நித்ய பந்தம் என்பதை மறந்த மனிதன்!

ஆன்மிக கட்டுரைகள்
– Advertisement –


Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

— குச்சனூர் கோவிந்தராஜன் —


இறைவனால் படைக்கப்பட்ட உலகம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே!. இவ்வுலகம் மனிதன் தவிர்த்துப் பிற உயிர்களால் நிலை தடுமாறுவதில்லை மனிதனால் இயல்பினை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதற்கு காரணம் இறைவனால் படைக்கப்பட்டவன் என்ற போதும் மனிதன் தன் சுயநலத்திற்காக சிதைக்க முயல்கிறான். அதற்கு காரணம் மனிதன் நித்திய பந்தம் எனும் சொற்களின் பொருள்களை மறந்து போனது தான் என்றால் மிகையில்லை.

நித்திய பந்தம் என்றால் என்ன? நித்தியம் என்றால்? இன்று நாம் பயன்படுத்துகிற ஏ டி எம் 24 × 7 என்பது போல் என எளிதில் புரிந்து கொள்ள உதவும் உதாரணமாக ச் சொல்லலாம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்கள் கூட பழுதுபட்டால் 24 × 7 வேலை செய்யாது , ஆனால், ஆன்மீகத்தில் நொடியல்ல நொடியை ஆயிரம் கூறிட்டு வரும் காலம் கூட விலகாது பிணைந்தே இருப்பது ஆகும்.

நித்தியம் என்றால் எப்பொழுதும் இணைந்து இருப்பது என்பதாகும். பந்தம் என்றால் என்ன? பந்தம் என்ற சொல்லிற்கு உறவு, முடிச்சு, பிணைத்தல், இணைத்தல், விளக்கு உட்பட மேலும் பல பொருள்கள் இருக்கின்றன. உறவு, பிணைத்தல், விளக்கு என்ற மூன்று பொருளோடு நம் வாழ்வியலுக்கு எப்படி பொருந்துகின்றன என்பதை அறிவோம்.

எப்பொழுதும் இணைந்திருக்கும் சொந்தம் எது? எப்பொழுதும் நம்மை இணைக்கும் இணைப்பு எது? எப்பொழுதும் நம்முடன் இருக்கும் விளக்கு எது? (வழிகாட்டி, ஒளி) என்ற மூன்றினையும் நாம் புரிந்து கொண்டோமானால் நாம் இறைவன் படைத்த இவ்வுலகில் ஆனந்தமாய் எப்பொழுதும் வாழலாம். நம்மோடு இணைந்து இருக்கும் சொந்தங்கள் என்றால் அவை அப்பா, அம்மா, உடன்பிறந்தார், நண்பர்கள் அல்ல இவர்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் இணைந்தவர்கள் முந்தைய ஜென்மத்திலும் பின்வரும் ஜென்மத்திலும் உடன் வருவார்களா என்றால்? தெரியாது சிலர் வரலாம் வராமலும் போகலாம். தவிர வாழும் போது கூட நம்மோடு எப்போதும் வருவதும் இல்லை .

ஆனால் ஒரு சொந்தம் எப்பொழுதும் எப்பிறவியிலும் எல்லா வடிவிலும் நம்மோடு வரும் சொந்தம் உண்டு என்றால் அது இறைவன் எனும் சொந்தமே. அதனால்தான் மகாகவி பாரதி கண்ணனை உலகில் உள்ள அனைத்து உறவுமாய் கருதி பாடினார். குழந்தையாய், தாயாய், தந்தையாய், குருவாய், சீடனாய், வேலைக்காரனாய், காதலியாய், நண்பனாய் என அனைத்து உறவுமாய் இறைவனைப் பார்த்து ஆனந்தப்பட்டார். எதிரியை கூட நேசிக்கச் சொன்னார். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்ற பாடலில்….., இப்படி எக்காலமும் எல்லா உறவுமுறையுமாய் நம்மோடு எப்பொழுதும் பிணைந்திருக்கும் இறைவனை எண்ணி செயல்பட்டால் நம்மிடம் பிழை ஏற்படுமா? நிலை மாறுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்மை எப்போதும் இணைக்கும் இணைப்பு
எது என்ற வினாவிற்கு விடை இறைவன் என்பதே அவன் தான் நம்மை எல்லாருடனும் எல்லாவற்றோடும் இணைக்கிறான். அவனோடு இணைந்தவர்கள் நான் என்பதை உணர வேண்டும். இறைவன் பஞ்சபூதங்களாய் இருக்கிறார் நமது செயல்கள் அனைத்திற்கும் வாழ்வதற்கும் இந்த பஞ்ச பூதங்கள் மிக அவசியம்.

பஞ்ச பூதங்கள் வேறு என்று நாம் எண்ணவே முடியாது இறைவன் அகத்தில் மட்டும் அல்ல நமது புறத்திலும் பஞ்ச பூதங்களாய் நம்மோடு இணைந்து இருக்கிறான். அதனால் நம்மோடு எப்போதும் இணைந்தே இருப்பது இறைவன் என்பதை உணர்ந்து செயல்பட்டால் , எந்த சுற்றுச் சூழலையும் நாம் வெறுக்க மாட்டோம். மாறாக போற்றுவோம், பாதுகாப்போம். நமது அன்றாட அலுவல்கள் ஆனந்தமாய் தொடரும்.

இறைவனை விளக்காய் விளக்கின் விளக்கம் யாது ? எனில் விளங்காததை விளக்குவதே விளக்கின் விளக்கமாகும் விளக்கு என்பது ஞான ஒளியின் குறியீடு.

‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

இறைவன் ஒளியாய் ஒளியில் நிறைந்து இருக்கிறான். இத்தகைய இறைவன் நமக்கு தேவையான இடங்களில் வழிகாட்டியாய் விளங்குகிறான். ஆச்சாரியர்கள், ரிஷிகள், குருமார்கள் மூலம் உரையாய் உரைநடையாய் செயல்பாடுகளாய் நமக்கு விளக்கு இருளில் வழி காட்டுவது போல் வாழ்க்கையில் வழிகாட்டி விளக்குகிறார்கள். நம்மை வழி நடத்துகிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல்கள் இறைவனின் ஏற்பாட்டினால் ஏற்பட்டது என்பதை உணர்ந்து நாம் அவர்கள் வழி நடந்தால் வாழ்க்கை வளமாகும். நலமாகும். நாளும் நன்மை விளையும்.

நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இறைவன் என்பதை உணர்த்தவே நம் புராணங்கள் இதிகாசங்கள் சாஸ்திரங்கள் இவற்றினை வழிபடும் பொருளாக்கி நாம் வணங்கும் செடி, இலை, பூ, காய், கனி, மரம், பறவைகள், விலங்குகள் என அனைத்தும் இறைவன் நிறைந்திருக்கிறான் என உணர்த்தி அவற்றை பாதுகாக்க ஓர் அறம் அமைத்தார்கள். நாம் அவற்றை உடைத்ததாலேயே பல இயற்கை வேறுபாடுகள் ஏற்பட்டு நாம் பல துன்பங்களை சந்திக்கிறோம் நம்மோடு நித்திய பந்தத்தில் இருக்கும் இறைவனை இறைவனோடு இறைவனாய் உள்ள உலகத்தோடும் இணைந்து வாழ்வோம் வளம் பெறுவோம்.
மேலும் இவ்வுண்மையை நன்கு உணர திருமுறைகளையும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தையும் பயின்று உணர்வோம்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

— மாணிக்கவாசகர்.திருவாசகம்

இலனது உடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்தவந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

— நம்மாழ்வார் திருவாய்மொழி
Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply