84. சூதாடாதே! உழைத்து முன்னேறு!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“அக்ஷைர்மா தீவ்ய: க்ருஷிமத் க்ருஷஸ்ய” – ருக்வேதம்.
“சூதாடாதே! வாழ்க்கைக்காக உழை!”
நாம் கஷ்டப்படாமல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவோம். உடலுழைப்போ புத்தி ஆற்றலோ செலவின்றி சுகப்பட வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்காக பல வழிகளில் முயற்சிப்போம். கஷ்டப்பட்டு உழைப்பதற்கு பதில் வேறு வழிகளில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையோடு அக்கிரமச் செயல்களில் ஈடுபடுவோர் பலர்.
ஆனால் பாரதீய கலாச்சாரம் உழைப்புக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. சிரமப்பட்டு உழை. அதிலிருந்து கிடைத்ததைக் கொண்டு சுகப்படு என்று அறிவுறுத்துகிறது.
நாம் பெற்ற இந்த உடலும் புலன்களில் ஆற்றலும் உழைப்பதற்காகவே ஏற்பட்டவை.
சூதாட்டம் விளையாடி செல்வம் சேர்க்காமல் உழைத்து சம்பாதி என்று வேதம் கூறுவதன் பொருள்… அநியாயமாக, அக்கிரமமாக சம்பாதிப்பதற்கு என்றுமே முயற்சிக்கக் கூடாது என்பதே!
அதிக செல்வம் சேர வேண்டுமென்று லாட்டரி வாங்குவார்கள். ரேஸக்கு செல்வார்கள். சூதாடுவார்கள். அரசியல் ஊழலில் ஈடுபடுவார்கள். இதெல்லாம் கூட சூதாட்டத்தின் கீழ் வருபவையே. அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்வதை வேதக் கலாச்சாரம் கடிந்து கொள்கிறது.
தர்மம் என்றால் செயல்களால் நிறைந்தது. செயல் என்றால் சிரமப்பட்டு உழைப்பது. நம் வாழ்க்கைக்கு உழவையும் உழைப்பையும் மார்க்கமாக ஏற்கச் சொல்கிறாள் வேதமாதா.
“க்ருஷ்யைத்வா க்ஷேமாயத்வா ரையைத்வா போஷாயத்வா” என்ற சுக்ல யஜுர் வேத வாக்கியம் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நன்மை செல்வம் வளர்ச்சி இம்மூன்றும் உழைப்பு என்ற அடித்தளத்தின் மீது அமைந்தால்தான் வலிமையாக சாஸ்வதமாக விளங்கும். உழைப்பின்றி சுலப வழிகளில் வரும் நன்மையும் செல்வமும் போஷாக்கும் திடமாகவும் ஸ்திரமாகவும் இருக்காது என்றும் அவை தற்காலிக சுகமே என்றும் அவ்வாறு மோசத்தால் சாதிக்கும் செல்வம் விரைவிலேயே அழிந்துவிடும் என்றும் வேதம் எச்சரிக்கிறது.
நம் கலாச்சாரம் சோம்பலை உபதேசிக்கிறது என்றும் கர்ம சித்தாந்தத்தின் மூலம் சோம்பேறிகளை உருவாக்குகிறது என்றும் விமர்சிப்பவர்கள் உள்ளனர்.அவர்கள் வேதம் கூறிய இந்த வாக்கியத்தின் பக்கம் செவிகளை வைப்பது நல்லது.
“தே மனுஷ்யா: க்ருஷிஞ்ச ஸஸ்யஞ்ச உபஜீவந்தி” என்பது அதர்வண வேத வாக்கு. உழைப்பும் அதனால் கிடைக்கும் பலனுமே வேண்டியது. இவ்விரண்டோடு வாழ்வதே மானுட தர்மம். இதனையே சிரமம்- சாபல்யம் என்றனர்.
உடல் என்பது தர்மத்தை கடைப்பிடிப்பதற்கு முதன்மைக் கருவி என்று கூறிய வேத கலாச்சாரத்தின்படி நம் புலன்களும் புத்தியும் நன்றாக உழைக்கவேண்டும். அது தார்மீகமான உழைப்பாக இருக்க வேண்டும். அதனையே க்ருஷி என்றனர்.
நம்மைச் சுற்றியுள்ள இயற்கை பல செல்வங்களை சுமந்துள்ளது. உழைப்பினால் மட்டுமே அந்த செல்வங்களை வெளிக்கொணர முடியும். அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமையே க்ருஷி. அதன் பயனே வளமை.
இந்த பூமி உழவால் மட்டுமே வாழ்கிறது. நம்மையும் வாழ வைக்கிறது என்று அதர்வண வேதம் தெரிவிக்கிறது. “ஸா நோ பூமிர்வர்தயத் வர்தமானா” – சிறப்பான உழைப்பால் மட்டுமே பூமியில் பன்முக வளர்ச்சி சாத்தியமாகும். உழைப்பால் உயரும் பூமி, உழைப்பவர்களையும் உயர்த்துகிறது.
உழைப்பதை விட்டு குறுக்கு வழிகளில் சம்பாதிப்பது விஸ்வ நியமத்திற்கு கேடு விளைவிக்கும். விஸ்வ நியமங்களை அலட்சியப்படுத்துவது பாவம் எனப்படுகிறது. அதன் பலனே துயரம்.
“நோ ராஜானி க்ருஷிம் தநோது” போன்ற வேத வாக்கியங்கள் மூலம் அரசாளுபவன் மக்களை உழைப்பவர்களாக முறைப்படுத்த வேண்டும் என்ற கருத்து தெளிவாகிறது. அது தானே தவிர, மக்களை சோம்பேறிகளாக்கும் அதிர்ஷ்ட வியாபாரங்களை உற்சாகப்படுத்துவது அரசாங்கத்திற்கு தகுந்ததல்ல.
தர்மத்தை கடைப்பிடிப்பதிலும விதிக்கப்பட்ட கடமைகளை ஆற்றுவதிலும் சோர்வோ வாய்தா போடுவதோ சரியல்ல.
உழைப்புக்கு மந்தம் அலட்சியம் சோம்பல் போன்ற குணங்களே எதிரிகள். அவற்றை நெருங்க விடாமல் சிரமப்பட்டு உழை என்று போதிக்கிறது வைதிக மதம். அதனால்தான் “க்ருஷிதோ நாஸ்தி துர்பிக்ஷம்” என்றனர் மகரிஷிகள்.
நம் புத்தியும் உடலும் தினமும் சைதன்யத்தோடு கூடியதாக இயங்க வேண்டும். சமுதாயம், இயற்கை இவற்றின் சாசுவதமான தீர்க்க கால பிரயோஜனங்களுக்கு தீங்கு நேராமல், புதிய கண்டுபிடிப்புகளோடு தார்மிகமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் பன்முக வளர்ச்சி என்பது எளிதாக சாத்தியமாகும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 84. சூதாடாதே! உழைத்து முன்னேறு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.