அறப்பளீஸ்வர சதகம்: திருமகள் இருக்கிமிடம்..!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

திருமகள் இருப்பிடம்

நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,
நாகரிகர் மாமனை யிலே,
நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
நறைகொண்ட பைந்துள விலே,
கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
கல்யாண வாயில் தனிலே,
கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
கதிபெறு விளக்க தனிலே,
பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
பொய்யாத பேர்பா லிலே,
பூந்தடந் தன்னிலே, பாற்குடத் திடையிலே
போதகத் தின்சிர சிலே
அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

தலைவனே!, எமது தேவனே!, அழகிய குதிரையின் முகத்திலும்,
அரசரின் இடத்திலும், நாகரிகம் அறிந்தவர்களின் வீட்டிலும், தாமரை மலரிலும், வில்வ மரத்திலும், மணமுடைய பசிய திருத்துழாயிலும், கற்புடைய மங்கையரின் வடிவத்திலும், கடலிலும், துகிற்கொடியிலும், திருமண வீட்டின் வாயிலிலும், காவலுடைய நகரத்திலும், நல்ல செந்நெல் விளைவிலும், அழகுறும் சங்கிலும், பெரியோர் மொழியிலும், பொய் மொழியாதவரிடத்திலும், மலர்ப்
பொய்கையிலும், பாற் குடத்திலும், யானையின் தலையிலும், இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமங்கை வாழும்
இடம் என்பர் அறிஞர்.

திருமகள் பரியின் முகம் முதலான அழகிய இடங்களில் இருப்பாள்.

Leave a Reply