிடும். நமது உடலுக்கும் கேடு விளைவிக்கும். கோபம் நம்மை ஒரு பதற்ற நிலையில் வைக்கும். அந்த நெருப்பு தனிவதும் கடினம். மேலும் கோபம் நம் முடிவு எடுக்கும் ஆற்றலை குலைத்து விடும். நாம் விளைவுகளை எண்ணாது தவறான முடிவுகளை எடுப்போம்.

திருப்புகழ் கதைகள்: சீறல் அசடன்! News First Appeared in Dhinasari

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply