லலிதா சஹஸ்ரநாமம் பெருமையும், பலனும்…!

ஆன்மிக கட்டுரைகள்

lalitha - 6
lalitha - 5

லலிதா ஸஹஸ்ரநாமம் !

ஸ்ரீ மாதா லலிதா மகா திரிபுரசுந்தரி, சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்க முடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.

சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள், தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

லலிதா தேவியின் ஆயிரம் நாமங்களில் திரும்ப வராமல், ஒரு முறை மட்டுமே வரும் பெருமை கொண்டது லலிதா சகஸ்ரநாமம். லலிதாதேவியின் கட்டளையின் பேரில் வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு வாக்தேவதைகளால் (வாக்கை அருள்பவர்கள்) உருவாக்கப்பட்ட இந்த ஸ்லோகம் பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.

தேவியின் தலை முதல் பாதம் வரை
லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில், அன்னை லலிதாதேவி மகாமேருவில், ஸ்ரீ நகரத்தில், மகாபத்ம வனத்தில், சிந்தாமணி கிரகத்தில் அனைத்து கடவுளரையும் தனக்குள் கொண்டவளாக, அதியற்புத அழகுடன், ஆற்றலுடன், அனைவரையும் அபயம் அளித்துக் காப்பாற்றும் சர்வானந்தமயி தேவி, லலிதா திரிபுர சுந்தரியாக, மகாசக்தி தேவதையாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தேவியின் தலை முதல் பாதம் வரை கேசாதிபாத வர்ணனையாக, பஞ்ச க்ருத்தியங்களான ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம், அனுக்கிரகம் இவற்றை, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் இவர்களின் தன்மையைத் தன்னுள் கொண்டு தானே பஞ்ச பிரம்ம ரூபிணியாக இந்தப் பிரபஞ்சத்தை நடத்துவதாக வர்ணிக்கப் படுகிறாள்.

தேவியின் ஒவ்வொரு நாமமும் தேனாய் இனிக்கும் பொருள்களைக் கொண்டவை.
பிரம்மாண்ட புராணத்தில், குடந்தைக்கு அருகிலுள்ள திருமீயச்சூரில் விஷ்ணுவின் அவதாரமான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர், அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளைப் பின்வருமாறு கூறுகிறார்:

“தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப் போக்கும். செல்வத்தைஅளிக்கும். அகால மரணம் ஏற்படாது. நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலிய புண்ணிய நதிகளில் முறைப்படி பல தடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டைசெய்தல், க்ரஹண காலத்தில் கங்கைக் கரையில்அசுவமேத யாகம் செய்தல், பஞ்சகாலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்த புண்ணியமானது லலிதா சகஸ்ரநாமப் பாராயணம்.” அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம்

இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைத் தவிர வேறு உபாயம் இக்கலியுகத்தில் இல்லையென்று கருதப்படுகிறது. பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில், சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகள் நல்லிணக்கத்திற்கு வருவார்கள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான் என்று கூறப்படுவதுண்டு.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

”பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீ வித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தின் இன்னொரு சிறப்பு, இதைப் பாராயணம் செய்யும்போது அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்குச் சேரும்.
வெள்ளிகளில் மட்டுமன்றி அனைத்து கிழமைகளில் மற்றும், தேவிக்கு உகந்த நாட்களில் லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள்,

எதை அடைய விரும்புகிறோமோ அது தானாய் வந்து சேரும். தேவி எப்பொழுதும், எந்த கஷ்டம் வந்தாலும் நம்மைக் கவசமாய் நின்று காப்பாள். அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் அழகிய நாமங்களை அனுதினமும் சொல்வோம். அவள் அருளைப் பெறுவோம்.

லலிதா சகஸ்ரநாமம் – பலன்கள்….

(ஹயக்ரீவர் – அகத்தியர் உரையாடல்)

 1. இரகசியங்களிலும் பரம ரகசியமான இந்த 1000 திருநாமங்கள் லலிதைக்கு மிகவும் பிரீதியானது.
  இது போன்றதொரு துதி முன்பும் இல்லை, இனி வருங்காலங்களிலும் இருக்க போவதில்லை.
 2. இது அனைத்து விதமான வியாதிகளையும் ஒழித்து நற்செல்வத்தை வழங்க வல்லது.
  இது விபத்துகளையும், அகால மரணத்தையும் தடுக்க வல்லது.
 3. இது அனைத்து விதமான ஜீரங்களையும் போக்கி தீர்க்காயுளை வழங்குகிறது.
  இது அனைத்து புருஷார்‍த்தங்களையும் வழங்க வல்லது.
 4. இது அம்பிகையை போற்ற சிறந்த துதியாகும். இதனை அனுதினமும் லலிதையை வணங்கி பாராயணம் செய்தல் வேண்டும்.
 5. காலையில் எழுந்து நித்ய கர்மங்களை முடித்த பின் ஸ்ரீசக்கரத்தை முதலில் பூஜிக்க வேண்டும்.
 6. அதன் பிறகு அன்னையின் மந்திர ஜபம் செய்தல் வேண்டும். பிறகு இந்த 1000 நாமங்களை துதிக்க வேண்டும்.
 7. ஓ கும்பத்தில் உதித்தவனே ! இந்த 1000 நாமங்களை வாழ்வின் மத்தியில் பாராயணம் செய்வதன் பலன்களை அறிவாயாக !!!
 8. இதை பாராயணம் செய்யும் பக்தன் கோடி பிறவிகளில் கங்கை போன்ற பல புனித நதிகளில் நீராடிய புண்ணியத்தை அடைகிறான்.
  மேலும் கோடி லிங்க பிரதிஷ்டை செய்த பலனையும் அடைகிறான்.
 9. மேலும், குருக்ஷேத்திரத்தில் கிரகண காலத்தில் எண்ணற்ற ஞானிகளுக்கு ஸ்வர்ண தானம் செய்த பலனையும் அடைகிறான்.
 10. மேலும், கங்கை கரையில் கோடி அஸ்வமேத யாகம் செய்த பலனையும்,
  வறண்ட பூமியில் கோடி நீர்நிலைகள் அமைத்த புண்ணியத்தினையும் அடைகிறான்.
 11. மேலும், பஞ்ச காலத்தில் எண்ணற்றவர்களுக்கு உணவளித்த புண்ணியத்தையும், 1000 பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்த புண்ணிய பலனையும் அடைகிறான்.
 12. மேற்கூறிய அனைத்து புண்ணிய காரியங்களையும் கோடி முறை செய்தால் ஏற்படும் புண்ணியத்தினை இந்த 1000 திருநாமங்களில் ஏதேனும் ஒன்றை பக்தியுடன் கூறுவதாலேயே அடைவாய் !!!
 1. இந்த 1000 திருநாமங்களில் ஏதேனும் ஒன்றை பக்தியுடன் கூறுவதாலேயே, சந்தேகத்துக்கிடமின்றி ஒருவன் அது வரை செய்த பாகங்களிலிருந்து விடுதலை அடைகிறான்.
 2. ஒருவன் தினசரி தனது நித்ய கர்மங்களை செய்யாத பாவத்திலிருந்து கூட மிக துரிதமாக விடுதலை அடைகிறான்.
 3. ஓ கும்பத்தில் உதித்தவனே !! 14 லோகங்களிலும் எப்படி உயிர்கள் தங்கள் சக்திக்கேற்ப பாவங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று செவி மடுப்பாயாக !!
 4. பாவங்களிலிருந்து விடுபட நினைக்கும் ஒருவன் இந்த துதியை விடுத்து வேறு மார்க்கம் தேடுவது, ஜலதோஷத்திற்கு மருந்து தேடி இமாலய சிகரம் செல்வதற்கு சமமானதாகும்.
 5. இந்த 1000 திருநாமங்களை தினசரி பாராயணம் செய்யும் ஒருவன், லலிதையின் பூரண அருளால் அவனது அனைத்து விருப்பங்களும் நிறைவேறப் பெறுகிறான்.
 6. இவ்வளவு பெருமை வாய்ந்த திருநாமங்களை பாராயணம் செய்யாதவன் எப்படி பக்தன் ஆக முடியும்?
 7. தினசரி பாராயணம் செய்ய முடியாத ஒருவர் விசேஷ நாட்களில் மட்டுமாவது பாராயணம் செய்ய வேண்டும். மாதத்தில் முதல் நாள், ஆண்டின் முதல் நாள், 3 பிறந்த நாட்கள் (தன்னுடையது, தனது மனைவி, மற்றும் மகன்/மகள்)
 8. நவமி, சதுர்த்தசி, வளர்பிறை வெள்ளி கிழமை, மற்றும் பௌர்ணமியில் பாராயணம் செய்தல் மிகவும் விசேஷமானது.
 9. பௌர்ணமி தினத்தன்று சந்திர பிம்பத்தில் லலிதாம்பிகைக்கு பஞ்ச உபசாரங்களால் பூஜை செய்து இந்த 1000 திருநாமங்களை பாராயணம் செய்க !!
 10. இதனால் ஒருவன் நோய், நொடிகள் நீங்கி தீர்க்காயுளை அடைகிறான்.
 11. ஜுரத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவன் தன் தலையில் கை வைத்து இந்த 1000 திருநாமங்களை உச்சரிக்க, ஜுரம் நீங்கி சுகம் அடைவார்.
 12. எந்த ஒரு நோயிலிருந்தும் விடுபட, திருநீற்றின் மீது கை வைத்து இந்த 1000 திருநாமங்களை உச்சரித்த பின்னர் அதனை பூசிக் கொள்ள நோய் நீங்கி சுகம் அடைவார்.
 13. ஓ கும்பத்தில் உதித்தவனே ! ! பாத்திரத்தில் நீரை நிரப்பி அதன் மீது கை வைத்து இந்த 1000 திருநாமங்களை உச்சரித்த பின்னர் அந்த நீரில் குளித்தால் அனைத்து விதமான கிரக தோஷத்திலிருந்தும் விடுபடலாம்.
 14. அமிர்த கடலின் மத்தியில் அன்னை லலிதாம்பிகையை தியானித்து இந்த 1000 திருநாமங்களை உச்சரிக்க, அனைத்து விதமான விஷமும் மறைந்து போகும்.
 15. மகப்பேறு இல்லாத தம்பதிகள், அம்பிகைக்கு நவநீதம் (புதிய வெண்ணெய்) படைத்து, இந்த 1000 திருநாமங்களை உச்சரிக்க, நன்மக்களைப் பெறுவர்.
 16. அரசனை வசீகரிக்க, அரசனின் மாளிகையை நோக்கி அமர்ந்து
 17. தேவியை இந்த 1000
  திருநாமங்களால் துதித்தால் அந்த அரசன் யானை மீது அமர்ந்து உன்னை நோக்கி வருவான்.
 18. வந்தவன் தேவியின் பக்தனை வணங்கி நிற்பான்.
 19. மேலும், அவன் கூறினால் நாட்டையே காலடியில் சமர்ப்பிக்கவும் காத்திருப்பான்.
 20. தினசரி இந்த 1000 திருநாமங்களை உச்சரிப்பவனின் முகத்தினை கண்ட மாத்திரத்தில் ஞானிகளும் அவனை கரம் கூப்பி வணங்குவர்.
 21. தினசரி இந்த 1000 திருநாமங்களை உச்சரிப்பவனின் எதிரிகளை சரபேஸ்வரர் தனது அம்புகளால் வீழ்த்துவார்.
 22. இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் பக்தனுக்கு எதிராக எவனொருவன் தீய அபிசார பிரயோகம் செய்கிறானோ, அவனை பிரத்யங்கிரா தேவி அழித்தொழிப்பாள்.
 23. இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் பக்தனை எவனொருவன் வஞ்சகம் மற்றும் பொறாமை கண் கொண்டு காண்கிறானோ (தீய திருஷ்டி) அவனது கண் பார்வை மார்த்தாண்ட பைரவரால் பறிக்கப்படும்.
 24. இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் பக்தனின் செல்வத்தினை எவனொருவன் அபகரிக்கிறானோ, அவன் எங்கு சென்று மறைந்தாலும் அவனை க்ஷேத்ரபாலர் வதைப்பார்.
 25. இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்பவரிடம் எவனொருவன் வீண் விதண்டாவாதம் செய்கிறானோ, அவனது பேசும் சக்தியை நகுலீஸ்வரி பறித்து விடுவாள் (வாக் ஸ்தம்பனம்).
 26. இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்பவரிடம் எந்த அரசன் பகை கொண்டு அவரை துன்பம் செய்தால், அவனது சேனைகளையும், அவனையும் தண்டினி தேவி (வாராஹி) கணப் பொழுதில் துவம்சம் செய்து விடுவாள்.
 27. எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் இடைவிடாது 6 மாதம் பாராயணம் செய்கிறானோ அவனது இல்லத்தில் லக்ஷ்மி தேவி நிரந்தர வாசம் செய்வாள்.
 28. எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் இடைவிடாது 1 மாதம் (அ) 3 வாரம் பாராயணம் செய்கிறானோ அவனது நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனமாடுவாள்.
 29. எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் வாழ்வின் மத்தியில் பாராயணம் செய்கிறானோ அவனது பாவங்களிலிருந்து அவனுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
 30. எவனொருவன் இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் தனதாக்கிக் கொள்கிறானோ, அவன் அறிவில் சிறந்தவனாக ஆவதோடு, அன்னம், வஸ்திரம், தனம், தானியம் என அனைத்து சுகங்களையும் குறைவின்றி பெறுவான்.
 31. எவனொருவன் தனது பக்தியினாலும், பயிற்சியினாலும் “மந்திர ராஜம்” எனப்படும் மந்திரத்தினை அடைந்து அதனால் ஸ்ரீசக்கரத்தை பூஜிக்கிறானோ அவனை தெய்வீகமானவனாக இந்த உலகம் போற்றும்.
 1. எவனொருவன் இந்த திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்து “மந்திர ராஜம்” எனப்படும் மந்திரத்தினை அடைந்து அதனால் பூஜிக்கிறானோ அவன் வேண்டிய அனைத்தையும் லலிதை பரிவோடு அருள்வாள்.
 2. இந்த ரகசியமான திருநாமங்களை சிறுபுத்தி உள்ளவர்களிடம் அளிப்பதில் எந்த பயனும் இல்லை. இதனை தகுதி வாய்ந்தவர்க்கு மட்டுமே அளித்தல் வேண்டும்.
 3. ஓ அகத்தியா !! இவ்வுலகில் மந்திர ராஜத்திற்கு நிகரான மந்திரமும் இல்லை, லலிதைக்கு நிகரான தெய்வமும் இல்லை.
 4. பிரார்த்தனைகளில் இந்த திருநாமங்களுக்கு இணையானது ஏதுமில்லை.
  இந்த திருநாமங்களை புத்தகமாக எழுதி,
 5. அந்த புத்தகத்தை அன்னைக்கு சமர்ப்பிப்பதால், லலிதை மிகவும் பிரீதி அடைகிறாள். மேலும், இதை பற்றி கேட்பாயாக ! !
 6. தந்திரங்களில் இது போன்றதொரு சிறந்த துதி வேறொன்றுமில்லை.
  எனவே, தந்திரம் பயில்பவர்கள் இதனை தினமும் துதிக்க வேண்டும்.

49, 50, 51. இந்த திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்து,

ஸ்ரீசக்கரத்தை அம்பிகைக்கு பிரீதியான செந்தாமரை, துளசி மலர்(இலைகள் அல்ல), கல்ஹாரம்(அல்லி மலர்), கடம்ப மலர்,

செண்பக மலர், ஜாதி புஷ்பம், மல்லிகை, கரவீர புஷ்பம் (அலரிப்பூ), உத்பலம்(கருங்குவளை), வில்வ இலை, தும்பைப்பூ, கேசரம், பாதிரி

மற்றும் தாழம்பூ, வசந்தமல்லி(குருக்கத்தி) போன்ற நறுமணம் மிக்க மலர்களைக் கொண்டு அர்ச்சித்து வணங்குவதால் உண்டாகும் பலனை அந்த மகேஸ்வரனாலும் முழுமையாக விவரிக்க முடியாது.

 1. அவளது சக்கரத்தை வணங்குவதால் உண்டாகும் பலனை பற்றி லலிதையால் மட்டுமே கூற முடியும்.
  பிரம்மன் போன்ற மற்றவர்களால் அற்ப அளவிலேயே கூற முடியும்.
 2. மிகவும் ரகசியமான இந்த துதிக்கு நிகரானது ஒன்றுமில்லை. இதனை துதிக்கும் மனிதன் போகம், மோட்சம் இரண்டையும் ஒரு சேர பெறுகிறான்.
 3. வாழ்வின் 4 நிலைகளிலும் இத்துதியை இடைவிடாது ஜபித்துக் கொண்டே அவனது கடமைகளை செய்து வருவானேயாயின், அவன் அவனுடைய லட்சியத்தை எந்த விதமான சிரமமுமின்றி அடையப் பெறுவான்.
 4. கலியுகத்தில் அனைத்து தர்மங்களும் வலுவிழந்து போனாலும், அந்நேரத்தில் கூட ஒருவர் இத்துதியை பாடி எளிதில் முக்தியை அடைய முடியும்.
 5. லௌகீக வாழ்க்கையில் வெற்றி பெற விஷ்ணு நாம கீர்த்தனை மிக முக்கியம்.
  ஆனால், விஷ்ணுவின் 1000 நாமங்களை துதிப்பது, ருத்ரனின் 1 நாமத்திற்கு ஈடானது.
 6. ஆனால், ருத்ரனின் 1000 நாமங்களை துதிப்பது, தேவியின் 1 நாமத்திற்கு ஈடானது.
  ஓ அகத்தியா !! மேற்கண்டதை விட, தேவியின் 1000 திருநாமங்களை துதிப்பது கோடி முறை சிறந்தது.
 7. இந்த 1000 திருநாமங்களிலும், 10 நாமங்கள் மிக முக்கியமானதும், போற்றுதலுக்குரியதுமாகும். அவை :
 8. கங்கா
 9. பவானி
 10. காயத்ரி
 11. காளி
 12. லக்ஷ்மி
 13. சரஸ்வதி
 14. ராஜராஜேஸ்வரி
 15. பாலா
 16. சியாமளா
 17. லலிதா

(1000 நாமங்களை தினமும் துதிக்க இயலாதோர், இந்த 10 துதிகளையேனும் 3 முறை துதித்தல் வேண்டும்)

 1. இந்த 10 நாமங்களையேனும் தினமும் துதிக்க கலியின் பாவங்களிலிருந்து விடுபடலாம்.
  மேலும், இந்த 1000 திருநாமங்களிலும் “ஸ்ரீமாதா” என்ற நாமம் மிகவும் முக்கியமானது மற்றும் மறக்க கூடாதது.
 2. விஷ்ணுவின் நாமங்களை விட, சிவ நாமம் உயர்ந்தது. ஆனால், மூவுலகிலும் லலிதையின் நாமத்தை விட உயர்வானது ஏதுமில்லை.
 3. கோடி பிறவிகளில் மற்ற அனைத்து தெய்வங்களையும் பாடி வணங்குவது, லலிதையின் 1000 திருநாமங்களை ஒரு முறை சிரத்தையாக பாடுவதற்கு ஈடானது.
 4. இந்த 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்து, தகுந்த குருவின் மூலமாக ஸ்ரீவித்யா உபாசனையில் வெற்றி பெற்றால் இதுவே அவரது கடைசி பிறவியாக இருக்கும்.
 5. இவ்வுலகில் இந்த ரகசியமான திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்யும் ஸ்ரீவித்யா உபாசகரை காண்பது அரிது.
 6. மந்திர ராஜத்தினை கொண்டு ஸ்ரீசக்கரத்தை ஆராதித்து , இந்த 1000 திருநாமங்களை துதிப்பது தவத்திற்கு ஈடானது.
 7. இந்த திருநாமங்களை துதிப்பதை விடுத்து அன்னையை மகிழ்விக்க வேறு மார்க்கம் தேடுவது, கண் பார்வையற்ற ஒருவன் உருவத்தினை காண நினைப்பது போன்று முட்டாள் தனமானது.
 8. இந்த திருநாமங்களை விடுத்து , வேறு மார்க்கத்தில் சித்திகளை அடைய நினைப்பது உணவை நிராகரித்து விட்டு, பசியை போக்க உபாயம் தேடுவது போலாகும்.
 9. லலிதையை மகிழ்விக்க ஒரு பக்தன் இந்த ரகசியமான 1000 திருநாமங்களை உச்சரித்தாலே போதுமானது. மற்ற முறைகளை விட இதில் தான் அவள் மிகவும் பிரீதி அடைகிறாள்.
 10. அன்னையை மகிழ்விக்க இந்த ரகசியமான 1000 திருநாமங்களை பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும்.
  ஓ அகத்தியா ! ! ஆனால் இப்போது நான் உனக்கு உபதேசித்த திருநாமங்கள் மிகவும் ரகசியமானவை ஆகும்.
 11. அனைத்து வேதங்களையும் கற்ற ஒருவன் ஒரு முறையாவது இந்த திருநாமங்களை உச்சரிக்கவில்லை என்றால், ஸ்ரீவித்யை அவர்களுக்கு புலப்படாது ரகசியமாக வைக்கப்படும்.

80, 81. இந்த ரகசியமான திருநாமங்களை பாராயணம் செய்யாத மூடனிடம் ஸ்ரீவித்யையை அளித்தால் அது தவறாக பயன்படுத்த படும் அபாயம் உள்ளது ,

அதனால் தான் இது வெளியுலகுக்கு தெரியா வண்ணம் ரகசியம் காக்கப்படுகிறது.

அதனால் அப்படிப்பட்டவனுக்கு ஸ்ரீவித்யையை அளித்தவன் யோகினிகளின் சினத்திற்கு ஆளாக நேரிடும்.

 1. ஓ அகத்தியா !! இப்போது நான் உனக்கு உபதேசித்த திருநாமங்கள் நானே எனது விருப்பத்தின் பேரில் உனக்கு அளிக்கவில்லை. அன்னையின் அருளாசியினாலேயே உனக்கு இது கிடைத்திருக்கிறது.
 2. எனவே, இதனை பக்தியுடன் துதித்து, அன்னையை மகிழ்வித்தால், அவள் உனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்.

சூதர் கூறினார் :

 1. இப்படி கூறி முடித்த ஹயக்ரீவர், அன்னையை வணங்கி பரவசத்தில் ஆழ்ந்தார்.

பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் ஸ்ரீ ஹயக்ரீவருக்கும் அகத்தியருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் இடம் பெற்ற ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் பலன்கள் நிறைவடைந்தது.

 1. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மட்டுமே தேவதைகளால் இயற்றப்பட்டு, தெய்வத்தினால் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.

இயற்றியவர்கள் – வாக்தேவதைகள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :

 1. வசினி
 2. காமேஸ்வரி
 3. மோதினி
 4. விமலே
 5. அருணே
 6. ஜயினி
 7. சர்வேஸ்வரி
 8. கௌலினி

இவர்கள் ஸ்ரீசக்கரத்தின் எட்டாவது ஆவரணத்தில் விளங்குபவர்கள்.

பூமிக்கு முதலில் அளித்தது – பகவான் ஹயக்ரீவர்

புராணத்தில் சேர்த்தது மட்டுமே வியாசர் பெருமான்.

 1. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மட்டுமே “சகஸ்ரநாமம்” என்ற பெயருக்கேற்ப சரியாக 1000 திருநாமங்களைக் கொண்டதாகும்.
 2. சமஸ்கிருதத்தின் அனைத்து இலக்கணங்களும் சரிவர அமையப் பெற்ற ஸ்தோத்திரம் இது என்ற பெருமையை உடையது.
 3. சஹஸ்ரநாமங்களில் சொற்களின் தொடர்ச்சிக்காகவும், பாடல் சுவைக்காகவும் து, ச்ச, அபி போன்றவற்றை பயன்படுத்துவர்.

ஆனால், அப்படிப்பட்ட பொருள் இல்லா சொற்கள் ஏதுமின்றி அமையப்பெற்ற ஸ்தோத்திரம் இதுவே.

 1. மேலும், இந்த ஸ்தோத்ரம் முழுவதும் மந்திரங்களுக்கு நிகரானது. ஆகையால், இதனை துதியாகவே படிக்க வேண்டும். இசையாக ராகம் சேர்த்து பாடுதல் கூடாது.
 2. மேலும், இந்த ஸ்தோத்ரத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இதில் ஒவ்வொரு நாமத்தினையும் தனிப்பட்ட முறையில் பார்த்தாலும் சரி, ஸ்தோத்திரம் முழுவதும் சேர்த்து படித்தாலும் பொருள் தரும்.

(எ-கா) :
ஸ்ரீசக்ரராஜ நிலயா ஸ்ரீமத் திரிபுரசுந்தரி

ஸ்ரீசக்ரராஜ நிலயா – ஸ்ரீசக்கரத்தை இருப்பிடமாகக் கொண்டவள்.
ஸ்ரீமத் திரிபுரசுந்தரி – திரிபுரரின் மனைவி.

ஸ்ரீசக்கரத்தினை இருப்பிடமாகக் கொண்ட திரிபுரரின் மனைவி.

 1. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர் “பாஸ்கரராயர்” என்ற ஸ்ரீவித்யா உபாசகர். அன்னையின் பரிபூரண அருளைப் பெற்றவர்.

சாக்ஷாத் அன்னையே இவரது தோளில் அமர்ந்து இவருக்கு அருள் புரிந்து உலகப் புகழ் அடையச் செய்தாள் என்றால் இவரது பெருமை எப்படிப்பட்டது என்று நாம் உணர வேண்டும்.

இவர் எழுதிய உரையின் திருப்பெயர் “சௌபாக்கிய பாஸ்கரம்”

இன்றும் இவருக்கு தஞ்சை மன்னன் பரிசளித்த ஊர் இவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அந்த ஊரின் பெயர் “பாஸ்கரராஜபுரம்”

லலிதா சஹஸ்ரநாமம் பெருமையும், பலனும்…! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply