இரண்டாம் திருமொழி – நெய்க்குடத்தை
(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
443 :
நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 1.
444:
சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2.
445:
வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப்
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3.
446:
மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4.
447:
மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்.
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5.
448:
உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6.
449:
கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7.
450:
ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8.
451:
உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே.
அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே.
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்.
பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். (2) 9.
452:
அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2) 10.