அறப்பளீஸ்வர சதகம்: இவற்றில் உயர்ந்தது இல்லை..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

உயர்வு இல்லாதவை

வேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமக
மேருவுக்கு அதிக மலையும்,
வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிக
மேதினியில் ஓடு நதியும்
சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,
சூழ்கனற் கதிக சுசியும்
தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
சுருதிக் குயர்ந்த கலையும்,
ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும், நுகர்
அன்னதா னந்த னிலும்ஓர்
அதிகதா னமுமில்லை என்றுபல நூலெலாம்
ஆராய்ந்த பேரு ரைசெய்வார்!
ஆதவன் பிரமன்விண் ணவர் முனிவர் பரவவரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.

கதிரவன் நான்முகன் வானவர் முனிவர் முதலோர் வாழ்த்த வரும் முதல்வனே!, அருமை தேவனே!,
மறையவர்களுக்கு மேலான சாதியும், பொன்மயமான மாமேருவினும் பெரிய மலையும், உலகிலே வெண்மையான அலைகளை வீசி ஓடும் கங்கையாற்றினும் மேலாக ஓடும் ஆறும், ஒளியைத் தரும் ஞாயிற்றினும் மேம்பட்ட ஒளிப்பொருளும், சூழும் தீயினும் மேம்பட்ட தூய பொருளும், தூயவரான பெற்றோரினும் மேலான தெய்வமும், வேதத்தினும் மேம்பட்ட நூல்களும், முதன்மையான வடமொழியினும் உயர்ந்த மொழியும், உண்ணப்படும் உணவுக்கொடையினும்
உயர்ந்த ஒரு கொடையும், இல்லையெனப் பல நூல்களையும் ஆராய்ச்சி
செய்தவர்கள் கூறுவார்கள்.

ஜாதியில் வேதியர், ஆற்றில் கங்கை, மலையில் மேரு, தானத்தில் அன்னதானம், மொழியில் வடமொழியாம் சமஸ்கிருதம், ஒளியில் சூரியன், தூய பொருளில் தீ, தெய்வத்துள் பெற்றோர், நூல்களில் வேதம்.

 உயர்ந்தவை இவையே.. இவற்றை விட உயர்ந்தது இல்லை என்பதாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply