
மூதேவி இருப்பிடம்
மிதம்இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,
மிகுபாடை யோ ரிடத்தும்,
மெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியும்
மிக்கபா தகரிடத்தும்,
கதியொன்றும் இலர்போல மலினம்கொ ளும்பழைய
கந்தையணி வோரி டத்தும்
கடிநா யெனச்சீறி எவரையும் சேர்க்காத
கன்னிவாழ் மனைய கத்தும்,
ததிசேர் கடத்திலும், கர்த்தபத் திடையிலும்,
சார்ந்தஆட் டின்தி ரளிலும்
சாம்பிண முகத்திலும் இவையெலாம் கவலைபுரி
தவ்வைவாழ் இடமென்பர் காண்!
அதிரூப மலைமங்கை நேசனே! மோழைதரும்
அழகன்எம தருமைமதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
பேரழகுடைய
மலைமகளின் கணவனே! மோழையென்பான்
பெற்ற அழகனான, எமது தேவனே!, சோற்றை அளவின்றி உண்பவரிடத்திலும், மிகைபடப் பேசுகின்றவரிடத்திலும், ஒரு மெய்யும்
கலவாமல், எப்போதும் பொய்யையே கூறியலையும் மிகவும்
கொடியவரிடத்திலும், சிறிதும் வழியற்றவரைப்போலக் கிழிந்த
பழைய கந்தையை உடுப்பவரிடத்திலும், கடிக்கின்ற (வெறி) நாய்போலச்
சினந்து பேசி ஒருவரையும் அணுகவிடாத பெண்ணொருத்தி வாழும்
இல்லத்திலும், தயிர்ப்பானையிலும், கழுதைகளின் குழுவிலும், கூடிய ஆட்டுமந்தையிலும், இறந்த பிணத்தின்
முகத்திலும், இவை யாவும் கவலையை யுண்டாக்கும் மூத்தவள் வாழும் இடம் என்று அறிஞர் கூறுவர்.
இங்குக் கூறியவை மூதேவி வாழும் இடங்கள்.