திருப்புகழ்க் கதைகள் பகுதி – 295
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கறைபடும் உடம்பு – சுவாமி மலை
சரியை, கிரியை, யோகம்
இறைவனின் திருவருளால் மனிதப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் அவனை எண்ணி, அவன் தாள் வணங்கி அவனை அடைவதையே லட்சியமாகக் கொள்ள வேண்டும். கர்ம வினைப்பயன்களின் காரணமாகப் பிறப்பெடுத்த நாம், கர்ம வினைகளை ஒழித்து, மீண்டும் பிறவாப் பேரின்ப நிலையை எட்டுவதற்கு சைவ சமயம் நான்கு பெரும் வழிகளை நமக்கு போதிக்கிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு முறைகளில் இறைவனை அடையலாம் என்பதால், சைவம் போதிக்கும் இந்த நான்கு வழிகள் ‘சைவ நாற்பாதங்கள்’ என அழைக்கப்படுகின்றன. `மிக மிக எளிமையான இந்த வழிகளால் ஈசனைப் பற்றிக்கொண்டு பிறவிப்பயனை அடையலாம்’ என்று ஞானியர்களும், யோகியர்களும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.
சரியை என்பது தாச மார்க்கம், அதாவது தொண்டு செய்து வாழ்தல். ‘எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதும், ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படி’ என்கிறார் திருமூலர். ‘எல்லாமே கடவுள் என்று உணர்ந்து கருணையோடு வாழ்வதே இறைவனை அடையும் சரியை வழி’ என்கிறார் வள்ளலார். திருக்கோயில்களில் செய்யும் தொண்டு, சிவனடியார்களை உபசரித்தல், ஏழைகளுக்கு உதவுதல் எல்லாமே சரியை மார்க்கம்தான். சரியையில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. சரியை என்ற வழியில் ஈசனை அடைந்த மகாஞானி திருநாவுக்கரச பெருமான். இவரே சரியை வழி பக்திக்கு மிகச் சரியான உதாரண புருஷர்.
கிரியை என்பது சற்புத்திர மார்க்கமாகும். மிகச் சரியான வழிமுறைகளுடன் பூஜைகள் செய்து இறைவனை அடையும் முறையே கிரியை. குருமார்களின் வழியே தீட்சை பெற்று ஈசனுக்கான சகல பூஜைகளையும் செய்வித்தல், மனதாலும் உடலாலும் எப்போதும் ஈசனை பூஜித்துக்கொண்டே இருத்தலும் இங்கு முக்கியமானது. ஞானசம்பந்த பெருமான் கிரியை வழியில் இறைவனை பூஜித்த மகாஞானி எனப் போற்றப்படுகிறார்.
யோகம் என்பது சகா மார்க்கமாகும். ஆழ்ந்த தவத்தால் சிவனோடு கலந்து அவரோடு தோழமைகொண்டு மேற்கொள்ளும் தவ வாழ்வே யோக மார்க்கம். இயமம், நியமம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், தவம், சமாதி ஆகிய எட்டு நிலைகளில் படிப்படியாகத் தேர்ச்சி பெற்று ஈசனை அடையும் முறையே யோகம். தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி பெருமான் ஈசனோடு தவத்தால் கலந்து வாழ்ந்தார். அவரே யோக மார்க்கத்தில் சிறப்பானவராகக் கூறப்படுகிறார்.
ஞானம் என்பது சன்மார்க்கம் எனப்படுகிறது. மேற்கூறிய எல்லா வழிகளிலும் ஈசனை வணங்கிய ஒருவர் இறுதியாக, எங்கும் நிறைந்த பரப்பிரம்மமே ஈசன் என்பதைத் தெளியும் நிலையே ஞான மார்க்கம். ஈசனே குருவாக வந்து உபதேசிக்கும் நிலையிலேயே ஞான மார்க்கம் கூடும்’ என்கிறார்கள் பெரியோர்கள். சிந்தித்தல், கேட்டல், புரிந்துகொள்ளுதல், நிஷ்டையில் கலத்தல் என்ற நான்கு வழிகளில் ஞானம் கூடும். தாயுமான ஸ்வாமிகள் இந்த மார்க்கத்தைக்
கனி’ என்றே சிறப்பித்துப் பாடினார். திருப்பெருந்துறையில் குருவைக் கண்டு ஞானமடைந்த மாணிக்கவாசகப்பெருமான் ஞான மார்க்கத்தில் ஈசனை அடைந்த மகாஞானி.
இந்தியா உலகிற்கு வழங்கிய செல்வங்களுள் குறிப்பிடத்தக்கது யோகக்கலை. மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இக்கலை. மனிதன் தன்னுள் இருக்கும் ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயர்வதற்கு இந்த யோகநெறியைக் கண்டறிந்து அதனைக் கைக்கொண்டான்.
இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். யோகநெறிகள் பலவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது அட்டாங்க யோகமாகும். யோகம் என்பற்கு ஒருங்கிணைப்பு, நற்சேர்க்கை என்று பொருள். கீதையில் கண்ணன், “நம் அவல குணங்களை நீக்கி பலவித செயல்களால் நற்கதி அடைவதை யோகம்” என்று கூறுகின்றார். திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது. அவை யாவை? நாளை காணலாம்.