அண்ணா என் உடைமைப் பொருள் (26): இத்தனை விஷயங்களையும் பெரியவா எங்கே படித்தார்?

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-26.jpg" style="display: block; margin: 1em auto">

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 26
இத்தனை விஷயங்களையும்

பெரியவா எங்கே படித்தார்?
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணாவின் அறிவாற்றல் – குறிப்பாக, மொழியறிவு – பற்றிய சில விவரங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நாளடைவில் பெரியவாளையும் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பெரியவா பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டதும் உண்டு, அண்ணா மூலம் கேள்விப்பட்டதும் உண்டு.

மடத்து அதிபரான சில மாதங்களிலேயே பெரியவாளின் ஆழ்ந்த ஞானத்தை அனைவரும் தெரிந்து கொண்டனர். அவருக்கு பாஷ்ய பாடம் நடத்திய ஆசிரியர்களின் கேள்விக்கு (அப்போது அவருக்குப் பதினான்கு வயது.) அவர் சொன்ன பதில் அனைவரையும் வியப்படைய வைத்தது. அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் மட்டுமல்ல, சொல்லிக் கொடுக்கப்படாத பாடத்தையும் சேர்த்தே அவர் விளக்கினார். (பெரியவா முறைப்படி பாடசாலையில் படித்தவர் அல்ல, கிறிஸ்தவ கான்வென்டில் படித்தவர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.)

anna alias ra ganapathy5 - 1

பெரியவாளின் சங்கீத அறிவு, நாட்டிய அறிவு குறித்தும் ஓரளவு கேள்விப்பட்டிருந்தேன். மேலும், அரசியல் சட்டத்தில் பெரியவாளுக்கு அபார அறிவு உண்டு என்பதையும் கேள்விப்பட்டிருந்தேன். இதுகுறித்த ஒருசில சம்பவங்களையும் அறிவேன். அண்ணாவுடன் பெரியவா ஆங்கில இலக்கிய விஷயங்களைப் பற்றி சர்வ சாதாரணமாக உரையாடுவதுண்டு என்பதைப் பற்றியும் படித்திருந்தேன். (கீட்ஸ், ஷெல்லி இருவரின் பாடல்களில் அண்ணா கவனித்திராத சில நுட்பமான இலக்கியக் கருத்துகளைப் பெரியவா சுட்டிக் காட்டியதை அண்ணா என்னிடம் சொல்லி இருக்கிறார். கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்தில் எழுதியும் இருக்கிறார்.) பல்வேறு மேற்கத்திய மொழிகளிலும் அவருக்குப் பரிசயம் இருந்தது என்பதையும் கேள்விப்பட்டிருந்தேன்.

இந்நிலையில் ஒருமுறை அண்ணாவைப் பார்க்க வந்திருந்த ஓர் அன்பர் பெரியவாளின் சட்ட அறிவை விளக்கும் விதத்தில் ஒரு சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அது ஏதோ கோவில் நில அபகரிப்பு விவகாரம் பற்றியது. எல்லா கோர்ட்களிலும் தோற்றுப் போன அந்த விவகாரம் இறுதியாக ப்ரைவி கவுன்சிலுக்குப் போகும் போது அரசு வழக்கறிஞர் பெரியவாளை நமஸ்கரித்து கேஸ் விவரம் தெரிவித்ததாகவும், பெரியவா அவருக்கு மிகமிக நுட்பமான சட்ட அம்சத்தை எடுத்துக் காட்டியதாகவும், அதைத்தொடர்ந்து ப்ரைவி கவுன்சிலில் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அந்த கேஸ் ஜயித்ததாகவும் அந்த அன்பர் விவரித்தார். (அந்த வழக்கு பற்றி இதற்கு மேல் வேறு விவரம் எதுவும் என் நினைவில் இல்லை.)

anna alias ra ganapathy8 - 2

இது எனக்குள் ஒரு பெருத்த கேள்வியை எழுப்பியது. பெரியவாளது ஞானத்தின் ஆழம் ஒருபுறம் இருக்கட்டும். இத்தனை துறைகளில் ஒருவருக்கு ஆழ்ந்த ஞானம் இருப்பது எப்படி சாத்தியமானது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பெரியவாளுக்குப் பல்துறை ஞானம் இருந்தது என்பது சரி. ஆனால், அதை அவர் எவ்வாறு அடைந்தார்? அதற்கு ஏதோ ஒரு கருவியை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டுமல்லவா?

உதாரணமாக, ஸ்வாமி விவேகானந்தருக்கு ஃபோட்டோஜீனிக் மெமரி என்று சொல்வார்கள். அவர் ஒரு பக்கத்தைப் பார்வையிடும் போதே அந்தப் பக்கத்தில் உள்ள விஷயங்கள் அவர் நினைவில் முழுமையாகப் பதிந்து விடும், இவ்வாறு அவர் என்சைக்ளோபீடியா முழுவதையும் மனப்பாடமாக அறிந்திருந்தார் என்று சொல்வார்கள்.

பெரியவாளும் அதுபோலவே ஏராளமான துறைகள் சார்ந்த நூல்களைப் பார்வையிட்டதன் மூலம் இத்தகைய பல்துறை அறிவைச் சம்பாதித்திருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். அவருக்கு இருந்த அலுவல்களுக்கு மத்தியில் இத்தனை பல்வேறுபட்ட புத்தகங்களைப் புரட்டிப் பார்க்குமளவுக்காவது அவருக்கு நேரம் இருந்திருக்குமா?

அடுத்த முறை அண்ணாவிடம் சென்றிருந்த போது இதைப்பற்றிக் கேட்டேன். அதற்கு அண்ணா, ‘‘இதெல்லாம் புஸ்தகம் படிச்சுத் தெரிஞ்சுக்கறது இல்லை. cosmos–ல (ஆகாயத்தில், விண்வெளியில்) இருக்கற information கூட நம்ம மூளையோட wavelength-ஐ ட்யூன் பண்ணி எடுத்துக்கறது’’ என்று சொன்னார்.

அண்ணா என் உடைமைப் பொருள் (26): இத்தனை விஷயங்களையும் பெரியவா எங்கே படித்தார்? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply