
குறைந்தாலும் பயன்படல்
தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்
சார்மணம் பழுதா குமோ!
தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு
சாரமது ரங்கு றையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்
நீள்குணம் மழுங்கி விடுமோ?
நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்
நிறையுமாற் றுக்கு றையுமோ?
கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு
கதிர்மதி கனம்போ குமோ?
கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்
காசினி தனிற்போ குமோ?
அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
அறிவுடையோரைப் பிரிந்து செல்லாத தலைவனே!, முதல்வனே!,
அருமை தேவனே!, வெட்டப்பட்ட சந்தனக்கட்டை குறைபட்டாலும்
அதனிடம் உள்ள நறுமணம் குறையுமோ?, நல்ல பால் வற்றிடக்
காய்ச்சினாலும் அதனாலேயே அதனிடம் உள்ள சாரமான இனிமை
வற்றுமோ?, நிறைந்த பேரொளியை உடைய மணி
அழுக்குப்பட்டாலும் அம் மணியின் உயர்ந்த ஒளிப்பண்பு
குறைந்துவிடுமோ?, பொன்னை நெருப்பிலே உருக்கினாலும்
(தகடாக) அடித்தாலும் அதனிடம் நிறைந்த மாற்றுக் குறைந்துவிடுமோ?,
கருமைபொருந்திய கார்முகிலானது ஞாயிற்றையும்
திங்களையும் மறைத்தாலும் அக்காரணத்தால் அவற்றின் பெருமை
கெடுமோ?, படித்த பெரியோரின் மேன்மையை அறிவிலார்
அறியாவிட்டாலும் அதனால் உலகிலே அவர் பெருமை நீங்குமோ?
சான்றோர் பெருமை அற்பரால் அழிவுறாது.