ராமானுஜரின் இன்னொரு வாழ்வியல் செய்தி….
ஆளவந்தாரின் எண்ணப்படி ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து வைத்த பெரிய நம்பிகள், தம் ஆசார்யரான ஆளவந்தாரின் இன்னுமொரு சீடரான (தாழ்குலத்தைச் சேர்ந்த) மாறனேரி நம்பிக்கு, ராஜபிளவை என்ற புண்ணைக் கழுவி மருந்திட்டு, உணவும் அளித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பிராம்மணர்கள் நிந்தையை அவர் பொருட்படுத்தவில்லை. மாறனேரி நம்பி திருநாடு அலங்கரித்த போது, ஞானத்தால் சிறந்த அந்தணர்க்குரியதான ப்ரஹ்மமேத சம்ஸ்காரம் என்ற சிறந்த நிலையால் பள்ளிப்படுத்தினார். இதற்கு, வர்ணாஸ்ரம தர்மத்தை மீறி இப்படிச் செய்யலாமோ? என்று பெரிய நம்பிகளிடம் ராமானுஜர் கேட்டார்.
அதற்கு பெரிய நம்பிகள், “சாமான்ய தர்மத்தை நிலை நாட்டுகிற சக்ரவர்த்தித் திருமகனான ராம பிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு இந்த சம்ஸ்காரத்தைச் செய்தாரே! அவரிலும் நான் பெரியனோ? அல்லது ஜடாயுவைக்காட்டிலும் மாறனேரி நம்பி சிறியரோ? இது கிடக்கட்டும். சாமான்ய தர்மத்தைக் கொண்ட யுதிஷ்டிரன் விதுரருக்கு இதைச் செய்யவில்லையா? தர்மபுத்திரரைக் காட்டிலும் நான் பெரியவனோ? அல்லது விதுரரைக்காட்டிலும் இவர் சிறியவரோ? சரி இதுவும் இருக்கட்டும்… ஆழ்வார், “பயிலும் சுடரொளி” என்ற பதிகத்திலும், “நெடுமாற்கடிமை” என்ற பதிகத்திலும் பாகவதர்களின் சிறப்பைக்கூறி, “எம்மையாளும் பரமர்” என்றும், “எம் தொழுகுலம் தாங்களே” என்றும் கூறியவை எல்லாம் வெற்று வார்த்தைகளேயோ? அவை அனுஷ்டிக்கத் தக்கவை அன்றோ?” என்று சொல்லி, (தாழ்குலத்தோராயினும்) பாகவத உத்தமர்கள் எவ்வகையிலும் சிறப்பிக்கப் பட வேண்டியவர்களே என்று கூறி நிலைநிறுத்தினார்.
இது எம்பெருமானாருக்குத் தெரியாததல்ல! ஆயினும் தகுந்த பெரியோர் மூலமாக, தம்மைச்சேர்ந்தவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற அவாவினால் இப்படியோர் நிகழ்வை நிகழ்த்தினார்.
பாகவத உத்தமர்களுக்குள்ளே சாதியால் உயர்வு தாழ்வு இல்லை என்பதே ராமானுஜரின் இவ்விரு வாழ்வியல் செய்திகளும் சொல்லும் உண்மை…
கி.பி.1017 இல் அவதரித்த மகான் ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் உற்சவங்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் கடமை தமிழர் ஒவ்வொருவருக்கும் உள்ளது.