ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும் 28ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12 அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக நேற்று முன் தினம் இரவு குண்டம் தயாரானது.
இதை தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி அளவில், தெப்பக்குளத்தில் இருந்து, மேள தாளம் முழங்க அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 4 மணியளவில் புனித நீராடி, கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். குண்டத்தின் இரு பகுதிகளிலும் தீயணைப்புத் துறை வீரர்கள் பாதுகாப்புப்பாக நிறுத்தப்பட்டு, பக்தர்கள் முறையாக குண்டமிறங்க உதவினர்.
மேலும், காவல்துறையினர், அதிரடிப் படையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருநங்கைகள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்கிய பின், கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டது.
குண்டம் விழாவையொட்டி, பண்ணாரி அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஈரோடு எஸ்பி சசி மோகன் தலைமையில், 1650 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பண்ணாரி – திம்பம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை (5-ம் தேதி) புஷ்பரத ஊர்வலமும், 6-ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவும், 7-ம் தேதி தங்கரத புறப்பாடும் நடக்கிறது. வரும் 10- தேதி மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.