e0af8d-e0ae93e0ae99e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 179
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கருவின் உருவாகி – பழநி
ஓங்கி உலகளந்த உத்தமன் 1
வாமனமூர்த்தி ஒருநாள் பலிச்சக்கரவர்த்தி பிருகுவமிச முனிவர்களைக் கொண்டு செய்கின்ற அசுவமேத யாகசாலையிற் புகுந்தார். அவருடைய திருமேனியின் ஒளியால் அக்கினியும் ஆதித்தனும் ஒளி மழுங்கினார்கள். யாகசாலையிலுள்ளோர் அவரைக் கண்டு வியப்புற்றார்கள்.
அவரைக் கண்டு யாகபதியாகிய பலி, எழுந்து எதிர் சென்று அடிவணங்கி, ஆசனந் தந்து திருவடியைப் பூசித்து, அப் பாத நீரைத் தன் தலையிற் தெளித்துக் கொண்டு, “இன்றே அடியேன் புனிதனாயினேன். உங்கள் வரவு நல்வரவு. உமது பார்வையால் அடியேன் பரிசுத்த மடைந்தேன். உமது பாதோதகத்தால் என் பாவமெல்லாம் நசித்தன. என் பிதிரர்களும் மகிழ்வுற்றார்கள். யாசிக்க வந்தவராக உம்மைக் குறிப்பினாலுணர்கிறேன்; வேண்டியதைக் கேளும்; உடனே தருகிறேன்” என்று கூறினான்.
பகவான் பலியின் அந்த இதமான வசனங்களைக் கேட்டு மகிழ்ந்து, “மூவுலகாதிபதியே! உனக்கு பிரகலாதரும் பிருகு வமிச முனிவரும் குருவாக இருக்கின்றார்கள். உமது வார்த்தை ஒரு பொழுதும் பொய்க்காது. யாசிக்கும் யாசகனுக்கு எந்த தாதா கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் பின் இல்லையென்று அவமானம் பண்ணுகிறானோ, அவன் இந்தக் குலத்தில் இல்லை. பிரகலாதனின் பேரனாகிய நீ சொற்சோர்வு படாதவன். உனது பிதாவாகிய விரோசனன் வேதிய உருக்கொண்ட விண்ணவர்க்குத் தன் ஆயுளை எல்லாம் கொடுத்தான். அத்தகைய புகழ்பெற்ற குலத்தில் பிறந்த உன்னிடத்தில் என்னுடைய அடியினால் அளக்கப்பட்ட மூன்றடி பூமியை யாசிக்கிறேன். சக்கரவர்த்தியும் மகா தாதாவுமாகிய நீ இதனைக் கொடுப்பாயாக” என்றார்.
பலிச் சக்கரவர்த்தி புன்முறுவல் கொண்டு “ஐயா, நீர் சிறுபிள்ளையாய் இருப்பதால் சிறு பயனை விரும்புகிறீர். மூன்று த்வீபத்தையும் கொடுக்கும் தகுதியுடைய என்னைப் புகழ்மொழிகளால் பூசித்து மூன்றடியை யாசிக்கிறீர்; வேண்டாம்; நிரம்ப விசாலமான பூமியைக் கேளும்” என்றான்.
பகவான், “பலியே! ஆசைக்கோர் அளவில்லை. மூன்றடியால் திருப்தி அடையாதவன் மூவுலகங்களாலும் திருப்தி அடையமாட்டான். நான்கேட்ட மூன்றடி இடத்தைக் கொடுத்தால் போதும்” என்றார். பலிச்சக்கரவர்த்தி “அப்படியே பெற்றுக் கொள்ளும்” என்று பூதானம் செய்ய நீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தான்.
அப்போது சுக்கிராச்சாரியார் தனது சீடனாகிய பலியை நோக்கி, “அன்பனே! இங்கு வாமனனாய் வந்திருப்பவன் ஸ்ரீமந் நாராயணனே ஆவான். இவன் அதிதி மைந்தனாய் தேவர்கட்கு அநுகூலம் புரிய வந்திருக்கிறான். இவன் வஞ்சனைக்கு மயங்கி விடாதே! வஞ்சனையாய் யாசிப்பவர்கட்குக் கொடுக்க வேண்டியதில்லை எனச் சாத்திரம் கூறுகிறது. இந்த தானத்தால் நீ அழிவது திண்ணம். நின்னைச் சார்ந்தவர்களும் அழிவார்கள். ஆபத்தில் பொய் சொல்லலாம். ஆதலால் நீ அவசரப்பட்டு இவர் கேட்டதைக் கொடுத்து துன்பத்திற்கு ஆளாகாதே” என்று தடுத்தனர்.
பலிச்சக்கரவர்த்தி “குருநாதா! பிரகலாத பேரனாகிய நான் ஒருபோதும் அசத்தியன் ஆக மாட்டேன். உயிர் நீங்கினும் கொடுக்கிறேன் என்றதைக் கொடுக்காமல் ஒளிக்க மாட்டேன். பூமிதேவி ‘பொய்யனைத் தவிர மற்றவர்களைச் சிரமமின்றி தாங்குகிறேன்’ என்று சொன்னாளல்லவா? நரகமே எனக்கு வரினும், “இல்லை” என்று சொல்ல இசையேன். தருமமே சிறந்த துணைவன். ஈந்துவக்கும் இன்பமே பெரிய இன்பம். ஈதலும் இசையுடன் வாழ்தலும் உயிர்க்குச் சிறந்த ஊதியங்களாகும். ஆதலால் இவ் வாமனருக்கு இதனைத் தந்து பொன்றாப் புகழைப் பெறுவேன்” என்றான்.
சுக்கிராச்சாரியார் “விதியினால் ஏவப்பட்ட மூடனே, என் ஆணையை அவமதித்து நீ விரைவில் எல்லா ஐஸ்வரியங்களை இழப்பாயாக” என்று சபித்தார். பலி அதனால் சற்றும் சலிப்புறாது, வாமனமூர்த்தியை முறைப்படி பூசித்து தண்ணீர் தாரைவிட்டு “மூன்றடியைக் கொடுத்தேன்” என்றான்.
அப்போது பலியின் மனைவியாகிய விந்தியாவலி என்பவள், சுவர்ண கும்பத்தில் நீர் கொண்டு வந்து வாமனர் பாதத்தை யலம்பினாள். அந்த பாதத்தீர்த்தத்தை பலி தலையில் தெளித்துக் கொண்டு புனிதனானான். தேவர்களும் துந்துபிகளை முழக்கி மலர் மாரி பொழிந்தார்கள்.
அப்போது வாமன மூர்த்தியின் திருவுரு வளர்ந்து விசுவரூபங் கொண்டது. வாயுமண்டல சூரியமண்டல சந்திரமண்டல வன்னி மண்டலங்களை யெல்லாங் கடந்தன. எல்லாத் தேவர்களையும், ஏழுகடல்களையும் எண்டிசைப் பாலகர்களையும், எல்லா நதிகளையும் பிறவற்றையும், அந்த அரியின் திருவுருவில் பலிச் சக்கரவர்த்தி கண்டான்.
திருப்புகழ் கதைகள்: ஓங்கி உலகளந்த உத்தமன்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.