பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்து

பெரியாழ்வார்

மூன்றாம் திருமொழி – துக்கச்சுழலையை

(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

453:

துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து

புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ?

மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்

சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 1.

 

454:

வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்

ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை

அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று

தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 2.

 

455:

உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன்

தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்

புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று

இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 3.

 

456:

காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்

பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்

தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று

பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4.

 

457:

காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்

மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா

மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்

சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். 5.

 

458:

எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்

ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை

மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத்

திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6.

 

459:

அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்

இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்

சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்

செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7.

 

460:

எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே

இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்

மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்.

சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8.

 

461:

அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்

இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே?

சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்

தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9.

 

462:

சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்

நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்

பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்

ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2) 10.

Leave a Reply