682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை: அவதார புருஷர்களை வழிபட செல்கிற போது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது இறையருள் பெறலாம் என்று அனுஷம் உத்ஸவ விழாவில் கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினார்
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ உத்ஸவத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் குரு அருளும் திரு அருளும் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது…
மகான்களிடம் போகும்போது நமது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு பலன் கிடைக்கும். எப்பொழுதும் தினமும் குருவை வணங்கி விட்டு தான் நமது காரியத்தை தொடங்க வேண்டும். அப்போது சௌக்கியம் கிடைக்கும்.
நாம் தினமும் பசுவை இரட்சிக்க வேண்டும். கங்கையில் குளிப்பதை விட பசுவை பராமரித்தால் அது புண்ணியம் என்று தாமிரபரணி புராணம் கூறுகிறது. இதையே மகா பெரியவர் பசுவை காப்பாற்றுவது மிகப்பெரிய புண்ணியம் என்கிறார்.
மகா பெரியவர் 1922 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்துவிட்டு தொடர்ந்து நெல்லை சென்றார். இதயம் பேசுகிறது மணியன் மகா பெரியவரை சந்தித்த பொழுது நெல்லை பாபநாசத்திற்கும் தஞ்சாவூர் பாபநாசத்திற்கும் ஏதாவது கனெக்சன் உண்டா என்று கேட்டார்.
எப்போதுமே பெரியவரிடம் நாம் ஏதாவது கேட்டால் அவர் எதிர் கேள்வி கேட்பார். நம்முடைய கோவில் கதைகள் தல புராணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கேட்டார்.
இன்றும் பாபநாசம் கோவிலில் உச்சி காலை பூஜை முடிந்த உடன் மீன்களுக்கு அந்த உணவை போடுவது வழக்கம். உலகில் மற்ற ஜீவராசிகளையும் நாம் இரட்சிக்க வேண்டும் என்பதற்காக மீனுக்கு சாப்பாடு போடுகிறார்கள்
ராமனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.
மகா பெரியவர் தமிழ் இலக்கியம், தொல்லியல், இசை, ஆங்கில நுண்ணறிவு, மற்றும் அனைத்து புலமைகளும் உடையவர். குருவிற்கு எப்பொழுதும் சிஷ்யர்கள் மீது அன்பும் பரிவும் இருக்கும் .
தமிழ் பாட்டி ஔவை. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். இன்று நாம் ஒழுங்காக தமிழ் படிப்பதற்கு மூல காரணம் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் முயற்சிதான்.
அனுஷ பூஜை நடத்துவதின் நோக்கம் எப்படிப்பட்ட தவ வாழ்க்கை வாழ்ந்த மகா பெரியவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். திருமணத்தை எளிதாக நடத்துவது, பட்டுப் புடவையை பயன்படுத்தக் கூடாது, லஞ்சம் வாங்க கூடாது, போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது போன்று அவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
இறைவனை வழிபடுவதோடு இறைவனின் அருளை பெற்ற அவதார புருஷர்களை வழிபட்டால் நமக்கு வாழ்க்கையில் சித்திகள் உண்டாகும். அவதார புருஷர்களின் அருளால் வீடும் நாடும் செழிக்கும்.
இவ்வாறு கீராம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசினர். முன்னதாக கீழம்பூர் சங்கர சுப்பிரமணியனுக்கு மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் ஸ்ரீ மகா பெரியவர் விருதினை எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் வழங்கி பாராட்டி பேசினார்.
அதனை தொடர்ந்து மஹா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்