திருப்புகழ் கதைகள் : சுந்தரருக்கு நெல் அளித்தது!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – 244
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-

நெற்றி வெயர்த்துளி – பழநி
சுந்தரருக்கு நெல் அளித்த கதை

சுந்தரமூர்த்திநாயனார் திருவாரூரிலே தினந்தோறும் முக்காலமும் அன்போடு சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு பரவையாரோடு வாழ்ந்திருக்கும் காலத்திலே, வேளாளராகிய குண்டையூர்க்கிழார் என்பவர் அவருடைய மகிமையை கேள்வியுற்று, அவருடைய திருவடிகளை அடைந்து, அவருக்குத் தொண்டு செய்து வந்தார். அவர் சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவையாருடைய வீட்டுக்கு நெல்லும் பருப்பும் பிற பதார்த்தங்களும் நெடுங்காலம் தவறாமல் அனுப்பி வந்தார்.

அப்படி அனுப்பி வருங்காலத்தில், மழையில்லாமையால் வளம் சுருங்கியது. ஒரு நாள் குண்டையூர்க்கிழார் பரவை நாச்சியாருக்கு அனுப்ப நெல் போதாமல் தவித்தார். சுந்தரமூர்த்திநாயனார் திருமாளிகைக்கு அனுப்புவதற்கு இன்று நெல்லு போதவில்லையே; இதற்கு என்ன செய்வேன் என்று நினைந்து, பெருங்கவலை கொண்டார். உணவு உண்ணாமல் அன்றிரவு உறங்கச் சென்றார். அப்பொழுது சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி, – சுந்தரனுக்கு அனுப்ப உனக்கு நெல்லைத் தருகிறேன்- என்று சொல்லியருளினார்.

பின்னர் குபேரனுக்கு ஆணை பிறப்பிக்க அந்தக் குண்டையூர் முழுதிலும் நெல் மலைபோல் ஆகாயமும் மறையும் வண்ணம் நிறைந்து ஓங்கியது. அன்றிரவு விடியும் போது குண்டையூர்க் கிழார் விழித்தெழுந்து அந்த நெல்மலையைக் கண்டு, அதிசயித்து, பரமசிவனுடைய திருவருளைத் நினைத்து வணங்கினார். இவ்வளவு நெல்லை எப்படி திருவாரூருக்கு சுந்தரர் இல்லத்திற்கு எடுத்துச் செல்வது என எண்ணினார்.

இதனைப் பற்றி திருவாரூருக்குச் சென்று சுந்தரருக்குத் தெரிவித்தார். இதனை முன்னரே பரமசிவனால் அறிந்து சுந்தரமூர்த்திநாயனாரும் எதிரே எழுந்தருளி வந்தார். அதுகண்ட குண்டையூர்க்கிழார் அந்நாயனாரை விழுந்து வணங்கி என்ன செய்வது என வினவினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் அதைக்கேட்டு, அவருடன் குண்டையூர்க்குப்போய் ஆகாயத்தை அளாவிய நென்மலையைக் கண்டு அதிசயித்து, திருவருளை வியந்து “பரவையார் வீட்டுக்கு இந்நெல்லை எடுக்க ஆளும் சிவபெருமானே தந்தருளினன்றி முடியாது” என்று திருவுளங்கொண்டு, சமீபத்திலுள்ள திருக்கோளிலியென்னும் தலத்திலிருக்கின்ற சிவாலயத்தை அடைந்து சிவபெருமானை வணங்கி,

நீள நினைந் தடியே னுமைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றே
னாளிலை யெம்பெருமா னவை யட்டித் தரப்பணியே.

என்னுந் திருப்பதிகம் பாடினார். அப்பொழுது பரமசிவனுடைய திருவருளினாலே, “இன்று பகற்காலம் நீங்கிய பின் நம்முடைய பூதங்கள் பரவை வீடு மாத்திரமின்றித் திருவாரூர் முழுதும் நிறையும்படி நென்மலையைக் கொண்டு வந்துதரும்” என்று ஆகாயத்தினின்றும் ஓரசரீரிவாக்குத் தோன்றியது. சுந்தரமூர்த்தி நாயனார் அதைக் கேட்டுத் திருவருளைத் துதித்து வணங்கி திருவாரூருக்குத் திரும்பிப் போய், திருக்கோயிலை அடைந்து, வன்மீக நாதரைத் தரிசனஞ்செய்து கொண்டு, பரவையார் திருமாளிகையிலே சேர்ந்து, அவர் மகிழும்படி நிகழ்ந்த சமாசாரத்தைச் சொல்லி அங்கிருந்தார்.

அதன்பின் சிவாஞ்ஞை யினாலே பூதங்கள் குண்டையூரிலே யிருந்த நென்மலையை எடுத்துக் கொண்டுபோய்ப் பரவையார் திருமாளிகையை நிறைவித்து, திருவாரூர் முழுதிலும் நென்மலையாக்கின. அன்றிரவு கழிந்தபின், பரவையார் அவ்வூர்ச் சனங்களெல்லாரும் தங்கள் தங்கள் வீட்டின் எல்லையைச் சேர்ந்த நென்மலையை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிப் பறையறைவித்தார்.

இந்த வரலாற்றை அருணகிரியார்

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண – னருள்பாலா

என்று பாடியுள்ளார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply