கட்டப்பட்ட கைகள்.. அவிழ்ப்பது எப்படி?

ஆன்மிக கட்டுரைகள்

raja - 5
raja - 2

ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்? என்ற சந்தேகம், மரகத நாட்டு ராஜா சிபிவர்மனுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! மகாராஜா.

பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர், ஸ்ரீ கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா பரீட்சித்து ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது.

இது உங்களுக்கு தெரியாதா? என்றார் மந்திரி. அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும். பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள், என்று உத்தரவு போட்டான்.

அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார்.

தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜா சிபிவர்மனுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல…பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.

bhagavatham - 3

இரண்டு மாதம் கழிந்தது. ராஜா சிபிவர்மனுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம், கோபமாக…..பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா! இந்த பாகவதக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே!….

இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை… என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார். வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் மீனாட்சி பார்த்தாள். நடந்ததை அறிந்தாள். அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான், என்றாள் மீனாட்சி. இவள் என்ன உளறுகிறாள்? என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே! நானிருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.

Fasten - 4

மறுநாள், மகள் மீனாட்சியுடன் அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் அந்தச்சிறுமி, மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன், என்றதும், சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய்? என்றான் மன்னன் ஆச்சரியமாக…

மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள், என்றாள். அரசன் சிபிவர்மன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர்.

மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள், என்றாள். உனக்கு பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்? என்ற மன்னனிடம், நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார்.

நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும்.

கண்ணனின் கதையைப் படித்தால், கேட்டால் மட்டும் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் மனதில் இருந்து துறக்க வேண்டும் புரிகிறதா! என்றாள்.

மன்னன் சிபிவர்மன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமி மீனாட்சியை வாழ்த்தினான், பரிசுகள் பல தந்தான். கண்ணனின் கதையைப்படித்து, உணர்ந்து பரந்தாமன் புகழ் பாடினான்

கட்டப்பட்ட கைகள்.. அவிழ்ப்பது எப்படி? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply