ஊரார் கைவிட்டாலும்.. கறாராக உதவ கடவுள் உண்டு!

ஆன்மிக கட்டுரைகள்

panduranga
panduranga
panduranga

க்ஷேத்ராடனம் செய்து உஞ்சவ்ரித்தி எடுத்து, கிடைத்ததை உண்டு வாழ்ந்த அந்த மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் ஆலந்தி என்கிற கிராமத்தை கடந்தனர்.

சிறுமி முக்தாபாய் மூத்தவனான நிவ்ரித்தியிடம் அண்ணா, நாம் பிறந்த ஊராமே இது. இங்கு தான் ஊர்க்கோடியில் ஒரு காட்டில் தனிமையில் நமது பெற்றோர்கள் வாழ்ந்தார்களாமே.

சென்று நாம் பிறந்த இடத்தை பார்க்கலாமா?”
இப்போது அந்த கிராமத்தில் நிலைமை வேறு.

இந்த தெய்வீகம் பொருந்திய சிறுவர்களையும் சிறுமியும் பற்றி விஷயங்கள் ஆலந்தி கிராமத்தின் காதுகளிலும் விழுந்து விட்டதே.

பிரதிஷ்டான புரத்தில் அவர்கள் நிகழ்த்திய அதிசயம் காற்று வாக்கில் எங்கெங்கெல்லாமோ பரவியபோது இந்த ஊருக்கும் தெரியாமலா போகும்?.
ஊர் பிராமணர்கள் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.

ரெண்டாவது அண்ணா சோபன், தான் அந்த ஊர் பிராமணர்களிடம், பிரதிஷ்டானபுரம் பிராமணர்கள் குழு கைப்பட எழுதிய கடிதத்தையும் அவர்களிடம் காட்டியதால், அதைக்கண்ட ஆலந்தி பிராமண சமூகம் மிக்க மகிழ்ந்தது. அந்த கடிதத்தில், நிவ்ரித்தி, ஞானதேவ், சோபன் ஆகியோர் அவதார புருஷர்கள் என்று அழுத்தம் திருத்தமாக வேறு எழுதப்பட்டிருந்ததே!.

பிரதிஷ்டானபுரம் பிராம்மணர்கள் உயர்ந்த வரிசையில் வைக்கப்பட்டு மரியாதையும் பெருமையும் உடையவர்களாச்சே.

அந்த 4 பேரின் விட்டல நாம சங்கீர்த்தனம் ஆலந்தி மக்களை கவர்ந்தது. இவ்வளவு சின்ன வயதில் இத்தனை ஞானமா? மூக்கில் விரல் வைத்து அதிசயித்தனர் அவ்வூர் பண்டிதர்கள்.

நல்லவர்க்கிடையிலே சில கெட்டவர்களும் உண்டு அல்லவா?. விசோபா சத்தி என்ற ஒருவன் இந்த நான்கு பேரை கண்களில் நெருப்போடும் வாயில் விஷத்தோடும் பார்த்தான்.

” இந்த நான்கும் ஒரு சன்யாசியின் சிருஷ்டிகள். இதுகளைப் பார்ப்பதே பாபம். இந்த லக்ஷணத்தில் அவற்றின் நாம சங்கீர்த்தனம் அவசியமா?” என்று பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பிக்கொண்டிருந்தான்.

இந்த சந்தர்பத்தில் தீபாவளி விழா வந்து விட்டது எங்கும் கோலாகலமாக அம்பாள் பூஜைகள், தெருவெங்கும் தோரணம், நிறைய பிரசங்கங்கள், ப்ரவசனங்கள், பஜனைகள், நாம சங்கீர்த்தனங்கள்.

நிவ்ரித்தி, நவரத்த்ரியின் போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மாண்டே(போளி) தரவேண்டும் என்று ஆவல் கொண்டு முக்தா பாயிடம் வீட்டில் மாண்டே செய்ய முடியுமா?, என்று கேட்டார் மாண்டே வாட்ட கல் வேண்டுமே? முக்தாபாய் கடைக்கு சென்றாள்.

அங்கு ஒரு குயவன் சாமான்கள் செய்துகொண்டிருந்தான். அவனிடம் தனக்கு தேவையான ஒரு கல்லை வாங்க முயற்சிக்கும்போது விசோபா பந்த் என்ற ஊர் தலைவன் வந்து விட்டான்.
முக்தா பாய் சிறுமியை கண்டபடி ஏசினான். அந்த குயவனிடம் அவளுக்கு ஏதேனும் சாமான் தந்தால் அவனை ஊரில் ஒதுக்கி வைக்கப்படும் என்று பயமுறுத்தியதில் அந்த குயவன் மிரண்டு போய் முக்தா பாய் கேட்டதை தரவில்லை.

அதுமட்டுமல்ல. அந்த ஞானக் குழந்தையை, ஆதி மாயா சக்தி அவதாரமான முக்தா பாயை விசோபா அடித்து விரட்டினான். விசோபா பந்த் பண வட்டிக்கு விடுபவன்.

குயவனோ விசோபாவிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். அதைவைத்து விசோபா ” இந்த குலம் கெட்ட பெண்ணுக்கு நீ ஏதேனும் மண் பாண்டம் விற்றால் நாளையே என் கடனை வசூலிக்க வந்துவிடுவேன் உன் கடையை ஜப்தி செய்து அழித்து விடுவேன்” என்று வேறு பயமுறுத்தியதில் குயவன் முக்தா பாய் கேட்டதை கொடுக்க வில்லை.

முக்தா மனம் ஒடிந்து அவமானத்தால் குன்றி வெறும் கையோடு வீடு திரும்பி ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அந்த நேரம் வெளியே சென்றிருந்த ஞான தேவ் வீடு திரும்பி முக்தாபாய் அழுதுகொண்டு இருப்பதைக்கண்டு வருந்தினார் . அந்த சிறிய குழந்தை அழுவதன் காரணம் கேட்டு புரிந்து கொண்டார்.

அவள் அருகே சென்று அவள் தலையைக் கோதி அவளை அணைத்துக்கொண்டார். ஆதரவாக அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தார்
“அழாதே அம்மா. நீ ஒரு தவறும் செய்யவில்லையே.

நீ கேட்டதை அந்த குயவன் கொடுக்க விரும்பவில்லை. அவன் கொடுக்க விரும்பினாலும் விசோபாவின் பயமுறுத்தலும் பண பலமும் அவனை கையாலாகதவனாகச் செய்து விட்டது.

விசோபாவின் குணத்தை விடோபா மாற்றட்டும், அது விடோபாவின் வேலை. கொஞ்சம் கூட கவலைப் படாதே. விட்டலன் எனக்கு அளித்த யோக சக்தியை கொண்டு என்ன செய்ய முடியுமோ அதை முயற்சிப்போம் என ஞானேஸ்வரர் கூறினார்

தான் அந்த குழந்தையை அடித்ததால் அது போய் சகோதரர்களிடம் என்ன சொல்கிறது, எவரேனும் தன்னை எதிர்க்க வந்தால் மேற்கொண்டு அவர்களை எப்படி துன்புறுத்தலாம், என்று மனத்தில் திட்டத்துடன் விசோபா வெளியே ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டு அவர்கள் வீட்டில் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான்.

விட்டலனை த்யானித்துவிட்டு ஞானதேவ் தன் உடலுக்குள்ளே உள்ள மூலாதாரத்தில் இருந்துஅக்னியை தருவித்தார். வாயிலிருந்து அனல் பறந்தது. கண்கள் ரத்தப் பிழம்பாயிற்று. அவர் முதுகிலிருந்து ஆவி வந்தது. கொதிக்கும் அனலில் இட்ட இரும்புச் சட்டியைப் போல் முதுகு சிவப்பாக மாறி கை வைத்தால் தீய்ந்து போகும் அளவுக்கு சூடு உண்டானது.

முக்தாபாய், நான் இதோ கீழே கவிழ்ந்து படுக்கிறேன் என் முதுகு தான் உனக்கு சூடான கல். உனக்கு வேண்டிய சப்பாத்தியை என் முதுகில் நீ வாட்டிக் கொள்ளலாம். முடிந்தபின் என்னிடம் சொல்.” என்றார் ஞானதேவ்.

நிவரித்தி கேட்ட அளவு தேவையான மாண்டே கிடைத்த உபகரணங்களோடு செய்து ஞானதேவர் முதுகில் உண்டான நெருப்பு சூட்டில் வாட்டி தயார் செய்து முடித்தாள் முக்தா பாய்.

நிவ்ரித்தி சில பக்தர்களோடு வீடு வந்தார். மாண்டே அதனுடன் சேர்த்து சாப்பிட உணவு பதார்த்தங்கள் ஆகியவற்றின் நறுமணம் பக்தர்களின் பசியை அதிகரிக்கச்செய்ய அனைவரும் விட்டல பிரசாதம் உண்ண அமர்ந்தனர்.

பக்தர்கள் பால் இருக்கிறதா என்று கேட்க, முக்தாபாய் விட்டலன் படம் முன்பு நின்று கொண்டு “விட்டலா என் பக்தியே பால், சேவை செய்ய நினைக்கும் எங்கள் மனமே அதை காய்ச்சும் பாத்திரம் .

உனது அருளே சர்க்கரை. வேறு எங்களிடம் என்ன இருக்கிறது?” என்று கண்ணீர் வடித்தாள். ஒரு பாத்திரம் நிறைய சுண்டக்காய்ச்சிய பால் இனிய கல்கண்டு சர்க்கரை சேர்த்து பதமாக பக்தர்களுக்கு வழங்க பாத்திரங்களில் தயாராக இருந்தது.

பக்தர்களும் சகோதரர்களும் முக்தாபாயுடன் அமர்ந்து விட்டலனுக்கு நிவேதனம் செய்த சப்பாத்தி பாலை உண்டனர். வந்த பக்தர்கள் வயிறு மனம் ரெண்டும் நிரம்பி அவர்களை வாழ்த்தி வணங்கி சென்றனர்.

இதெல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த விசோபா தன் கண்ணை நம்ப முடியாமல் பல முறை கசக்கிக்கொண்டான். அவனுக்குப் பேச்சே வரவில்லை. அவன் ஒளிந்திருந்த இடத்திலிருந்தே அங்கு நடந்தவை அனைத்தும் பார்க்க முடிந்தது. அவர்கள் பேசினது எல்லாம் துல்லியமாக கேட்டது.

முக்தாபாய் அழுதது, ஞானதேவின் யோக சக்தியால் முதுகு பழுக்க காய்ந்த இருப்பு சத்தியானது, வெறுங்கையால் முக்தாபாய் தயாரித்த சப்பாத்தி, ஒன்றுமில்லாமலேயே நிரம்பிய பால் பாத்திரங்கள், இவை அனைத்தும் அவனை நிலைகுலைய வைத்தது. ஊரில் எல்லோரும் இந்த நால்வரையும் தெய்வீக குழந்தைகள் என்று போற்றியும் நான் காதிருந்த செவிடனாக இருந்தேன்.

இவர்களது பக்தியின் மேன்மையைக் கண்ட அநேகர் அவர்களை போற்றியபோது நான் கண்ணிருந்தும் குருடனாக இருந்து அவர்களது மகிமையை அறியவில்லையே. விட்டலனை எத்தனையோ முறை கோவிலில் சென்று வணங்கியும் எனக்கு ஞானம் ஏற்படவில்லையே. இந்த சிறுவர் ஞானதேவரின் பண்பும் யோக சக்தியும் விட்டலன் மேல் கொண்ட அளவற்ற நம்பிக்கையும் பக்தியும் என் கண்ணை திறந்தது, காது திறந்தது. அறிவு வளர்ந்தது இனி நான் பழைய விசோபா இல்லை.

ஒளிந்திருந்த இடத்தை விட்டு வெளியே ஓடிவந்தான் விசோபா. கண்களில் நீர் ஆறாக பெருக அவர்கள் 4 பேரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து தடால் என்று ஞானதேவ் காலில் விழுந்தான்.

முக்தாபாயை வணங்கினான். அவர்கள் தட்டில் மிச்சமிருந்த எச்சில் மாண்டேவை வெடுக்கென்று எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். இது ஒன்றே நான் திருந்தியதற்கு ஆதாரம்.

யாரைத் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தினேனோ , அவர்களின் எச்சல் ஒன்றே என் பாபத்திற்கு தக்க பிராயச்சித்தம். மேலும் இது விட்டலன் அளித்த பிரசாதம் என்பதை நான் கண் கூடாக பார்த்தேனே ” என்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள் என்று மீண்டும் அவர்கள் நால்வர் கால்களையும் கெட்டியாக பிடித்துக்கொண்டார் விசோபா.

ஞானதேவர் அவரைத்தூக்கி நிறுத்தி வணங்கினார். ” தாங்கள் வயதில் மூத்தவர் இவ்வாறெல்லாம் பேசக்கூடாது” என்று வேண்டினார்.

விசோபாவின் ஞானோதயம் ஏற்பட்டது இந்த வீசோபாவே பின்னாளில் நாம தேவர் குருவானார்

ஊரார் கைவிட்டாலும்.. கறாராக உதவ கடவுள் உண்டு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply