தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

மூட பக்தி

1 min read
<p><img class=" alignleft size-full wp-image-335" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2010/08/pictures_venkatachalapathi.jpg" border="0" width="109" height="147" style="float: left; margin: 4px;" />நம்மிடையே நிலவி வரும் மூடபக்தியைப் பற்றி பழைய இதழ்களில் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. மீண்டும் இம்முறை அது பற்றி ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது. ‘திருவேங்கடமுடையான் கல்யாணோத்ஸவம்’ என்ற பெயரில் TTD தேவஸ்தானம் ஊர் ஊராக நடத்திவரும் ‘ஏமாற்று நாடகம்’ பற்றி பாஞ்ச ஜன்யம் சில மாதங்கள் முன்பு தன்னுடைய கண்டனத்தை முன்வைத்தது. சமீபத்தில் சென்னையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டது.அதை அதிக நேரம் பார்த்து ரசிக்க (!) பொறுமை இல்லை....</p>

 

இது பற்றி கட்டுரை வரையப்படவேண்டும் என்று தீர்மானித்திருக்கையில் பாஞ்ச ஜன்யம் (ஆகஸ்ட் 2010) தலையங்கம் தீட்டியது வரப்ரஸாதமாக உள்ளது. ஸம்பாதகர் முன்வைத்த வாதங்களில் ஆதிப்பிரானுக்கு முழு உடன்பாடு உண்டு. திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி இருக்கும் விக்ரஹ மூர்த்தி ஒரிஜினல். அர்ச்சக நிலையத்தில் தயார் செய்யப்பட்டிருக்கும் விக்ரஹ மூர்த்தி ‘மாற்று’ (Duplicate) இதற்கு ஸாந்நித்யம் கிடையாது. இதை வைத்து கொண்டு TTD தேவஸ்தானம் கல்யாண உத்ஸவங்களை வெளியூர்களில் நடத்தி வருகிறார்கள்.

பகவான் ஸர்வ வ்யாபி (எங்கும் நிறைந்துளன்). சில கோவில்களில் சில மூர்த்திகள் வரப்ரஸாதி என்று பாவிப்பது பக்தர்களே தவிர பகவானுக்கு பாரபட்சம் கிடையாது. ஒவ்வொருவனிடம் குடி கொண்டுள்ள பக்தி உணர்வை தக்கவைத்துக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு பலம் மூட்டும் வகையிலும் கோவிலின் ஸாந்நித்யம் குறைவில்லாமலும் இருப்பதற்கு உத்ஸவங்கள் நடைபெறுகின்றன. அவைகள் நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று வகை.

நித்யம்:- ப்ரஹ்மோத்ஸவம், நவராத்ரி, பவித்ரோத்ஸவம், ஸ்ரீராமநவமி, க்ருஷ்ண ஜயந்தி, ந்ருஸிம்ஹ ஜயந்தி, முதலியன. இவற்றுடன் பங்குனி உத்திரம் (பெருமாள் தாயார் கல்யாணம்) தை மாதம் சங்கராந்தி ஆண்டாள் கல்யாணம்

நைமித்திகம் அபூர்வமானவை. ஏதாவது பேராபத்து நீங்கி ப்ராய:சித்தமாக உத்ஸவம் ஏதாவது நடைபெறுகிறது.

காம்யம்:- இதில் விதவிதமான உத்ஸவங்கள். அதில் பெருமாள், தாயார் திருக் கல்யாணம் அடக்கம்.

ஐம்பது ஆண்டுகள் முன்பு வரை நித்ய உத்ஸவங்களை தவிர காம்ய உத்ஸவம் எதுவும் கவனிப்பாரற்று கிடந்தது. பணம் குவிய குவிய TTD தேவஸ்தானம் விதவிதமான காம்ய உத்ஸவங்களை நடத்தி அவைகளுக்கு விளம்பரமும் செய்தார்கள். மூட ஜனங்கள் சொந்த கிராமத்து கோவில், நலிந்த கோவில்களை ஏறெடுத்தும் பாராமல் TTD நடத்தி வரும் உத்ஸவங்களில் பங்கு கொண்டு பணத்தை செலவழித்து பலனை எதிர்பார்த்து வருகின்றனர். இப்போது இதர கோவில்கள் TTD ஐ முன் உதாரணமாகக் கொண்டு காம்ய உத்ஸவங்களை நடத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுக்கு மேல்வரும்படி. பக்தர்களுக்கு எத்தகைய பலன் கிட்டுகிறது? எதுவும் சொல்ல முடியாது.

திருகல்யாண உத்ஸவம் நடைபெறும் விதம் ஒரு கேளிக்கை (entertainment) மாதிரி. அந்த நேரம் வரை தான். அதற்கு பிறகு நினைவில் தங்கும்படியாக ஒரு அநுபவமும் கிடையாது. திருமலையில் கல்யாண உத்ஸவத்தில் பங்கேற்றவர்கள் பெருமாள் தாயாருக்கு சாற்றிய வஸ்திரங்கள், லட்டு ப்ரஸாதங்களைப் பெற்றுக்கொண்டு குஷியாக திரும்பி வருவார்கள். இத்தகைய உத்ஸவங்கள் பக்தி உணர்வை வளர்க்கிறதா?

கிடையவே கிடையாது! ஏனென்றால் நல்ல பக்தி உணர்வு ஒருவனுடைய சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தி அவனது செயல்பாடுகளில் ஒரு நேர்மையையும் தெளிவையும் தோற்றுவிக்கும். பணத்தை வாரி இறைத்து நடத்தப்படும் கல்யாண உத்ஸவங்களின் மூலம் கிட்டும் ஆனந்தம் நல்ல கோடை வெயிலில் குளிர்ந்த பழரசம் சாப்பிடுவது போல.

அதாவது தாற்காலிக ஆனந்தம்.

பாஞ்ச ஜன்யம் ஆசிரியர் இவ்வாறு குறைப்பட்டுக் கொள்கிறார் ….

நம் ஸம்ப்ரதாயத்தில் மடாதிபதிகளும் ஆசார்ய புருஷர்களும், உபய வேதாந்த வித்வான்களும், ஆகம வல்லுநர்களும் நிறைத்துள்ளனர். ஆனால் யாது காரணங்களாலோ அவர்கள் இந்த ஆகம மற்றும் ஸம்ப்ரதாய மீறல்களைக் கண்டு கொள்வதில்லை…
யாது காரணங்களாலோ என்று ஆசிரியர் ஏன் கூற வேண்டும்? எல்லோருக்கும் தெரிந்தது தானே. மடாதிபதிகள், ஆசார்ய புருஷர்கள் திருமலைக்கு சென்றால் ப்ரத்யேக மர்யாதை, ப்ரத்யேக மங்களாசாஸனம் ஆகியவற்றில் குறியாக இருப்பவர்கள். புகழ், பணம், இவற்றில் நாட்டமுள்ள வித்வான்கள், ஆகம வல்லுநர்கள் இவர்கள் அனைவரும் சுயநலம் நோக்குள்ளவர்கள். ஆசிரியரின் மற்றொரு ஆலோசனை….

இத்தகைய திருக்கல்யாண உத்ஸவங்களில் பங்கு கொண்டு நேர்முகவர்ணனை அளித்திடும் வித்வான்கள், அங்கு காணப்படுவது அர்ச்சாவதார மூர்த்தி ஒரிஜினல் அல்ல மாற்று (Duplicate) என்ற உண்மையை அறிவித்த பிறகே தங்கள் வர்ணனையைத் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.அப்படி ஒரு same side goal போட துணிவார்களா வித்வான்கள்? ‘குடி குடியை கெடுக்கும்’ போல தமாஷ் போர்டுகள் எந்த பலனும் தராது.

TTD போன்ற நிர்வாஹம் மட்டுமல்ல அதன் பாணியை பின்பற்றும் இதர கோவில் நிர்வாஹங்கள் மக்களிடையே மூடபக்தியை வளர்த்து ஆதாயம் பார்த்து வருகின்றன. இத்தகைய மூடபக்தியை அடையாளம் காட்டி நல்ல எதிர் ப்ரசாரங்கள் நடைபெறவேண்டும். TTD போன்ற ஸ்தாபனங்களில் ஆதாயம் பார்க்கும் சுயநலவாதிகளிடம்  இத்தகைய முயற்சிக்கு ஆதரவை எதிர்பார்க்க முடியாது. இன்றைய சூழ்நிலையில் பத்ரிகைகள் ஒன்றுதான் பலம் வாய்ந்தவை. அவைகளின் துணைகொண்டு பொது ஜனங்களின் அஜ்ஞானத்தை போக்க முயற்சிக்க வேண்டும்..

– ஆதிப்பிரான் ஆன்மிக இதழ் ஆசிரியர் ஸ்ரீனிவாசன்