திருநாங்கூரில் கருட சேவை உற்ஸவம்

செய்திகள்

108 வைணவத் தலங்களில் சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரைச் சுற்றி 11 பெருமாள் கோயில்கள் உள்ளன.

நிகழாண்டு கருட சேவை உத்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு திருநகரி திருமங்கையாழ்வார் உள்ளிட்ட 11 பெருமாள்களும் கோயில்களில் இருந்து புறப்பட்டு, திருநாங்கூர் மணிமாடக் கோயிலை வந்தடைந்தனர். அங்கு, மணிமாடக் கோயில் வாசலில் திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமாளையும் பாசுரம் பாடி, தீபம் காட்டி வரவேற்றார்.

நாங்கூர் கோயிலில் 11 பெருமாள்களும் 11 அறைகளில் அருள்பாலித்தனர். அனைத்து பெருமாள்களுக்கும் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய அனைத்து பெருமாள்களுக்கும் ஒருசேர தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர், மணவாள மாமுனிகள் சகிதமாய் ஹம்ச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருமங்கையாழ்வார், குமுதவள்ளி தாயாருடன் புறப்பட்டு, மணிமாடக் கோயிலின் வாசல் பகுதியில் சிறப்பு தீபாராதனைக்கு பிறகு நிறுத்தப்பட்டார்.

தொடர்ந்து, மணிமாடக் கோயில் ஸ்ரீ நாராயணப் பெருமாள், செம்பொன்செய் கோயில் ஸ்ரீ செம்பொன்னரங்கர் பெருமாள், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணா பெருமாள், திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருதேவனார்தொகை ஸ்ரீ மாதவப் பெருமாள், திருக்காவளம்பாடி ஸ்ரீ கண்ணன் பெருமாள், அரிமேய விண்ணகரம் ஸ்ரீ குடமாடுகூத்தர் பெருமாள், திருதெற்றியம்பலம் ஸ்ரீ பள்ளிக்கொண்ட பெருமாள், வண்புருஷோத்தமம் ஸ்ரீ வண்புருஷோத்தமம் பெருமாள், வைகுந்த விண்ணகரம் ஸ்ரீ வைகுந்தநாதர் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் தங்க கருட வாகனத்தில் வாசல் பகுதியில் எழுந்தருளி, மணிமாடக் கோயில் வாசல் பகுதிக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தனர்.

அங்கு தனி தனியாக 11 பெருமாள்களையும், திருமங்கையாழ்வார், குமுதவள்ளி தாயார் மங்களாசனம் (திருப்பதிகம்) செய்யும் கருட சேவை உத்சவமும், தீபாராதனையும் நடைபெற்றது.கருட சேவை உத்சவத்தின் நிறைவாக, 11 பெருமாள்களும் வீதியுலாவுக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=372196

Leave a Reply