திருப்புகழ் கதைகள்: மாயாவாதம்!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0aeaee0aebee0aeafe0aebe.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 186
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கலைகொடு பவுத்தர் – பழநி 3
மாயாவாதம்

பௌத்தர்கள் பற்றிச் சொன்னபின்னர் தன் சாதி கருமமே பற்றி முத்தனான கருமி பற்றிக்கூறுகிறார். அதன் பின்னர் துருக்கர் என்ற சொல்லால் முகமது நபியினால் ஏற்பட்ட மதம் பற்றிக்கூறுகிறார். அடுத்து மாய சொல் மூலம் மாயாவாதிகள் எனப்படுவர் பற்றிப் பேசுகிறார். இது ஏகான்ம வாதத்தில் ஒன்று ஆகும். ஏகான்மவாதத்தை அத்வைதம் என்றும் சொல்லலாம். ஏகான்மவாதம், என்பது நான்கு பிரிவுகளை உடையது. அவையாவன மாயவாதம், பாற்கரிய வாதம், கிரீடாப் பிரமவாதம், சத்தப் பிரமவாதம் என்பனவாகும்.

மாயாவாதம் என்பது – பிரமமாகிய கடவுள் மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரே பொருள். உயிர்களாகிய அனைத்தும் தோற்றம் மாத்திரமேயாகும். இத் தோற்றத்திற்குக் காரணம் பிரமம், மாயையோடு தொடர்புற்று அதன் வாயிலாகப் பிரதிபலித்தலே. அதாவது இருட்டில் கயிறைப் பாம்பு எனக் கருதுவது போல. மாயை யாதெனில் அது இன்னதென்று சொல்ல முடியாதது. சமஸ்கிருதத்தில் இதனை “அநிர்வசனீயம்.” என்பர். இம்மாயைக்கு வேறாக உள்ள பிரமம் யான் என அறிவதே முத்தி என்ற கொள்கையுடையது.

பாற்கரியவாதம் என்பதாவது – பிரமமே சடமும் சித்துமாய உலகமாயிற்று. அங்ஙனம் விகாரப்பட்டதை அறியாமையாற் பந்தமாயிற்று. வேதாந்த ஞானத்தால் உடம்புக்கு வேறாக ஆன்ம ரூபம் விளங்கும். அதன் கண் ஒடுங்குதலே முத்தியெனப்படும். கிரீடாப் பிரமவாதம் என்பது – கடவுளும் யானே; நிகழ்பவையெல்லாம் என் விளையாட்டே என அறிவதே. சத்தப்பிரய வாதம் என்பது முடிவு காலத்திற் பிரமம் சத் வடிவாக இருக்கும். அதுவே அவிச்சையால் சடமும் சித்துமாய உலகங்களாம் என்ற கொள்கையுடையது.

இந்த ஏகான்ம வாதத்தை நன்கு பரவச் செய்தவர் சங்கராச்சாரியார். யாங்களே கடவுளென்னும் பாதகத்தவரும் என்று தாயுமானாரும், நாம் பிரமம் என்னும் சாம் பிரமம் என்று இராமலிங்கரும் பிற ஆன்றோரும் இதனை நன்கு மறுத்திருக்கின்றார்கள்.

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

இதன் பின்னர் அருணகிரியார் குறிப்பிடும் கபிலம் என்பது சாங்கிய மதம் எனப்படும். இதனைச் செய்தவர் கபிலமுனிவர். சட உலகம் குணதத்துவத்தினின்றும் உண்டாகின்றது. சத்துவம் இராசதம் தாமதம் என்ற மூன்று குணங்களும் ஒப்ப நின்ற நிலையிலே அது பிரகிருதி தத்துவம் எனப்படும். அது எல்லாவற்றுக்கும் மூலமானதால் மூலப் பிரகிருதியாம். இதற்குக் கீழ் உள்ள, மண், நீர், தீ, வளி, வெளி என்கிற ஐம்பெரும் பூதங்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் தன்மாத்திரைகள் ஐந்து, மெய், வாய், கண், நாசி, செவி எனப்படும் ஞானேந்திரியங்கள் ஐந்து, வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் எனப்படும் கன்மேந்திரியங்கள் ஐந்து, மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்று, இவை அனைத்து கொண்ட இருபத்து மூன்று தத்துவங்களால் ஆகியதே உலகம்.

ஆன்மாக்கள் பல. அவை அறிவு வடிவாயிருப்பன. மூலப் பிரகிருதியின் திரிபு வடிவாகிய புத்தியைச் சார்ந்து உயிர்கள் கட்டுப்பட்டமையால் அவைகட்கு இன்ப துன்ப உணர்வு தோன்றியது. மூலப் பகுதியினின்றும் தன்னைப் பகுத்து உணர்வதால் அவிச்சை நீங்கி முத்தியுண்டாம். இதன் கண் சற்காரிய வாதம் கூறப்படுகின்றது.

பகர அகணாதர் என்று அருணகிரியார் இத்திருப்புகழில் குறிப்பிடும் சொல் பகர்+அ+கணாதர் என்று பிரியும். சொல்லப்படுகின்ற அந்த கணாதர் என்று பொருள்படும். இவர்கள் வேதத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள், வேதத்தை உடன்படுகின்றவர்கள். ஆறு தரிசனம் என்று ஆறு சாத்திரங்களைச் செய்தார்கள். இந்த ஆறு தரிசனத்தில் ஒன்று கணாதமுனிவர் செய்த வைசேடிகம்.

அருணகிரிநாதர் குறிப்பிடும் உலகாயதம் என்ற மதந்தான் சமய உலகில் முதலில் நிற்பது. இவர்கள் நிலம், நீர், தீ, காற்று என்ற நான்கு பூதங்களே உள்ளன. (ஆகாயத்தை இவர்கள் ஒப்புக் கொள்வதில்லை) இவற்றின் கூட்டுறவால் உண்டாகிய உடம்பின்கண், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பின் கலப்பினால் ஒரு சிவப்பு நிறம் உண்டாவதுபோல், ஓர் அறிவு தோன்றும்; அஃதே உயிர். உடம்பின் வேறாக உயிர் இல்லை. வினை என்பது கிடையாது. இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாக வுள்ளன. பெண் இன்பமே முத்தி இன்பம். பிராணவாயு நீங்கில் உடல் அழியும் என்ற கொள்கைகளைக் கடைப் பிடித்தவர்கள்.

திருப்புகழ் கதைகள்: மாயாவாதம்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply