திருப்புகழ் கதைகள்: இராம சேது!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 47
வடத்தை மிஞ்சிய (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
-முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி …… மருகோனே

இராமர் இலங்கைக்குச் செல்லும் நிமித்தம், தென்கடலை வானர சேனைகளைக் கொண்டு பெரிய பெரிய குன்றுகளை கொணர்ந்து அணை புதுக்கினார் என்ற செய்தியை அருணகிரியார் சொல்லியுள்ளார்.

வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டப்பகுதியில் அத்தியாயம் 22இல் சேது பந்தனம் என்னும் பிரிவில் ஸ்ரீராமபிரானின் வானர சேனைகள் கூடி இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாலத்தைக் கட்டிய தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. வானர சேனைகளின் உதவியுடன் 34 கிலோமீட்டர் தூரமுள்ள பாலத்தை, நூற்றிமூன்று சிறிய குன்றுகளை இணைத்து ஐந்து நாள்களில் கட்டிமுடித்தார் ராமபிரான் என்று கூறப்படுகிறது.

ஏழாயிரம் ஆண்டுகளைத் தாண்டிய இந்தப் பாலம், உண்மையானது என்றும் இல்லை என்றும் இன்று வாதப் பிரதிவாதங்களைச் சந்தித்து வருகிறது.

ஸ்ரீராமர் எப்படி பாலத்தினை கட்டினார். அதற்கு வானர சேனைகள் எப்படி உதவின என்பதைக் குறித்த சுவையான புராணக்கதை வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. சீதையைக் கவர்ந்து சென்ற ராவணன், அவரை இலங்கையில்தான் சிறை வைத்திருக்கிறான் என்பதை அனுமன் மூலம் ராமர் அறிந்து கொண்டார்.

உடனே இந்தியாவின் ராமேஸ்வரத்தினை அடைந்து இலங்கையை அடையும் வழியைப் பற்றி யோசித்தார். கடலின் மீது ஒரு பாலம் அமைத்தாலன்றி, இலங்கையை அடையமுடியாது என்பதால், கடலில் ஒரு பாலம் அமைக்க விரும்பினார். ஆனால், பொங்கி வரும் அலைகளின்மீது பாலம் கட்டமுடியாது என்பதால், கடல் அரசனை வணங்கி, அலைகளை ஓய்ந்திருக்கச் செய்யும்படி வேண்டினார்.

rama sethu
rama sethu

வருணன் சற்று தாமதிக்கவே, கோபம் கொண்ட ராமபிரான் வில்லினை எடுத்து வருணனுடன் போர் செய்ய ஆயத்தமானார். உடனே, வருணபகவான் நேரில் தோன்றி ராமபிரானிடம் தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, கடல் அலைகளை ஓய்ந்திருக்கும்படிச் செய்தார். அலைகள் இல்லாத கடலின் மீது வானர சேனைகள் பாறைகளைக் கொண்டு வந்து போட்டு பாலம் கட்டத் தொடங்கின.

இந்தப் பணிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார் அனுமன். கடலில் போடும் பாறைகள் யாவும் நீரில் மூழ்கி மறைந்தன. இதனால் கடல் பாலம் கட்டும் பணி தாமதமானது. அப்போது ஸ்ரீராமரின் ஆணைப்படி வானரங்கள் கொண்டு வரும் பாறைகள் இறுதியாக நளன் என்ற வானரத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. நளன் கடலில் வீசிய பாறைகள் மிதந்து அப்படியே நின்றன. இதனால் பாலம் கட்டும் பணி விரைவாகி வானர சேனைகள் உற்சாகமாகின. இதனை மணிமேகலையில் மிக அழகாக சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுவார்.

ramasethu
ramasethu

மணிமேகலையில் காயசண்டிகை என்பவள் யானைப் பசி எனும் நோயால் வாடினள். அவள் மணிமேகலையிடத்திலே தனது பசி பற்றிப் பின் வருமாறு கூறினாள். ‘திருமால் தன் வடிவத்தை மறைத்துப் பூமியிலே இராமனாகத் தோன்றிக் கடலிலே அணை கட்டிய போது குரங்குகள் கொண்டுவந்து எறிந்த குன்றுகளை எல்லாம் கடல் விழுங்கி மேலும் மேலும் வேண்டி நின்றது போல” என்று தன் பசிக்கு உவமை கூறினாள்.

நெடியோன் மயங்கி கிலமிசைத் தோன்றி
அடலறு மூன்னீர் அடைத்த ஞான்று குரங்கு
கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு.
(மணிமேகலை 17 – 10-14)

அனுமன் கொண்டு வந்த பாறைகளை நளன் வாங்கி, ஒவ்வொரு கல்லிலும் ஸ்ரீராம் என எழுதினான் என்ற ஒரு கதை உண்டு. நளனோடு அதனுடைய நண்பரான நீலனும் இந்தப் பணியில் உற்சாகமாக ஈடுபட்டது.

இவ்விதம் பணிகள் நடந்துவந்தபோது, நளன் எறிந்த பாறைகள் மட்டுமே மிதப்பதைக் கண்ட லட்சுமணர் அதன் காரணம் என்னவென்று ஸ்ரீராமரை ஆச்சர்யத்தோடு கேட்டார்.

மாதவேந்திரர் என்ற மகாஞானி ஒரு சூரியகிரகணத்தன்று நீரில் முங்கி கிரகண தோஷநிவர்த்திக்காக நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நளன் என்ற இந்தக் குட்டி வானரம் மகிழ்ச்சி கொண்டது.

பிறந்ததிலிருந்தே சேட்டைகள் செய்து பலரை அவதிக்குள்ளாக்கும் இயல்பு கொண்ட வானரம் நளன். நீராடிக்கொண்டிருந்த ஞானியைக் கண்டதும் அது உற்சாகமாகி, குளத்தின் கரையிலிருந்த கற்களை வீசி, அது முங்கும்போது உண்டான சத்தமும் சாரலும் கண்டு சிரித்தது.

இதனால், முனிவரால் மந்திரங்களை முறையாக உச்சரிக்கமுடியாமல் போனது. அந்த வானரத்தை விரட்டினார். பலமுறை விரட்டியும் நளன் போகவில்லை. ஞானிக்குக் கோபம் எழுந்தாலும் அதை அடக்கிக்கொண்டார்.

மந்திரம் சொல்லும்போது கோபம் கொண்டு சாபம் விட்டால் மந்திரசக்தி குறைந்து விடும் என்பது ஐதீகம். இதனால், இனி நீ எறியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதந்து கிடக்கட்டும் என்று சொல்லி மந்திரத்தைத் தொடர்ந்தார். அதன்படி நளன் எறிந்த கற்கள் மிதக்கத் தொடங்கின. கல் மூழ்காமலும் சத்தம் வராமலும் போனதால் சுவாரஸ்யம் குறைந்து நளன் அங்கிருந்து சென்றுவிட்டது.

அன்று முதல் நளன் எறியும் எந்தக் கல்லும் மிதக்கும் என்பதாலேயே இந்தப் பாலத்தின் பணிகள் ஒழுங்காக நடைபெறுகின்றன” என்று ஸ்ரீராமர் விளக்கினார். இப்படி வானரசேனைகள் கூடி, கண்துஞ்சாது கடமை செய்து ஐந்து நாள்களில் சேதுபந்தனம் என்னும் ராமர் பாலத்தைக் கட்டி முடித்தன.

மிதக்கும் அந்த அழகிய பாலத்தைக் கண்டு ராமபிரான் மகிழ்ந்து வருணபகவான் தனக்கு பரிசளித்த நவரத்தின மாலையை நளனுக்கு அளித்தார் என்றும் வால்மீகி ராமாயணம் தெரிவிக்கிறது.

திருப்புகழ் கதைகள்: இராம சேது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply