திருப்புகழ் கதைகள்: நாத தநு மனிஷம் சங்கரம்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 238
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நாதவிந்து கலாதீ – பழநி
நாத தநு மனிசம் சங்கர

இசைக் கருவிகள் தோல் கருவிகள், துளைக் கருவிகள், கம்பிக் கருவிகள் என மூவகைப்படும். இந்த இசைக்கருவிகளை எப்படிச் செய்வதென்று ஸங்கீத சாத்திர புத்தகங்கள் விவரமாகச் சொல்கின்றன. இதிலிருந்து அக்கருவிகளைச் செய்பவர்களுக்கு எப்படியெப்படி இசை உண்டாகிறது என்ற அறிவியல் நுணுக்கம் நன்றாகத் தெரியுமென்பதனை நாம் புரிந்துகொள்ளலாம்.

வீணைத் தந்திகளின் நீளம், அவற்றின் பருமன், அதிலே உள்ள மெட்டுகளுக்கிடையே இருக்க வேண்டிய தூரம், ஒரு நாயனம் அல்லது புல்லாங்குழலின் துவாரங்கள் இருக்க வேண்டிய பரிமாணம், துவாரங்களுக்கு நடுவில் இருக்க வேண்டிய தூரம் முதலியன அறிவியல் முறைப்படி அமையாவிட்டால் அதில் இசையை நாம் பயில இயலாது.

இதைப் போலவே தாள வாத்யங்களில் ஸ்வர பேதங்களைக் காட்டும் சப்தமுமில்லை; க, ங, ச, ஞ மாதிரி எழுத்துக்களின் சப்தமுமில்லை; ஆனால் லய வித்யாஸங்களைக் காட்டுகின்ற சில விதமான இசைக்குறிப்புகள் உள்ளன. ஒரு தாளக் கருவியில் வலது பக்கத்தில் ஒரு விதமான ஒலி. இடது பக்கம் வேறு ஒரு விதமான ஒலி வரும். அதற்கு எப்படியெப்படித் தோல்கள் இருக்க வேண்டும், மருந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன.

நாதஸ்வரம் அல்லது நாயனம் வழக்கமாக சுமார் இரண்டடி நீளமுள்ளதாக இருக்கும். இதற்கு பாரி’நாயனம் என்று பெயர். இன்னொரு வகை நாயனமும் உண்டு. அது சுமார் ஒரு அடி நீளமுள்ளதாகவே இருக்கும். அதற்கு திமிரி நாயனமென்று பெயர். அதிலே ச்ருதி தூக்கலாக இருக்கும். ‘திமிரி’க்கும் ‘பாரி’க்கும் நடுபட்டதாக ஒரு வகையும் உண்டு. அது இடை பாரி எனப்படும். வீணை, தம்புரா போன்ற வாத்யங்களில் குடமும் (தண்டி என்னும்) மற்ற பாகமும் ஒரே தாய் மரத்திலிருந்தே எடுத்துச் செய்ததாயிருக்க வேண்டும்.

இசையே இறைவன்தான் என்று ஸ்ரீ தியாகைய்யர் பாடியுள்ளார். அவர் பாடியுள்ள நாத தநு மனிஷம் சங்கரம் என்ற பாடலில் நாதம் என்பது சிவபெருமானின் உடல் எனும் பொருள்படும்படி
பல்லவி
நாத தநு மனிஷம் சங்கரம்
நமாமி மே மனஸா சிரசா

அனுபல்லவி
மோதகார நிகமோத்தமா
சாமவேத சாரம் வாரம் வாரம்
(நாத தநு மனிஷம்)

சரணம்
சத்யோஜாதாதி பனக வக்தராஜ
சரிகமபதநி வர சப்தஸ்வர
வித்யாலோலம் விடலிதகாலம்
விமல ஹிருதய தியாகராஜ பாலம்
(நாத தநு மனிஷம்)

இறைவனது சக்தி அளவிட முடியாதது; நுண்மையும் ஆற்றலும் வாய்ந்தது; எனவே அது இவ்வுலகம் தோன்றக் காரணமாயிருந்தது. உலகம் தோன்றும்போது முறையின்றி இருந்தவற்றில் ஒருவித ஒத்திசைவைப் புகுத்தி இசையை உண்டாக்கி உலகைப் படைத்தான் இறைவன். இனிக் கலையென்பது ஐந்து வகையாகும்; அவை நிவர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை என்பன; இவற்றுள்:-

நிவர்த்தி கலையென்பது: தன்னுடன் சேர்ந்த பக்குவ ஆத்மாக்களுக்குச் சங்கற்பங்களை விடுவித்து மீட்கும்; அதனால் நிவர்த்தியெனப் பெற்றது; இதற்கு தேவதை பிரமதேவர்.

பிரதிட்டாக்கலையென்பது: தன்னை அடைந்த ஆன்மாக்கட்கு முற்சொன்ன, சங்கற்ப விகற்பங்களை விசேடித்து நிறுத்தும்; இதற்கு தேவதை திருமால்.
வித்தியாகலையென்பது: வித்யா என்பதற்கு அறிவு என்று பொருள்; தன்னை யடைந்திருக்கும் ஆன்மாக்களின் அறிவை பிரகாசிக்கச் செய்யும்; இதற்குத் தேவதை உருத்திரமூர்த்தி.

சாந்திகலையென்பது: சாந்தி யென்பதற்கு காந்தத் தன்மையென்று பொருள்; இது தன்னைச் சார்ந்த உயிர்கட்கு விருப்பு வெறுப்பை ஒழித்து சங்கற்பவழிச் செல்லவொட்டது முதன்மையான சாந்தத்தை விளைவிக்கும்; இதற்கு தேவதை மகேச்சுரர்.

சாந்தியதீத கலையென்பது, சாந்திக்கு மேலாய பரம ஞானத்தை யுண்டாக்கும்; இதற்குத் தேவதை சதாசிவ மூர்த்தி. இவ்வைந்து கலைகளின் நிறம், குணம், அவத்தை, நாடி, வாயு என்பவற்றின் விரிவை மதங்க ஆகம காலோத்தராதிகளிற் கண்டு தெளிக.

எனவே மேற்சொன்ன விந்து நாத கலைகளுக்குத் தலைவராக நிற்பவர் முருகவேள் ஆவார்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply