
மாணிக்கங்கள்
சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான
துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;
சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள
துரையுமோர் மாணிக் கம்ஆம்;
பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய
பாவையோர் மாணிக் கம்ஆம்;
பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்
பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;
ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
உசிதனோர் மாணிக் கம்ஆம்;
உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்
உடையனோர் மாணிக் கம்ஆம்; அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்
கமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!,
அருமை தேவனே!, தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும்
குதிரை ஒரு மாணிக்கம் போன்றது, சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும்
அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன், குற்றமற்ற
சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள், பலவகையான கலைகளைப் படித்தறிந்து, அடக்கமாயிருக்கும் பாவலன்
ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன், அளவில்லாத செல்வத்துடன்
மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்,
நல்ல குடியிற் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு
மாணிக்கம் போன்றவன்.