பூஜைகள்: கோயில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.3 0 மணிக்கு சித்திவிநாயகருக்கு பூஜை தொடங்கும். அதன்பின் திருவனந்தலா எனப்படும் அம்மன் சன்னதி அருகே பள்ளி கொண்டிருக்கும் சோமசுந்தரப் பெருமானை துயில் உணர்த்தி வழிபாடு செய்யும் பூஜை நடைபெறும். பின்னர் மீனாட்சியம்மை ஆற்றலைப் பள்ளியறை உற்சவ திருவுருவுக்கு மாற்றும் மூக்குத்தி தீபாராதனை நடைபெறும்.
இதே நேரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சுவாமி முதலான மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும். இவ்வழிபாட்டின்போது வைகை ஆற்றிலிருந்து திருமஞ்சன நீர் கொண்டுவரப்பெற்று பலிபீடத்துக்கு அபிஷேகமும், பிறமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடைபெறும். பின்பு கஜபூஜை, கோபூஜை நடத்தப்படும்.
காலை 6.30 மணி முதல் 7.10 மணி வரையில் சன்னதிகளில் திரையிடப்படும். திரிகாலசந்தி, உச்சிக்காலம் பூஜையாக ஆலவட்டம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். பின்னர் 10.30 மணி முதல் 11.10 வரையில் திரையிடப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
பகல் 12.30 மணிக்கு கோயில் நடைமுழுமையாகச் சார்த்தப்பட்டு பின்னர் மாலை 4.00 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.
பின்னர் இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரையில் அம்மன் சன்னதி திரையிடப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் பள்ளியறை பூஜை தொடங்கி நடக்கும். அதன்பின் இரவு 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோயில் நடைசார்த்தப்படும்.
விழாக்கள்: கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும், சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை முக்கியமானதாகும். தமிழ் மாதமான சித்திரையில் நடைபெறும் இவ்விழாக்கள் திருக்கல்யாணம், தேரோட்டம் புகழ்பெற்றவை. 12 நாள்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. வைகாசி வசந்த உற்சவம், ஆனி ஊஞ்சல் விழா, ஆடி முளைக்கொட்டு, ஆவணியில் பிட்டுக்கு மண்சுமந்த வரலாறு, புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்டத் திருவிழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி எண்ணெய்க்காப்பு விழா, தை தெப்பத்திருவிழா, மாசிமகம், பங்குனி கோடை வசந்த விழா ஆகியவை நடைபெறுகின்றன.
கோயில் கிழக்கு பகுதி சுற்றுச்சுவர் சிறிய பகுதி புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோபுரங்களில் நுழைவோரை ரகசிய கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணித்தும், மெட்டல் டிடெக்டர் சாதனம் மூலம் சோதித்தும் அனுப்புகின்றனர். கோயிலுக்கு என தனியாக பாதுகாப்பு பிரிவை போலீஸ் தரப்பில் அமைத்து கண்காணித்தும் வருகின்றனர்.
தினமும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் என சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு கோயிலுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.