சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.

சபரிமலை செல்லும் பிரதான வழிகளில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எருமேலியில் இருந்து அழுதா நதி, பெரியானைவட்டம் வழியாகச் செல்லும் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலான பெருவழிப்பாதை, சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான பாதையாக உள்ளது.

கடுமையான ஏற்ற இறக்கங்களும் ஆறுகளும் இயற்கை எழில் கொஞ்சும் வளங்களும் கொண்ட இந்தப் பெருவழிப் பாதையில் பக்தர்கள் கடந்த கார்த்திகை மண்டல பூஜை துவங்கிய நாள் முதல் பயணிக்கத் தொடங்கினர். தற்போது வரை இந்தப் பெருவழி பாதையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயணித்து வந்தனர்.

சபரிமலைக்கு பெருவழிப்பாதையில் நடைப்பயணமாக மேற்கொள்ளும் பக்தர்கள், எரிமேலிக்கு வந்து, எரிமேலி சாஸ்தாவுக்கு பேட்டை துள்ளி, பிரசித்தி பெற்ற மணிமாலா நதியில் நீராடி, தங்களது பெருவழிப்பாதை பயணத்தை தொடங்குவார்கள்.

பெருவழிப் பாதையில் மிக முக்கிய வன இடங்களாக, கருமலை, அழுதாநதி, சிறியானை வட்டம், பெரிய யானை வட்டம் உட்பட பல முக்கிய பகுதிகள் உள்ளன. கல்லிடம்குன்று என பல மலைப்பகுதிகளும் உள்ளன. இங்கே பக்தர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கு கேரள வனத்துறையினர் போதிய பாதுகாப்பு அளிப்பதும், கேரள வன சமிதி குழுக்கள் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு உணவுகளை மலிவான விலையில் வழங்குவதும் பிரதான கொள்கையாக இருந்தது. மேலும், முக்கிய இடங்களில் ஐயப்ப சேவா சங்கத்தினரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வந்தனர். திருவாங்கூர் தேவசம் போர்டு முக்கிய மையங்களில் மருத்துவ முகாம்களும் நடத்தி வந்தது.

இந்த பெருவழிப்பாதை கடந்த இரு மாதங்களாக பெரும் பரபரப்புடன் இரவு பகலாக சரண கோஷம் மட்டுமே கேட்கும் வகையில் பரபரப்பாக இருந்தது. தற்போது சபரிமலையில் ஜனவரி 14 மகரஜோதி விழா முடிந்ததும், இந்த நடைபாதை அடைக்கப்பட்டு விட்டது. இதனால் தற்போது இந்த பெருவழிப் பாதையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.

பக்தர்களின் சரண கோஷம் முழங்கிய இந்தப் பெருவழிப்பாதையில் தற்போது பறவைகளின் சத்தமும் யானை புலி போன்றவைகளின் சத்தமும்தான் கேட்கத் துவங்கியுள்ளது. இனி இந்தப் பெருவழிப்பாதையில், அடுத்த கார்த்திகை மண்டல பூஜை விழாக்காலத்தில்தான் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், பம்பை நதி வழியில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பம்பையில் இருந்து நீலிமலை ஏற்றம், சரங்குத்தி, சபரிபீடம் வழியாக பக்தர்கள் செல்கின்றனர். உப்பு பாறை வழி பாதை தற்போது மூடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பம்பையில் வரும் 19ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். 20 ஆம் தேதி காலை நடை அடைக்கப்படுவதால், சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பந்தள மன்னர் பிரதிநிதி மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்வார்.

Leave a Reply