e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-24.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 24
துணைவேந்தராகவும் ஆகலாம்
– வேதா டி.ஸ்ரீதரன் –
அண்ணாவைப் பார்த்து நான் வியந்த விஷயங்களில் அவரது ஆங்கில அறிவும் ஒன்று.
தமிழிலும் அவருக்கு மிகுந்த அறிவாற்றல் உண்டு. அண்ணாவால் திருப்புகழைப் பிழையில்லாமல் வாசித்து, அதற்குப் பொருளும் சொல்ல முடியும். திருப்புகழைப் பிழையில்லாமல் வாசிப்பதற்கே அசாத்தியப் பயிற்சி தேவை. பொருள் சொல்வதற்குத் தமிழில் ஆழ்ந்த அறிவு தேவை. பள்ளி நாட்களுக்குப் பின் அவருக்குத் தமிழ் அன்னிய பாஷை ஆகி விட்டதே! எங்கிருந்து இவ்வளவு தமிழ் கற்றுக் கொண்டார்?
சம்ஸ்கிருதமும் அப்படியே! அவர் முறைப்படி சம்ஸ்கிருதம் பயின்றவர் அல்ல. ஆனால், சம்ஸ்கிருத நூல்களை அவரால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
அண்ணாவின் எழுத்துப் பணிகளுக்கு சாஸ்திர அறிவும் முக்கியத் தேவை. சாஸ்திரங்களிலும் அவருக்குத் தேர்ச்சி இருந்தது.
அவரது மொழியாற்றலுக்கு உண்மையான காரணம் பள்ளி, கல்லூரி அல்லது பாடசாலைப் படிப்பு அல்ல மாறாக, தனது உழைப்பின் மூலம் அவராகவே சம்பாதித்துக் கொண்டது.
தெய்வத்தின் குரல் நூல் தொகுதிகளை உருவாக்குவதற்காகத் தனி ஆளாக அவர் உழைத்த உழைப்பு ஒருபுறம் என்றால், தெய்வத்தின் குரலுக்குத் தேவையான அறிவாற்றலைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.
மொழியறிவு என்பது மூளை சார்ந்தது. இலக்கிய ரசனை என்பது இதயம் சார்ந்தது. மொழியறிவு மிக்கவர்கள் எல்லோருக்கும் இலக்கிய ரசனை வாய்த்து விடுவதில்லை. இலக்கிய ரசனை உள்ளவர்கள் எல்லோரும் மொழியறிவைச் சம்பாதித்துக் கொள்ள முடிவதும் இல்லை. அண்ணாவிடம் செறிந்த மொழியாற்றலும், நுட்பமான இலக்கிய ரசனையும் ஒருசேர இருந்தன.
ஞானப் பொருளை சத், சித், ஆனந்தம் என்று விளக்குவது வேதாந்த வழி. காலத்துக்கு அப்பாற்பட்ட இருப்பு, அனைத்துமாகிய அறிவு, குறைவற்ற பூரணமான நித்தியமான ஆனந்தம் என்பது இதற்குச் சொல்லப்படும் விளக்கம்.
ஆனால், தனக்கு வேறான எதுவுமே இல்லை என்று அனைத்தையும் தானேயாகப் பார்ப்பவனுக்கு இருக்கும் அன்பு இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தழுவியது அல்லவா? ஞானம் என்பதே ப்ரேமை தானே?
இதைப் பற்றி வேதாந்திகள் அதிகம் பேசுவதில்லை.
ஆனால், அண்ணாவின் எழுத்தில் இந்த ப்ரேமை அம்சம் தான் தூக்கலாக இருக்கும்.
‘‘My Father alone, nothing else, nobody else’’ என்று தன் அப்பாவிடம் பரிபூரணமாகக் கரைந்து விட்ட அந்தப் ‘‘பிச்சைக்கார’’ரைப் போலவே, அம்பாள் என்கிற ஒற்றைப் புள்ளியில் கரைந்து விட்டவர் அண்ணா என்பது தான் இந்த ப்ரேமை அம்சத்துக்கான முக்கியக் காரணம். இருந்தாலும், அவரது இலக்கிய ரசனையும் ஒரு துணைக் காரணம்.
ஆனால், மொழியாற்றல் மிக்க இந்த மாமனிதர் கல்லூரியில் கவிதைப் பாடத்தில் ஃபெயில் ஆனார் என்பது ஆச்சரியம் அல்லவா?
உலகாயத விஷயங்களுக்கு அப்பாற்பட்ட மெடாஃபிசிகல் வகைக் கவிதைகளிலேயே அண்ணாவுக்கு நாட்டம் அதிகம். கவிதைப் பாடத்தில் தனக்குப் பிடித்த கவிதைகளை மட்டுமே அவர் ஆழ்ந்து படித்திருந்தார். பரீட்சையில் அவற்றில் இருந்து ஒரு கேள்வி கூடக் கேட்கப்படவில்லை. அண்ணா, கேள்வித் தாளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, தான் படித்த கவிதைகளைப் பற்றி அழகாக எழுதி வைத்தார்.
கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லாததால். விடைத்தாள் திருத்துபவர். அவற்றுக்கு மதிப்பெண் வழங்கவில்லை. அண்ணா ஃபெயில் ஆகி விட்டார்.
அந்த நாட்களில் ஹானர்ஸ் தேர்வுகளில் விடைத்தாள்கள் திருத்தி முடித்த பின்னர் அனைத்து விடைத்தாள்களையும் ஒரு கமிட்டி பரிசீலிக்கும். அண்ணாவின் விடைத்தாளைப் பரிசோதித்த கமிட்டித் தலைவர், அதில் காணப்பட்ட எழுத்து நடையைப் பார்த்து வியந்தார். ‘‘இந்தச் சிறு வயதில் இத்தகைய உன்னதமான எழுத்து நடை கொண்ட இந்த மாணவர் மிகுந்த அறிவுத் திறன் கொண்டவராகத் தான் இருக்க முடியும், இவர் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த இடத்துக்கு வருவார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. யார் கண்டது! இவர் நமது யுனிவர்சிடிக்கே துணைவேந்தராகவும் ஆகலாம்!! (1950களில் நடந்தது இது. அப்போதெல்லாம் துணைவேந்தர்கள் அறிவாளிகளாகவும் நேர்மையாளர்களாகவும் இருந்தார்கள்.) இப்படிப்பட்ட ஒருவரை ஃபெயில் பண்ணிய கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்’’ என்று சொல்லி அண்ணாவுக்கு பாஸ் மார்க் போடச் சொல்லி விட்டார்.
உண்மையில், அண்ணாவின் அறிவாற்றலில் prodigical influence (இள வயதிலேயே முதிர்ந்த அறிவாற்றல்) இருந்திருக்குமோ என்று பல தடவை நினைத்திருக்கிறேன். அதைப் பற்றி அவரிடம் நான் கேட்டதில்லை. ஆயினும், நான் நினைத்தது சரியே என்பது போல, பிற்காலத்தில் தன்னைப் பற்றி அண்ணா ஒரு விஷயத்தைத் தெரிவித்தார்
அண்ணாவுக்கு இரண்டு வயது ஆகும்போதே ராகங்களின் பெயர்கள் பரிசயமான விஷயமாகத் தெரிந்ததாம். மூன்று வயதில் எந்தவொரு பாடலைக் கேட்டாலும் அது என்ன ராகம் என்பதைக் கண்டு கொள்ள முடிந்தது. நான்கு வயதில், யாராவது ஏதாவது பாடலை ஹம் பண்ணினால் கூட அதன் ராகத்தைச் சொல்ல முடிந்ததாம். ஐந்து வயது ஆகும் போது அவரால் எந்த ராகத்தையும் ஹம் பண்ண முடிந்ததாம்.
இது எப்படி சாத்தியமானது என்று நான் அவரிடம் கேட்டேன். ‘‘எனக்குத் தெரியல. ஏதோ பூர்வ ஜன்ம வாசனை-ன்னு சொல்றாளே, அப்படி இருக்குமோ, என்னவோ!’’ என்று தெரிவித்தார்.
அண்ணா என் உடைமைப் பொருள் (24): துணைவேந்தராகவும் ஆகலாம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.