ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்!

ஆன்மிக கட்டுரைகள் ஸ்தோத்திரங்கள்

இன்றுஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
நரசிம்மர் மந்திரம்!

ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.

இந்த ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.

1.வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

பொருள்:
பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்………

2.ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்!
நகாக்ரை சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

பொருள்:
திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்………

3.பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

பொருள்:
விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்………

4.ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

பொருள்:
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்……..

5.ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்!!

பொருள்:
சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்…….

6.நரவத் ஸிம்ஹவச் சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந!
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

பொருள்:
பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்……

7.யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்!!

பொருள்:
உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்…….

8.ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே!
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்!!

பொருள்:
அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்…….

9.ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!!

பொருள்:
மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்………

10.நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்!
த்யக்தது கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

பொருள்:
எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்…….

11.தாஸபூதா: ஸ்வத ஸர்வே
ஹ்யாத்மாந பாமாத்மந!
அதோஹமபி தே தாஸ:
இதி மத்வா நமாம்யஹம்!!

பொருள்:
இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்…….

12.சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!

பொருள்:
ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்……..

13.உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!!

பொருள்:
கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்……..

Leave a Reply