திருப்புகழ் கதைகள்: வான் நிலா… நிலா அல்ல!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் -102
தரிக்கும்கலை – திருச்செந்தூர் திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

எல்லோருக்கும் குளிர்ந்திருக்கின்ற சந்திரன் காதலனைப் பிரிந்திருக்கின்ற காதலிக்கும், காதலியைப் பிரிந்திருக்கின்ற காதலனுக்கும் மிகுந்த வெப்பத்தை வீசுகின்ற நெருப்பைப் போல் துன்பத்தைச் செய்யும்.

இராமர் மீது வேட்கை கொண்ட சீதாதேவியைத் திங்கள் சுடுகின்றது. அப்போது அம்மைக் கூறுகின்றாள், “ஏ சந்திரனே! நீ திருப்பாற் கடலிலே பிறந்தனை. நீ கொடியவனுமல்லன். இதுவரை யாரையும் நீ கொன்றதில்லை, குற்றமில்லாத அமிர்தத்தோடு பிறந்தனை. அன்றியும் இலக்குமியாகிய பெண்ணுடன் தோன்றினையே? பெண்ணாகிய என் மீது ஏன் உனக்கு இத்தனை சினம்? என்னை ஏன் சுடுகின்றாய்?”

கொடியை அல்லைநீ, யாரையும் கொல்கிலாய்,
வடுஇல் இன்னமு தத்தொடும் வந்தனை,
பிடியின் மென்னடைப் பெண்ணொடுஎன் றால்எனைச்
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே.

(மிதிலைக் காட்சிப் படலம், பாலகாண்டம், கம்பராமாயணம்)

வேறு ஒரு பாடலிலும் இதே கருத்தினைக் கம்பர் கூறுகிறார். அசோக வனத்தில் தனிமையில் சீதை இருக்கிறாள். இரவு நேரம். செல்லமாய் வளர்ந்த சகரவர்த்தியின் மகள். இராமனுக்கு வாழ்க்கைப் பட்டு, தசரதனுக்கு மருமகளாக வந்தாள். இராமன் முடி சூட்டப் போகிறான். பட்டத்து இராணியாக வேண்டியவள், “நின் பிரிவினும் சுடுமோ அந்த கானகம்” என்று அவன் பின்னால் கானகம் சென்றாள். இராவணனால் கடத்தப்பட்டாள். அந்த அசோக வனத்தில், இரவு நேரத்தில், நிலவை பார்க்கிறாள். “ஏய், அறிவு இல்லாத நிலவே, நகராமல் நிற்கும் இரவே, குறையாத இருளே, எல்லோரும் என்னையே சொல்லுங்க. என்னை விட்டு தனியா இருக்கானே, அந்த இராமன், அவன் கிட்ட ஏதும் கேட்க மாட்டாயா?” என்று இரவோடும், நிலவோடும் சண்டை பிடிக்கிறாள்.

kambar - 7

கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !
செல்லா இரவே !சிறுகா இருளே !
எல்லாம் எனையேமுனிவீர்; நினையா
வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ?

சுந்தரகாண்டம், கம்பராமாயாணம்)

இந்தப் பாடல்களைப் படிக்கும்போது கவியரசு கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறதா? ‘பலே பாண்டியா’ படத்தில் அவர் எழுதிய பாடல் அது. 1970களில் இலங்கை வானின் வர்த்தக ஒலிபரப்பில் இந்தப் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். பாடல் இதோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ..
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மதுளங்காய் ஆனாலும் எனுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
னீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய்
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்கய்
ஜாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூடுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

தமிழிலும் வாழ்விலும் கண்ணதாசன் தொடாதது எதுவுமில்லை. பெறாத கோப்பைகள் எதுவும் இல்லை. இவருக்கு மட்டும் எப்படி இப்படி வளைந்து கொடுத்தது தமிழ்? என்ற வியப்பு எனக்குள் எப்போதும் உண்டு.

இவர் கம்பரைப் படித்தாரா? இல்லை கலைவாணி இவருக்கு கம்பராமாயணத்தைப் புகட்டினாளா? தெரியவில்லை. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சொற்களையே இலக்கிய நயத்துடன் எடுத்தாள இவருக்கு மட்டுமே உண்டு எழுத்தாளுமை.

இதனைப் பற்றி மேலும் நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: வான் நிலா… நிலா அல்ல! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply