3 ஆம் பத்து

3ஆம் பத்து 4ஆம் திருமொழி

1178

ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி

உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும்

தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த

தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி

அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்

அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,

தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. (2) 3.4.1

 

1179

நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை

நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி, நக்கன்

ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை

ஒளிமலர்ச்கே வடியணைவீர், உழுசே யோடச்

சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத்

தொல்குருகு சினையென்னச் சூழ்ந்தி யங்க,

தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.2

 

1180

வையணைந்த _திக்கோட்டு வராக மொன்றாய்

மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து,

நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோ ள்

நேர்ந்தவந்தா ளணைகிற்பீர், நெய்த லோடு

மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்

மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்,

செய்யணைந்து களைகளையா தேறும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.3

 

1181

பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்

பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்

நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட

நின்மலந்தா ளணைகிற்பீர், நீல மாலைத்

தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே

தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்,

செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.4

 

1182

தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு

திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து,

வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட

விண்ணவர்க்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்

அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட

அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,

செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.5

 

1183

பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப்

படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை,

வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த

விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்

துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்

துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால்,

திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.6

 

1184

பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்

புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,

செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன்

திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த் தெள்கி

மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி

வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி

தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.7

 

1185

பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய்

பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,

மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்

மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ

நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ

நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்

தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.8

 

1186

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்

பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,

கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்

கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்

துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்

தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி,

சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்

சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.9

 

1187

செங்கமலத் தயனனைய மறையோர் காழிச்

சீராம விண்ணகரென் செங்கண் மாலை

அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன்

அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்

கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்

கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்

தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே. (2) 3.4.10

error: Content is protected !!