அறப்பளீஸ்வர சதகம்: கண்டவுடன் மலர்ச்சி!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

இதனை இதுகண்டு மகிழும்

தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்ப
தவர்தந்த சந்ததி யதாம்!
சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவி
தங்குபைங் குமுத மலராம்!

புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வ
பொங்குதா மரைமலர் களாம்!
போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்
புரிவது மயூர இனமாம்!
சிந்தைமகிழ் வாய்உதவு தாதாவி னைக்கண்டு
சீர்பெறுவ திரவலர் குழாம்
திகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதிச்
செகம்எலாம் என்பர் கண்டாய்!
அந்தியம் வான் அனைய செஞ்சடா டவியனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அழகிய
அந்தி வானம்போலச் சிவந்த சடைக்கற்றையுடையவனே!,
குற்றமற்றவனே!, அருமை தேவனே!, பெற்றோரின் மலர்ந்த
முகத்தைக் கண்டு பூரிப்பது அவர்கள் பெற்ற சந்ததி ஆகும், திங்களின்
வருகைநோக்கி மலர்வது உயர்ந்த பொய்கையிலே அமைந்த புதிய
அல்லிமலர் ஆகும், மனம் மகிழ்வாக ஞாயிறு எழுதல்
நோக்கி மனம் களிப்பன மிகுதியான தாமரைப்பூக்கள் ஆகும், முகிலை
நன்றாகப் பார்த்துக் கண்களித்து நடனம்புரிவது மயிலின் கூட்டம் ஆகும்,
மனக் களிப்புடன் கொடுக்கும் கொடையாளியைக் கண்டு
சிறப்புறுவது இரவலர் கூட்டம், விளங்கும் முறைதவறாத
அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம் யாவும் என்று அறிஞர்
கூறுவர்.

ஒருவர் பெற்ற மக்கள் முதலாக இங்குக் கூறப்பட்டவை அனைத்தும் பெற்றோர் முதலாகக் கூறப்பட்ட உயர்ந்த பொருள்களைக்
கண்டு மகிழும்.

Leave a Reply