10ஆம் பத்து

10ஆம் பத்து 3ஆம் திருமொழி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1868

ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம்

சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா. உம்மைத் தொழுகின்றோம்

வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே

கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.1

1869

எம்பி ரானே. என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே

அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான்

நம்பி அனுமா. சுக்கி ரீவ. அங்கத னே.நளனே

கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே 10.3.2

1870

ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக்

கால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல்

நீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று

கோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.3

1871

மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை

புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால்

கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன்

குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே 10.3.4

1872

வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக

இன்று தம்மி னெங்கள் வாணாள் எம்பெரு மான்தமர்காள்

நின்று காணீர் கண்க ளார நீரெமைக் கொல்லாதே

குன்று போல ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.5

1873

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை

அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து

வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,

கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே 10.3.6

1874

மாற்ற மாவ தித்த னையே வம்மின் அரக்கருளீர்

சீற்றம் _ம்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே

ஆற்றல் சான்ற தொல்பி றப்பில் அனுமனை வாழ்கவென்று

கூற்ற மன்னார் காண ஆடீர் குழமணி தூரமே 10.3.7

1875

கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்

துவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே

தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன்

குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே 10.3.8

1876

ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார்

ஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்

சூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின்

கூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே 10.3.9

1877

வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து அன்றரக்கர்

குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை

கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை

ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே 10.3.10

error: Content is protected !!