தெய்வத் தமிழ்

தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

திருக்குளந்தை (பெருங்குளம்)

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-913" style="float: left; border: 1px solid black; margin: 3px;" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/09/divyadesam_56_mayakkoothan_thirukkulanthai.gif" align="left" width="180" height="144" /></p> <p>இரட்டைத் துலைவில்லிமங்கலத்துக்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் தாமிரபரணியின வடகரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். அருகே பெரியகுளம் ஒன்றும் உள்ளது. சனிக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. நவதிருப்பதியில் ஆறாவது திருப்பதி.</p> <p>ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி காட்சி தரும் பெருமான். திருவேங்கடமுடையான் என்ற திருநாமத்தோடு மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.</p>

அருகில் உள்ள பெருங்குளமே இந்தத் தலத்தின் தீர்த்தம். குளந்தைவல்லித் தாயார், அலமேலுமங்கை தாயாரும் உள்ளனர். உற்ஸவர் திருநாமம் மாயக்கூத்தர் என்பது. பெருமாள் அருகிலேயே கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். மூன்று அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

விப்ர குலத்தைச் சேர்ந்த வேதசாரன் என்பவர், திருவேங்கடமுடையானை இடைவிடாது வழிபட்டு வந்தார். அவரது மனைவி குமுதவதி. இருவரின் தவத்தால் அலர்மேல்மங்கைத் தாயாரே இவர்களுக்கு மகளாகத் தோன்றி கமலாவதி என்ற பெயருடன் வளர்ந்தார்.

கமலாவதி வேங்கடமுடையானை கணவராக அடைய வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில், வேதசாரனின் மனைவியை சோரன் எனும் அரக்கன் கவர்ந்து சென்றான். வேதசாரன் தன் மனைவியை மீட்டுத் தருமாறு பெருமாளை வேண்டினான். பெருமானும் அரக்கனுடன் போரிட்டு அவனைக் கீழே தள்ளி, அவன் தலை மீது ஆனந்தக் கூத்தாடினான். பெண்களைத் திருடிய சோரன் மீது நாட்டியமாடியதால் சோரநாட்டியன் என்றும், மாயக் கூத்தன் என்றும் பெருமான் புகழப்பெற்றார். பின்னர் தை மாதம் சுக்ல பட்ச துவாதசியில் பூச நட்சத்திரத்தில் கமலாவதியை மணந்து கல்யாணத் திருக்கோலம் காட்டியருளினார்.

நம்மாழ்வார் தன்னைக் காதலியாக பாவித்து, மாயக்கூத்தனை காதலனாகப் பாவித்து பாசுரம் படைத்துள்ளார். அவ்வளவு வசீகரமானவர் இந்த மாயக் கூத்தர்.

இங்கு மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. பங்குனி திருவோண நட்சத்திரத்தன்று பிரம்மோற்ஸவம் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. 11வது நாள் தீர்த்தவாரி நடைபெறும். இங்கு வைகானச ஆகமப்படி பூஜை நடைபெறுகிறது.

இத்தலத்தில் நீராடி பெருமாளை தரிசித்தால் சனி தோஷ நிவர்த்தி, மகப்பேறு பெறுதல், திருமணத் தடை அகலுதல், மேலும் இகலோக ஆசை நீங்கி பரலோக ஞானம் கிடைக்கப் பெறுதல் ஆகிய பலன்கள் கைகூடும்.

தலத்தின் பெயர் : திருக்குளந்தை ( பெருங்குளம் )

அம்சம் : சனி

மூலவர் : வேங்கடவாணன்

உற்ஸவர் : மாயக்கூத்தர்

தாயார் : கமலாவதி தாயார், குளந்தைவல்லித் தாயார்

இருப்பிடம் : திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கி.மீ. தொலைவு.

நடைதிறக்கும் நேரம் காலை 7.30 – 12.30 மாலை 4.30 – 7.30

பெருங்குளம் (திருக்குளந்தை) – ராமானுஜம் 9444508426