9ஆம் பத்து

9ஆம் பத்து 10ஆம் திருமொழி

1838

எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு நாயகன், ஏத் தடியவர்

தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,

பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி,

செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. (2) 9.10.1

1839

எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள்

செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,

மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து, மாருதம்

தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே. 9.10.2

1840

வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை, எமக்கு

ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான்,

துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை,

தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே. 9.10.3

1841

ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து, உடம்பிலோர்

கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான்,

நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு, நன்னறுந்

தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே. 9.10.4

1842

வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன்ம துமலர்த்

தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான்,

மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி, வானுயர்

திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே. 9.10.5

1843

காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன்

ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,

நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென,

தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே. 9.10.6

1844

கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை

நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,

குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து,இளந்

தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே. 9.10.7

1845

பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து, அடியேனை யாளுகந்து

ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான்,

தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி

தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே. 9.10.8

1846

கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை,

மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர்,

மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்,

தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே. 9.10.9

1847

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணிபொழில்

சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை,

நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த,இந்

நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே. (2) 9.10.10

 

 

error: Content is protected !!