தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

1 min read

3963

சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்

 

கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே

தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்

பேர்ந்தது வண்மை இராமனுச எம் பெருந்தகையே. 71

3964

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே

உய்த்தனன் தூய மறைநெறி தன்னை,என் றுன்னியுள்ளம்

நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே

வைத்தனன் என்னை இராமா னுசன்மிக்க வண்மைசெய்தே. 72

3965

வண்மையி னாலுந்தன் மாதக வாலும் மதிபுரையும்

தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத் தான்சரணாய்

உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்

திண்மையல் லாலெனக் கில்லை, மற் றோர்நிலை தேர்ந்திடிலே. 73

3966

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்

கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனையவண்மை

ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்

சேரா தவரைச் சிதைப்பது அப் போதொரு சிந்தைசெய்தே. 74

3967

செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும் திருவரங்கர்

கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே

மெய்த்தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின்புகழே

மொய்த்தலைக் கும்வந்து இராமா னுச.என்னை முற்றுநின்றே. 75

3968

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்

உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்

என்றனக் கும்அது,இராமா னுச இவை யீந்தருளே. (2) 76

3969

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப்

பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும்

ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்

காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே? 77

3970

கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய

வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்

பொருத்தப் படாது, எம் இராமனுச மற்றோர் பொய்ப்பொருளே. 78

3971

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே

மெய்மைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை

உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே

ஐயப் படாநிற்பர் வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே. 79

3972

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப

வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,,அவர்க்கே

எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்

சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே. 80