பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்து

பெரியாழ்வார்

நாலாம் திருமொழி – சென்னியோங்கு

(எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்

தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

463:

சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு

தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா.

என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு

நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2) 1.

 

464:

பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்

பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால்

இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்

அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2.

 

465:

எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே.

நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்?

நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்

சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3.

 

466:

கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்

உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்

கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா

தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4.

 

467:

பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்

உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்

உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்

என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5.

 

468:

உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்

என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்

மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ.

என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6.

 

469:

பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்

திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்

மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே

உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7.

 

470:

அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்

மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.

நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக

நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8.

 

471:

பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்

மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ.

தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று

உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2) 9.

 

472:

தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்

சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி.

வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்

இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2) 10.

 

473:

வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே

கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை

ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை

சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2) 11.

 

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

 

 

Leave a Reply