அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்!

செய்திகள்
– Advertisement –

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

மதுரையில் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

தேர்த் திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை 6.30 மணிக்கு மேல் பெருமாள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. தேரை இழுக்க அங்கே திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோட்டை வாசல்களைக் கடந்து 4 ரத வீதிகளிலும் அசைந்தாடி வந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு கள்ளழகர் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கைம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

தேரோட்ட விழா முடிந்து இன்று இரவு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. ஆக.2ம் தேதி நாளை புஷ்ப சப்பரம், 3-ம் தேதி ஆடி 18-ஆம் பெருக்கு உற்சவ சாந்தி ஆகியவை நடைபெறும்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது…

முன்னதாக, அழகர் கோவிலில் ஆடி தேரோட்டத்தை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு இன்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் வந்து பெருமாளை தரிசித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை பெரியார் நிலையம் மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் மதுரை, மேலூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Leave a Reply